செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 9 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 9 | மகாலிங்கம் பத்மநாபன்

கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 9 | மகாலிங்கம் பத்மநாபன்கனவுகள், கற்பனைகள் கடந்தாலும் நிகழ்வுகள், நினைவுகள் என்றும் இனிக்கும்! | பகுதி 9 | மகாலிங்கம் பத்மநாபன்

5 minutes read

வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….

 

எங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களை, இப்பொழுது நினைத்துப் பார்க்கும் போதும் மனம் நெகிழ்கின்றது. அவர்கள் பாடசாலை நேரத்தில் மாத்திரம் ஆசிரியர்கள் அல்ல. இருப்பதினாலு மணி நேரமும் ஆசிரியர்களே. இனிவரும் காலத்தில் அவர்களைப் போல காண்பது அரிது. ஓரளவிற்காவது அவர்களைப் போல கடமையாற்ற விருப்பம் கொண்டிருந்தேன்.

அதனால் மாணவர் மன்றத்தினை பொறுப்பெடுக்கும் படி முதலாவது அதிபர் கேட்டவுடன் முழு மனத்துடன் சம்மதித்தேன். அந்த அதிபர், மிகவும் சிறந்த நிர்வாகி என்ற படியால், புதிதாக வருபவன், ஏதாவது புதிதாய் செய்வான் என்றே எதிர்பார்த்திருப்பார்.

நான் வைத்தீஸ்வராவில் பெற்ற அனுபவங்களின் பயனால், பழைய பாணியில் அதுவரை நடைபெற்று வந்த மாணவர் மன்ற நிகழ்ச்சிகளில், சில புதிய விடயங்களைச் சேர்த்ததினால், மாணவர் மன்றம் புது மெருகு பெற்றது. அதிபரும் மகிழ்ச்சியுற்றார்.

street-play-in-tamilnadu-21-watermarked

ஆண்டு தோறும் தேவாலயங்களில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த திருவிழாக்களில் தவறாது நாட்டுக் கூத்துக்கள் இடம்பெறும். மட்டக்களப்பைப் போன்றே மன்னாரும் நாட்டுக் கூத்துக்கு பேர் போனது. எமது மாணவர்களின் பெற்றோரும், உடன்பிறந்தோரும், உறவினர்களும் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே பயிற்சியில் ஈடுபடுவர். அதனைப் பார்த்துப் பார்த்து எங்கள் பிள்ளைகளும் நன்றாக ஆடுவர். எனவே, ஒவ்வொரு மாணவர் மன்ற நிகழ்வுகளிலும், அவர்களைக் கொண்டு சில பகுதிகளை ஆட வைப்பேன்.

பாடல், நடனம் என்பன வழமை போல இடம்பெறச் செய்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வகுப்பு ரீதியாக, ஒவ்வொரு தலையங்கத்தில் பேச வைத்தேன். வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டேன். சிறு, சிறு நாடகங்களை நடிக்க வைத்தேன். மாணவர்கள் நொடிகள் கூறி, பதில்கள் பெற்றார்கள். ஆக, மாணவர்கள் எப்போது அடுத்த மன்றம் நடக்கும் என்று ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

பாடசாலைக்கு அருகேயிருந்த வீட்டில் மடுத்தீன் என்ற இளைஞன் ஒருவர் இருந்தார். ஓரளவு படித்தவர். தினசரிப் பத்திரிகைகள், வார சஞ்சிகைகள் தொடர்ந்து படிக்கும் வழக்கம் உள்ளவர். தொம்மை மாஸ்டரின் உறவினர். வீடும் அருகருகே. ஒவ்வொரு நாளும்  மாலை வேளை தொம்மை மாஸ்டரின் வீட்டிற்கு வந்துவிடுவார். அவருடன் சேர்ந்து இலக்கியம் பேசுதல் ஒரு சிறந்த பொழுது போக்கு ஆயிற்று.

வெரித்தாஸ் வானொலி கேட்கும் போதும், B.B.C தமிழ்ச் செய்தி கேட்கும் போதும் எங்கள் மூவருடன் ஐயா குடும்பத்தவர்களும், தொம்மை மாஸ்டர் குடும்பத்தினரும், எனது மனைவியும் இணைந்து கொள்வார்கள். அது 1975,76,77 ஆம் ஆண்டு காலங்கள். சூடான செய்திகள் வந்து கொண்டிருந்த காலம்.

புத்தகங்களை வாங்கி வாசிப்பதும், அவற்றை வாசித்து முடிந்ததும் ஏதாவது நூலகத்திற்கு கொடுப்பதும், இன்றுவரை  நான் கடைப்பிடிக்கும் பழக்கமாகும். எங்கள் பாடசாலையில் அப்போது அதிகம் புத்தகங்கள் இருக்கவில்லை. இந்த மடுத்தீன் என்ற இளைஞன், தான் வாசிப்பதுடன் நின்றுவிடாது, தனது வீட்டில் ஒரு சிறிய தனியார் நூலகத்தை நடத்தி, ஊரவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி வந்தார்.

Library at Uduvil Girls' School, Jaffna

எமது மாணவர்களும் மடுத்தீனின் நூலகத்தில், புத்தகங்கள் எடுத்து வாசிப்பதுண்டு. எனவே என்னிடம் சேர்ந்திருந்த ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கி அந்த இளைஞனை ஊக்குவித்தேன். வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும் என்பது அறிஞர் கூற்று. எனவே எமது மாணவர்களுக்கும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவித்தேன்.

எங்கள் பாடசாலையில் றோமன் கத்தோலிக்க சமயத்தினரான மாணவர்களும், ஆசிரியர்களுமே அதிகம். அதனால் ஆண்டு தோறும் ஒளி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

இஸ்லாமிய மாணவர்களும், ஆசிரியர்களும் இரண்டாவது எண்ணிக்கையில் இருந்தனர். அவர்களது நிகழ்ச்சிகள் எதுவும் பாடசாலையில் இடம்பெற்றதாக ஞாபகம் இல்லை. அரசின் ஆணைப்படி படி, அவர்கள் வெள்ளிக்கிழமைகளில், தங்கள் மதக் கடமைகளை(தொழுகை) செய்வதற்காக, அரை நேரத்துடன் விடுவிக்கப்பட்டனர்.

சைவ மாணவர்கள் மூன்றாவது எண்ணிக்கையில் இருந்தனர். ஆசிரியர்கள், ஒருவரோ, இருவரோ இருப்பர். அப்போது அரசு செய்த பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தினால், 1977 ஆம் அண்டு கூடுதலான சைவ ஆசிரியர்கள் வந்து இணைந்து கொண்டனர்.

சைவ சமய பாடத்தை கற்பித்துக் கொண்டிருந்த திரு. கணபதிப்பிள்ளை ஆசிரியர் மாற்றலாகி போனவுடன், சமய பாடத்தைக் கற்பிக்கும் பொறுப்பும் எனக்கே வழங்கப்பட்டது. நவராத்திரி பூஜை, சரஸ்வதி படத்தை வைத்து, மலர்மாலை சூடி, வெள்ளிக்கிழமைகளில் செய்வது போல, தேவாரம், சரஸ்வதி தோத்திரம் பாடுவதுடன் முடிந்து விடும். இப்போது ஆசிரியர்கள் யாவரும், என்னுடன் மிகவும் அன்பாக பழகத் தொடங்கிய காரணத்தால், என்னை நவராத்திரி பூஜையை, சிறப்பாக நடத்தும் படி ஆலோசனை தந்தார்கள்.

Saraswathi_and_Ayudha_pooja_worship

அந்த வருடம், எல்லா ஆசிரியர்களும், மாணவர்களும் ஒத்துழைக்க வாணி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. சக்கரைப் பொங்கல், மோதகம், அவல், சுண்டல் எல்லாப் பிள்ளைகளும் இணைந்து செய்தார்கள். றோமன் கத்தோலிக்க சமய மக்களின் மத நம்பிக்கைகளைப் புரிந்து கொண்டு, பூஜைக்குப் படைக்காது, தனியாக எடுத்து வைத்திருந்த பொங்கல், மோதகம், அவல், சுண்டல், பழங்களை அவர்களுக்கு வழங்கி, எல்லோரும் உண்டு மகிழ்ந்தோம்.

மாலையில் சிறிய அளவில் கலை நிகழ்ச்சிகளையும் நடத்தினோம். எங்கள் பாடசாலையில் அதுவே சிறப்பாக நடத்தப்பட்ட முதலாவது நவராத்திரி விழா ஆகும். மூதூர், ஆலங்கேணி கிராமத்திலிருந்து திரு.நரேந்திரன் என்ற இளைஞன், எங்கள் பாடசாலைக்கு ஆசிரிய நியமனம் பெற்று வரும் வரை, சமய பாடம் என் பொறுப்பிலேயே இருந்தது.

miltons-beach-resort

மன்னாரிலிருந்து ஒவ்வொரு நாளும் பிரயாணம் செய்து பாடசாலைக்கு வரும் போது சிறுவர்கள் குளத்தில் குளிப்பதைக் கண்டு ஆசைப்பட்டிருக்கிறேன். அந்த ஆசை இப்போது நிறைவேறிற்று. தொம்மை மாஸ்டர் வீட்டில், தொடர்ந்து குழாய்க் கிணற்று நீர் பாய்ந்து கொண்டேயிருக்கும். கிழமை நாட்களில் அந்த தொட்டியில் குளித்தாலும், சனி, ஞாயிறுகளில் நானும் மனைவியும் குளத்திற்கு சென்று ஆசை தீரக் குளிப்போம். பின் வந்து, சவர்க்காரம் போட்டு  தொட்டியில் ஒரு முறை கழுவிக் கொள்வோம்.

நான் இந்தப் பாடசாலையில் நியமனம் பெற்று வந்த ஓரிரு வருடங்களில்  தர்ம சங்கடமான ஒரு சம்பவமும் இடம்பெற்றது. இலந்தைமோட்டை கிராமத்தில் வசித்த இஸ்லாமிய மக்கள், தங்களுக்கென்று ஒரு பாடசாலை, எல்லா வகுப்புக்களுடனும் தனியாக வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் முன் வைத்தனர்.

அதைப் பற்றி விசாரணைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சிலிருந்து அதிகாரிகள் வரவிருந்தனர். கருத்துக்களைக் கூறுவதற்கு அதிபருடன், ஒரு றோமன் கத்தோலிக்க ஆசிரியர், ஒரு இஸ்லாமிய ஆசிரியர், இரண்டு சமயமுமற்ற ஒரு பொதுவான ஆசிரியர் என நான்கு பேரின் பெயர்களை அனுப்பும் படி பணித்திருந்தனர். அதிபர் எனது பெயரை அனுப்பி, உமக்கு சரியென்று பட்டதை நீர் சொல்லலாம், என்று எனக்கு சுதந்திரமும் தந்து விட்டார்.

புதிய பாடசாலை அமைந்தால், எங்கள் பாடசாலையின் மாணவர் தொகையில் வீழ்ச்சி ஏற்பட, ஆசியர்களுக்கான இடமும் குறையும். எனவே ஒரு வகையில் எங்கள் பாடசாலைக்கு இழப்பு தான். எங்கள் பாடசாலையில், பிள்ளைகளுக்கிடையே ஒரு போதும் வேற்றுமை காட்டப்பட்டதில்லை. ஆனாலும்,வெள்ளிக்கிழமைகளில் அரை நேரத்துடன் செல்வதால், இஸ்லாமிய பிள்ளைகளுக்கு இழப்பு ஏற்படுவது உண்மை.

அதிகாரிகளும் வந்தனர். அலுவலகத்தில் எல்லோரும் கூடினர். அதிகாரிகள் ஒவ்வொருவராக எங்கள் கருத்துக்களை கூறும்படி கேட்டனர். அதிபர் தன் பொறுப்பின்படி, பாடசாலையில் எந்த வேறுபாடுகளும் காட்டப்படுவதில்லையென்றும், புதிய பாடசாலைக்கான தேவை இல்லை என்றும் தன் கருத்தை, பல புள்ளி விபரங்களுடன் எடுத்துரைத்தார்.

றோமன் கத்தோலிக்க ஆசிரியரும் அதிபரின் கருத்தையே மேலும் வலியுறுத்தினார். இஸ்லாமிய ஆசிரியர், வெள்ளிக்கிழமைகளில் இஸ்லாமிய பிள்ளைகளுக்கு ஏற்படும் கல்வி இழப்பைக் கூறி, மேலும் பல காரணங்களால் இஸ்லாமியப் பிள்ளைகளுக்கு தனியே ஒரு  இடைநிலைப்பாடசாலை தேவை என்றும் கூறினார். என்னுடைய முறை வந்தது. எங்கள் பாடசாலையில் பிள்ளைகளுக்கிடையே வேறுபாடு காட்டப்படுவதில்லை என்பதை விளக்கினேன்.

வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மாணவர்களுக்கு ஏற்படும் கல்வி இழப்பை ஏற்றுக் கொண்டேன். ஆனால் ஆரம்ப வகுப்புகளில் மட்டும் தான் இஸ்லாமியப் பிள்ளைகள் கூடுதலாக உள்ளனரென்றும், அவர்கள் இலந்தைமோட்டையிலிருந்து நடந்து வருவது கஷ்டம் தானெனவும், இடை நிலை வகுப்புக்களில் ஒவ்வொரு வகுப்பிலும் ஒருவர், இருவர் தான் உள்ளனரென்றும், சில வகுப்புக்களில் ஒருவருமில்லையென்பதையும் விளங்கப்படுத்தி, கல்வி அமைச்சு விரும்பினால், இலந்தைமோட்டையில் ஒரு ஆரம்பப் பாடசாலையை அமைக்கலாம் என்றும் கூறினேன்.

மேலும் அவர்களுக்கு இடைநிலைப்பாடசாலை அமைக்கப்பட்டால், மிகவும் குறைந்த தொகையுள்ள மாணவர்களுக்கு கணிதம், விஞ்ஞானம், English, சமூக்கல்வி, தமிழ் பாடங்களுக்கு பல ஆசிரியர்களை வழங்க வேண்டி வரும் என்றும் கூறினேன்.

ஆரம்ப பாடசாலை அமைக்கலாம் என்று நான் கூறியதால், சிலருக்கு மனவருத்தம். இடைநிலைப் பாடசாலை ஆரம்பிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கூறியதால் சிலருக்கு கவலை. ஆனால், இலந்தைமோட்டையில் ஆரம்பப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட பிறகு, இரு பகுதியினருக்கும் ஏற்பட்ட நன்மைகளை கண்டபின் இரு பகுதியினரும், என் மீது கொண்ட கருத்தை மாற்றிக்கொண்டனர்.

புதிய பாடசாலையை ஆரம்பித்த கல்வி அமைச்சு, அவர்களுக்கான புதிய தளபாடங்களையும் வழங்கியது. எங்கள் பாடசாலையில் பிள்ளைகள் குறைந்ததால், தளபாடப் பற்றாக்குறை நீங்கியது.

தங்கள் பாடசாலையில் இரண்டு ஆசிரியர்கள் மட்டும் நியமிக்கப்பட்டு, அவர்கள் ஐந்து வகுப்புக்களைச் சமாளிக்க முடியாமல் திணறியதைக் கண்ட இலந்தைமோட்டை மக்கள், இன்னும் இருவரை நியமித்தால் கூட, இடைநிலை வகுப்பு வரை சமாளிக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள். அது மட்டுமல்ல, இடைநிலை வகுப்புகளுக்கு இலந்தைமோட்டையிலிருந்து வந்த மாணவர்கள், ஆண்பிள்ளைகள்  அரை நாள் விடுமுறை எடுக்காது, ஒரு மணி நேரம் மட்டும் எடுத்து, சைக்கிளில் ஓடிச்சென்று, தொழுகையை முடித்து விட்டு, மீண்டும் வந்து கல்வியைத் தொடர்ந்தனர். நேரசூசி அவர்களை அதிகம் பாதிக்காதிருக்குமாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

 

 

தொடரும்….

 

 

naban  மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.

 

 

முன்னையபகுதிகள் ….

 

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/

http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.