தொழில் நிமித்தம் சவுதி அரேபியாவில் வசித்து வந்த இலங்கை பிரஜையான சிவராஜா அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் மிகவும் மந்த கதியிலேயே உள்ளன. உண்மையில் அந்நாட்டு அரசாங்கத்தின் தீர்மானத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சரை விட ஜனாதிபதி அல்லது பிரதமர் நேரடியாகத் தலையிடுவதே பொறுத்தமானது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் சிவராஜா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பு வழங்குமாறு சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்திடம், கொழும்பிலுள்ள சவுதி தூதரகத்தின் ஊடாக கடிதம் மூலம் தான் நேரடியாகக் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
சிவராஜா அனோஜன் விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னெடுப்புக்கள் குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உண்மையில் இந்த விவாகரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அல்லது பிரதமர் ஹரிணி அமரசூரியவாவது நேரடியாகத் தலையிட வேண்டும். மாறாக பிரதி வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டால் எந்தவொரு பலனையும் எதிர்பார்க்க முடியாது. சவுதி நாட்டின் சட்டங்கள் குறித்த அறிவின்றி குறித்த இளைஞன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டமை தவறாக இருக்கலாம். எவ்வாறிருப்பினும் அவர் மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது பணிவான கோரிக்கையாகும்.
இந்த விடயம் தொடர்பில் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் ஐக்கிய மக்கள் சக்தி அவதானம் செலுத்தியிருக்கின்றது. அதற்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் நான் சிவராஜா அனோஜனுக்கான பொது மன்னிப்பை கோரி, கொழும்பிலுள்ள சவுதி தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு மன்னரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கவுள்ளேன். இவ்வாரம் குறித்த கடிதம் சவுதி தூதுவரிடம் கையளிக்கப்படும் என்றார்.