இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயற்பட்டு வரும் மைனா மகிளா தொண்டு நிறுவனம் மூலம் சமூக சேவையாற்ற பிரிட்டன் இளவரசி மேகன் மேர்க்கில் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பு பெண்கள் சுயமாக தொழிற்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு மேகன் மேர்க்கில் இந்தியா சென்றிருந்த போது மைனா தொண்டு நிறுவனப் பணிகளால் ஈர்க்கப்பட்டார். அந்த நிறுவனத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகக் கூறினார்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹரிக்கும் மேகன் மேர்க்கிலுக்கும் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.
இதில் மைனா மகிளா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுஹானி ஜலோடா உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், லண்டனில் நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியிலும் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
திருமணம் முடிந்ததும் மணமகளை சென்று பார்த்த மைனா மகிளா தொண்டு நிறுவனத்தினர், மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதன்போது அவர்களிடம், இந்தியாவில் சமூக சேவையாற்ற உள்ளதாக பிரிட்டன் இளவரசி மேகன் மேர்க்கில் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரசு அங்கீகரித்துள்ள ஏழு இந்திய தொண்டு நிறுவனங்களில் மைனா மகிளா தொண்டு நிறுவனமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
