வன்னிப் பிரதேசத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றி பின்னர் அதிபராக கடமையாற்றிய ஓய்வு நிலை அதிபரின் அனுபவத் தொடர்…….
உலகின் ஒவ்வொரு பகுதியிலும், வெவ்வேறு விதமான உணவுப் பழக்க வழக்கங்களும், உபசரிக்கும் முறைகளும் இருக்கும். அதிகமாக கிடைக்கின்ற உணவுகளும் தட்ப, வெப்ப நிலைகளும் காரணமாக அமையும். எது, எப்படி இருந்தாலும், சப்பாணி கொட்டி அமர்ந்து, வாழையிலையில் உணவை வைத்து, குழைத்து குழைத்து சாப்பிடும் சுகம் எதிலும் இல்லை.
மன்னாரில், நாங்கள் வாழ்ந்த பாலைக்குளி கிராமத்தில், மீன், காட்டிறைச்சி, முட்டை, இறைச்சி வத்தல், கருவாடு என்பன தாராளமாக கிடைத்தன. அதனால் அவை உணவில், கூடுதலாக சேர்க்கப்பட்டன. காய்கறி வகைகள் குறைவாகவே சேர்க்கப்பட்டன.

விவசாயம் தான் பிரதானம் என்ற பொழுதும், நெற்பயிர் செய்கையால் இலாபம் கூடுதலாக கிடைத்தபடியால், மரக்கறிச் செய்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. கட்டுக்கரைக் குளத்திலும் மீன் பிடிப்பதால் நன்னீர் மீன்களும் உணவில் சேர்க்கப்பட்டன.
புதுவருடம், தேவாலய திருவிழா, திருமணம் போன்ற விசேடங்களுக்கு, உறவினர்களையும் நண்பர்களையும் விருந்திற்கு அழைத்து, ஆடு அடித்து சாப்பாடு கொடுத்தல், கிராம மக்களின் பழக்கமாகும்.
நான், திருமணம் செய்வதற்கு முன்னரும், திருமணம் செய்த பின்னரும் கலந்துகொண்ட, விருந்துகளைப் பற்றி எழுதலாம் என்று எண்ணுகின்றேன். எனக்கு ஆஸ்மா, ஒவ்வாமை நோய் இருந்தபடியால், என்னை விருந்திற்கு அழைப்பவர்கள் ஆடு மட்டுமன்றி, கோழியும் அடிப்பார்கள்.
சக ஆசிரியரான மடுத்தீன் மாஸ்டர் வீட்டில் ஒரு கல்யாணம். அதிபரையும் ஆசிரியர்களையும், கல்யாணத்திற்கு அடுத்ததாக வந்த சனிக்கிழமை விருந்திற்கு அழைத்திருந்தார். நாங்கள் பொதுவான பரிசுப் பொருளுடன், அதிபர் தலைமையில் சென்றிருந்தோம். சம்சுதீன் ஆசிரியர் மட்டும் கடைசி நேரத்தில் தவிர்த்து விட்டார்.
சம்சுதீன் ஆசிரியர் முஸ்லீமாக இருந்ததால், அவர்கள் ஒரு முஸ்லீம் நபரைக் கொண்டே ஆடு, கோழி இரண்டையும் அடித்திருந்தார்கள். எங்கே, முறைப்படி வெட்டாத இறைச்சியைச் சாப்பிட நேர்ந்துவிடுமோ? என்று பயந்தே தான் வரவில்லை என்று, சம்சுதீன் பின்னர் என்னிடம் தனியே கூறினார். வீண் பயத்தால்,ஒரு நல்ல சாப்பாட்டை இழந்தார்.
மடுத்தீன் மாஸ்டர், மத குருமார்களின் ஒத்துழைப்புடன், அநுராதபுரம் சென்று படித்ததனால், மேலத்தேச முறைப்படி மேசையிலே உணவு பரிமாறப்பட்டிருந்தது. நாங்கள் விரும்பியபடி எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டோம். மேலத்தேச வழமையின் படி, சாப்பாட்டு அறைக்கு அருகே இருந்த ஒரு சிறிய அறையில், மதுபான வகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்களில், விசேஷ தினங்களில் மட்டும் மது அருந்துபவர்கள், சென்று உணவின் முன் சற்று தாக சாந்தியும் செய்து வந்தனர்.
சம்சுதீன் ஆசிரியர் ஒரு முறை, தங்களின் நோன்பின் போது, இரவுச் சாப்பாட்டிற்கு என்னை அழைத்திருந்தார். அவரது ஊர் எருக்கலம்பிட்டி. அழகிய, சனநெருக்கம் நிறைந்த ஒரு கிராமம். அங்கு வசிப்பவர்கள் யாவரும் முஸ்லீம் மக்கள். முன்பின் போயறியாத இடம். எனவே மாலை வேளையிலேயே அவர் வீட்டிற்கு சென்று விட்டேன்.
மனைவியை சமைக்க விட்டுவிட்டு, சம்சுதீன் என்னை தனது சிறிய, அழகிய தோட்டத்திற்கு கூட்டிச் சென்று காட்டினார். அவர்களது வீட்டினருகே இருந்த பள்ளிவாசலுக்கு சென்று, முன்பக்க விறந்தையிலிருந்து கதைத்தோம். வந்த நண்பர்களுக்கெல்லாம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
நாங்கள் வீட்டிற்கு சென்றபோது, அவரது மனைவியார் உணவு வகைகளை மேசையில் வைத்துக்கொண்டிருந்தார். பிற ஆண்களுக்கு முன் வராத கலாச்சாரத்தைக் கொண்ட அப்பெண்மணி, தலையில் முட்டாக்கு போட்டபடி, வாசலில் நின்றபடி, சொல்லச் சொல்ல சம்சுதீன் உணவைப் பரிமாறினார். முஸ்லீம்களின் வீட்டு உணவை உண்ணும் சந்தர்ப்பம் கிடைத்தது.

பின்னர் சம்சுதீனை ஒரு வார இறுதியில், பரந்தனுக்கு அழைத்துச் சென்ற நான், எங்கள் தாயாரினால் சமைக்கப்பட்ட உணவைச் சுவைக்கும் வாய்ப்பை அளித்தேன். கிளிநொச்சி, பரந்தன், இரணைமடு எங்கும் சுற்றிக் காட்டி, அவரை அனுப்பி வைத்தேன்.
திருமணம் செய்த பின், முதல் முதலில் மடுத்தீன் என்ற அயல் வீட்டு இளைஞனின் திருமணத்தில் தான் விருந்துண்ணச் சென்றோம். மாப்பிள்ளை பாலைக்குளி. பெண்பிள்ளை நறுவிலிக்குளம். எனவே இரண்டாம் நாள் மாப்பிள்ளை வீட்டு விருந்தில் கலந்து கொண்டோம்.
அது எங்களூர் விருந்து போலவே இருந்தது. வரிசையாக பந்தி இருத்தி பரிமாறினார்கள். என்ன ஒரு வித்தியாசம். இங்கு இறைச்சி வகைகள், மீன் வகைகள் உணவில் உண்டு. நன்கு சுவைத்து உண்டு மகிழ்ந்தோம். எங்களூர் திருமணம் என்றால், சைவ உணவு சாப்பிட்டிருப்போம்.
அடுத்து நாங்கள் சென்ற, திரு.கிறகொரி ஐயா வீட்டுத் திருமணத்தில் தான் நாங்கள் வழமையை அறியாது, பெண் வீட்டாரைச் சங்கடப்படுத்தி விட்டோம். கிராமத்தில் திருமணத்தன்று, உறவு முறையானவர்கள் மட்டும் தான் போவார்கள். உறவினர்களுக்கான பந்தி வைக்கப்படும்.
மறு நாள், ஊரவர்களுக்கும் நண்பர்களுக்கும் விசேடமாக பந்தி வைக்கப்படும். நாங்களும் அடுத்த நாள் தான் போயிருக்க வேண்டும். பெண்வீட்டாருக்கு எங்களை எங்கே இருத்தி சாப்பாடு தருவது என்பது பிரச்சனையாக போய்விட்டது.
தனியாக மேசை போட்டு, அறையில் வைத்து எங்களிருவருக்கும் உணவு பரிமாற ஒழுங்குகள் செய்தார்கள். அதனை அறிந்த என் மனைவி, என்னிடம் ஓடி வந்து சொன்னா. பெண் வீட்டாரிடம் “நாங்கள், உங்களை உறவினர்களாக எண்ணியே இன்று வந்தோம்.” என்று கூறி ஏனையவர்களுடன் பந்தியிலே அமர்ந்து விட்டோம். அதன் பிறகு பதற்றம் நீங்கி மகிழ்ச்சியுடன் உணவைப் பரிமாறினார்கள். நாங்களும் உறவினர் தான் என்று கூறியது, அவர்களின் மனதை நெகிழச் செய்து விட்டது.
அணிஸ் மரைக்கார் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றது என்றும் எங்கள் நினைவுகளை விட்டு நீங்காது. உண்மையான நட்பைப் புரிந்து கொண்ட இன்னொரு சந்தர்ப்பமாகவும் அமைந்தது. ஒரு வார இறுதி நாளுக்கு, இரவு விருந்துக்கு வருமாறு அணிஸ் அழைத்திருந்தார்.
நாங்கள், சனிக்கிழமை ஆறுதலாக எழும்பி, கோப்பி குடித்துவிட்டு, மகளுக்கும் பால் பருக்கி விட்டு, குளத்திற்கு சென்று நன்கு நீராடி விட்டு வந்து குழாய்க் கிணற்று தொட்டியில் மேல்கழுவிக் கொண்டோம்.
விறிசிற், எங்கள் மகளுக்கு தங்கள் வீட்டுச் சாப்பாட்டை தீர்த்திக் கொண்டிருந்தாள். இரவு விருந்து என்பதால், காலை உணவையே மத்தியானத்திற்கும் வைத்துக் கொண்டோம். நாங்கள் வாழ்வது, நகரை விட்டு தொலைவில் உள்ள கிராமம். நகர்ச் செய்திகள் இரவு அல்லது அடுத்த நாள் தான் தெரியும்.

அன்று மன்னார் நகரில் கிறீஸ்தவ மக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் கலவரம். கடைகள் யாவும் பூட்டப்பட்டு விட்டன. பொலீஸ் நிலையம், மன்னார் நகரிலேயே இருந்தபடியால் கலவரம் உடனேயே அடக்கப்பட்டு விட்டது. எனினும் இங்கும் அங்கும் சிறு சிறு சலசலப்புகள். அதனால் நாங்கள் அன்று வரமாட்டோமென்று அணிஸ் கருதி விட்டார். சந்தை, கடைகள் யாவும் பூட்டப்பட்டு விட்டன. நாங்களும் வழமை போல உயிலங்குளம் சென்று பஸ் எடுத்திருந்தால், எங்களுக்கும் தகவல் தெரிந்திருக்கும்.
நாங்கள் நாநாட்டனிலிருந்து பாலைக்குளி ஊடாக மன்னார் செல்லும் பஸ்சில் ஏறிவிட்டோம். பஸ்சில் பிரயாணிகள் மிகவும் குறைவாக இருந்தார்கள். மன்னாரில் நாங்கள் இறங்கிய போது, நகரம் வெறிச்சோடிப் போய் இருந்தது. ஏதோ பிரச்சினை என்று புரிந்தது. என்னவென்று விளங்கவில்லை. நாங்கள் மகளையும் தூக்கிக்கொண்டு முஸ்லீம் வீதியில் விறு விறுவென்று நடந்தோம்.
வழியில் இருந்த வீடுகள் யாவற்றின் கதவுகளும் மூடிக்கிடந்தன. ஒரு சில வீடுகளில் தலைகள் மட்டும் எட்டிப்பார்த்தன. அணிஸ் வீட்டை அடைந்தோம். கதவு பூட்டியிருந்தது. என்ன இந்த மனுஷன், விருந்துக்கு அழைத்துவிட்டு கதவைச்சாத்தி வைத்திருக்கின்றாரே என்று எண்ணிக் கொண்டு, அணிஸின் பெயர் சொல்லி அழைத்தேன். யன்னலால் எட்டிப்பார்த்து, எங்களைக் கண்டதும் அணிஸ் கதவைத் திறந்து எங்களை வரவேற்றார். அதன் பிறகு அவரும் அவர் மனைவியும் சொன்ன பிறகு தான் கலவரம் பற்றி எங்களுக்கு தெரிய வந்தது.
அவர் மனைவி எங்களுடன் கதைத்துக் கொண்டிருக்க, அணிஸ் பின்பக்கம் வேலியால் சென்று, உணவு தயாரிக்க பண்டங்களுடனும், அந்த அந்தர நேரத்திலும் எங்கேயோ பிடித்த கோழியுடனும் வந்து சேர்ந்தார்.
அவர் எங்களுடன் கதைத்துக் கொண்டிருக்க, அவர் மனைவி, இடையிடையே எங்களுடனும் கதைத்துக் கொண்டு, சமயலையும் செய்து விட்டார். அணிஸ்சிற்கு ஒரு தங்கை மட்டுமே. தாய் தந்தையர் இல்லை. அணிஸின் மனைவிக்கும் ஆசிரியரான ஒரு தமையன் மட்டுமே. தாய் தந்தையர் இல்லை. மாற்றுத் திருமணம் செய்து கொண்டார்கள். அணிஸின் மனைவி திருமணம் முடித்ததும் இங்கு வந்து வாழ, அணிஸின் தங்கை திருமணம் முடித்ததும் கணவர் வீட்டிற்கு வாழச் சென்று விட்டா.
இங்கு ஒரு விடயம் குறிப்பிட வேண்டும். நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களால் இப்போது நிலைமை எப்படியுள்ளது என்று தெரியாது. அன்று, மன்னார் முஸ்லீம்களின் கலாச்சாரத்திற்கும் எருக்கலம்பிட்டி மக்களின் கலாச்சாரத்திற்குமிடையே சிறிது வேறுபாடு காணப்பட்டது. மத நம்பிக்கைகளைப் பொறுத்தவரை எல்லோரும் ஒன்று தான். நகரில் வாழ்பவர்களுக்கும் கிராமத்தில் வாழ்பவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம். சமைத்து முடிந்ததும், அந்த பதற்ற நேரத்திலும் அந்த சுவையான உணவை ரசித்து சாப்பிட்டோம்.
நாங்கள் வெளிக்கிடும் நேரம் வந்தது. அணிஸ், எங்களை இருக்க விட்டு விட்டு எங்கோ சென்றார். சிறிது நேரத்தில் ஒரு கார் வந்து வீட்டின் முன் நின்றது. அணிஸ் காரில் இருந்து இறங்கினார். “நீங்கள் இரவு தங்கிவிட்டு காலை போகலாம். ஆனால் நம்பமுடியாது. நாளை என்ன நடக்குமோ தெரியாது. இப்போது சற்று அமைதியாக இருக்கும் போது போய் விடுவது தான் நல்லது. பஸ்சில் போக வேண்டாம். காரில் புகையிரத நிலையம் சென்று, ரெயினில் செல்வது தான் பாதுகாப்பு. நீங்கள் மணற்குளத்தில் இறங்கினால் வீடும் கிட்ட” என்று சொன்னார்.
நாங்கள் நன்றி கூறி, விடை பெற்று காரின் பின் இருக்கையில் ஏறிக் கொண்டோம். அணிஸ் சொன்னார் “உங்களை தனியே அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்க என்னால் முடியாது. உங்களைப் பாதுகாப்பாக ரெயினில் ஏற்றி அனுப்பி விட்டுத் தான் வருவேன்” என்று கூறி காரின் முன் இருக்கையில் றைவருக்கு அருகே ஏறி இருந்து கொண்டார்.
சொல்லியபடி, எங்களுக்கு ரிக்கெற் வாங்கித்தந்து, ரெயினில் ஏறி இருக்கவிட்டு, ரெயின் வெளிக்கிட்ட பின்னர் தான் அவர் திரும்பிப் போனார். மன்னாரில் கிறீஸ்தவ மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்ட போது, பரந்தனைச் சேர்ந்த சைவர்களான நாங்கள், அவர்களுக்கிடையே இருந்து பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்தோம். அங்கு தொம்மை மாஸ்டரும் அக்காவும் எங்களுக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலையில் இருந்தார்கள். அந்த ஆபத்தான வேளையில், எங்களைத் தனியே போக விடாது, துணையாக வந்த அணிஸ்சின் நட்பு எவ்வளவு உயர்ந்தது.
இந்த இடத்தில் திருமணமான புதிதில், சம்சுதீன் மாஸ்டர் எருக்கலம்பிட்டிக்கு, விருந்திற்கு கூப்பிட்டதும், நாங்கள் போய் வந்ததும் ஞாபகம் வருகின்றது. என் மனைவி, ஒரு இஸ்லாமியரின் வீடு சென்றதும், அங்கே பிரியாணி சாப்பிட்டதும் முதல் முறையாகும். இந்த முறை சம்சுதீன் ஆசிரியரின் மனைவி, என் மனைவியுடன் நன்கு பழகினார். சாப்பிடும் போது என் மனைவி பரிமாற, அவர் என்னென்ன இருக்கு என்று சொல்லிக் கொண்டு இருந்தா. கதவை விட்டு சற்று உள்ளே வந்து கதைத்தார்.
இலந்தைமோட்டையில், புதிய பாடசாலை ஆரம்ப விழா சிறப்பாக நடைபெற்றது. எங்கள் பாடசாலை ஆசிரியர்களுக்கும் அழைப்பு வந்தது. எல்லோருமாக என்னை அனுப்பி வைத்தார்கள். அங்கு அன்று மாட்டிறைச்சியுடன் பெரிய விருந்து. ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு உணவு வீடுகளுக்கு சென்றது.

சாப்பிடும் வேளை வந்தது. பெரிய தட்டம் போல இருந்த பாத்திரத்தில் உணவை எடுத்து, வட்டமாக ஐந்து ஆறு பேர் சுற்றுயிருந்து, ஒரே பாத்திரத்தில் சாப்பிட்டார்கள். இஸ்லாம் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் சமயம் அல்லவா? எனக்கு பழக்கமில்லை என்பதை உணர்ந்த சம்சுதீன் மாஸ்டர், ஒரு சிறிய தட்டத்தில் உணவை எடுத்து வந்தார். சம்சுதீன், நான், இன்னொரு ஆசிரியர் என மூவரும் ஒரே தட்டில் சாப்பிட்டோம்.
எங்களூரில் தைமாத்த்தில் அறுவடை செய்ய முன்னர், புதிர் நெல் எடுத்து, இடித்து அரிசியாக்கி, புதிர்ச்சோறு சமைப்போம். நிறைய மரக்கறிகளும் பழவகைகளும் சேர்ப்போம். வயலுக்குள் கொண்டு சென்று படைப்போம். ஒரு பந்தமும் ஏற்றி வைத்து, கற்பூரமும் ஏற்றி வருவோம்.
சற்று நேரத்தின் பின், கற்பூரமும் பந்தமும் அணைந்த பின்னர் தண்ணீர் தெளித்து விட்டு எடுத்து வருவோம். படையலை வீட்டுத்தலைவர் குழைத்து , எல்லோருக்கும் ஒவ்வொரு குழையல் கொடுப்பார். அதன் சுவையை வாயினால் சொல்ல முடியாது. வயலைப் பாதுகாத்த தேவதைகளை மகிழ்விக்கும் பொருட்டு புதிர்ச்சோறு காய்ச்ச வேண்டும் என்பது ஐதிகம்.
பாலைக்குளியிலும் அவ்வாறே புதிர்ச்சோறு செய்வார்கள். ஒரேயொரு வித்தியாசம். பாலைக்குளியில் மீன்கள் நிறைய சமைத்துச் சேர்க்கப்படும். மன்னாரில் அந்த புதிர்ச்சோற்றை மனுவல் அம்மாவின் கையால் வாங்கி சாப்பிட்ட சுவை இப்போதும் நாவில் இருக்கின்றது.
தொடரும்….
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வுநிலை அதிபர், குமரபுரம், பரந்தன்.
முன்னையபகுதிகள் ….
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-1-09-15-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-part-2-09-22-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-3-09-29-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-4-10-06-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-5-10-03-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-6-10-20-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-7-10-27-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-8-11-03-16/
http://www.vanakkamlondon.com/m-pathmanaban-teaching-experience-part-9-11-10-16/