தமிழகத்தின் ஆளும் அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளது.
அது தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகளுக்கு இடையிலான பிளவாகவே இருக்கக்கூடும்.
அ.தி.மு.க. ஆரம்பிக்கப்பட்ட காலம்முதலே அவ்வப்போது அந்தக் கட்சிக்குள் பல பிளவுகள், வெளியேற்றங்கள், புதிய கட்சி உருவாக்கம் என்பன இடம்பெற்றுள்ளன.
இறுதியாக ஜெயலலிதா மறைவின்போது அரச நிர்வாகக் கடமைகளை கவனிப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே சசிகலா- டி.டி.வி. தினகரன் தரப்பினால் ஓ.பன்னீர்செல்வம் அகற்றப்பட்டு, புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார்.
அப்போது அ.தி.மு.கவுக்குள் ஒரு பிளவு ஏற்பட்டது. எனினும் பின்னர் எடப்பாடியுடன், ஓ.பன்னீர்செல்வம் இணைந்துகொண்டதுடன், துணைமுதல்வராகவும் நியமிக்கப்பட்டார்.
அதேவேளை டி.டி.வி தினகரன் தனக்கு ஆதரவான 18 எம்.எல்.ஏக்களுடன் கட்சியிலிருந்து வெளியேறியதுடன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து செயற்பட்டுவருகின்றார்.
தொடரும் முரண்பாடுகள்
முதல்வர் எடப்பாடி மற்றும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ். (ஓ.பன்னீர்செல்வம்) ஆகிய இருவரும் ஒற்றுமையுடன் இருப்பதுபோலவும், ஒன்றுபட்டு செயற்படுவதுபோலவும் வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் இருவருக்குமிடையில் பலத்த முரண்பாடுகள் இருந்துவந்தன, இன்றும் அந்த நிலைமை தொடர்கிறது.
பெயரளவிலேயே தாம் துணைமுதலமைச்சராக இருப்பதாகவும், தனக்கு அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படாததுடன், தமது நெருங்கிய ஆதரவாளர்களுக்கு பதவிகள் எதுவும் வழங்காமல் ஓரங்கட்டப்பட்டு வருவதாகவும் வெளிப்படையாகவே பல சந்தர்ப்பங்களில் ஓ.பி.எஸ். தெரிவித்து வந்துள்ளார்.
குறிப்பாக, சொல்வதென்றால், அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் நிர்வாகிகள் இடையே ஒற்றுமை ஏற்படவில்லை.
பன்னீர்செல்வம் அணி – பழனிச்சாமி அணி என்பது தொடர்ந்து இருந்து வந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னர் ஆட்சியிலும் , கட்சியிலும் முக்கிய முடிவுகளை முதல்வர் எடப்பாடியும், அவரது ஆதரவாளர்களான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருமே எடுத்தனர்.
கொங்கு(கோவை) மண்டலத்தில் கட்சிக்கு செல்வாக்கு இருந்தாலும்கூட, எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அதிகம் உள்ளதாலும் அவர்கள் கூறுவதை ஏனைய அமைச்சர்கள் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் தோல்வி
ஆனால், லோக்சபா தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. முதல்வரின் சொந்த தொகுதியான இடைப்பாடியிலேயே அ.தி.மு.க. அதிக வாக்குகளைப் பெறவில்லை.
ஆனால், தேனி லோக்சபா தொகுதியில் பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்றார். பன்னீர்செல்வத்தின் தொகுதியான போடியில் அ.தி.மு.க. அதிக வாக்குகளைப் பெற்றது.
ஆனால், அவரது சொந்த ஊரான பெரியகுளம், அ.தி.மு.க.வின் பாரம்பரிய தொகுதியான ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிபெறவில்லை.
இதையடுத்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என்று ஏனைய அமைச்சர்களும் கட்சியினரும் வலியுறுத்த ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவியை வழங்குவதற்கு பா.ஜ.க. தலைமை முன்வந்தது.
ஆனால், ராஜ்யசபா எம்.பி.யான வைத்திலிங்கத்துக்கே அமைச்சர் பதவி வழங்கப்படவேண்டும் என்பதை மறைமுகமாக தெரிவித்து, அதற்கு எடப்பாடி தரப்பு முட்டுக்கட்டை போட்டு விட்டது.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையிலான விரிசல் அதிகமானது. இதைத் தொடர்ந்தே கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பழனிச்சாமி இறங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இரட்டைத் தலைமையால் பிரச்சினை
அதேநேரத்தில் , கட்சியில் “இரட்டைத் தலைமை“ இருப்பதால் விரைவாகவும் உறுதியாகவும் முடிவு எடுக்கமுடிவதில்லை.
சுயநலமற்ற ஒருவரை தலைமை பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை.
ஆளுமை திறனுடைய தலைவர் வேண்டும். ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்லவேண்டும்’ என்றெல்லாம் சில எம்.எல்ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.
எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பா
இவ்வாறான ஒரு நிலையில்தான் மதுரை வடக்கு எம்.எல்.ஏ.வான ராஜன் செல்லப்பாவும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வாக ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் வெளிப்படையாகவே அ.தி.மு.க.வில் ஒரே தலைமை இருக்கவேண்டும் என வலியுறுத்தி குரல் எழுப்பினர்.
ஒருங்கிணைப்பாளர் பதவி
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய பொதுச்செயலாளராக சசிகலா தெரிவு செய்யப்பட்டார். அவர் சிறை சென்றதும், மீண்டும் பொதுக்குழு கூடியது. பொதுச் செயலாளர் பதவியிலிருந்து, சசிகலா நீக்கப்பட்டார். மேலும், பொதுச்செயலாளர் பதவியே நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
ஒருங்கிணைப்பாளராக துணைமுதல்வர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
ஆனால், எடப்பாடி முதல்வராக இருப்பதால், ஆட்சியில் மட்டுமின்றி, கட்சியிலும் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கினார்.
கட்சி, ஆட்சி இரண்டிலும், பன்னீர்செல்வத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதை தவிர்த்தார். இதன் காரணமாக, இருவருக்குமிடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
தேர்தல் தோல்வி யாரால்?
அண்மையில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்து தோல்வி குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது, ‘வேட்பாளர்களை நீங்கள்தான் தெரிவுசெய்தீர்கள், எனவே நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்’ என, எதிர்க்கேள்வி கேட்டு, வாயடைக்கச் செய்துள்ளனர்.
அங்கு ஒவ்வொருவரும், தோல்விக்கு காரணமானவர்கள் எனக்கூறி, தங்களுக்கு எதிரானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் முதல்வரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதுவும், கட்சியில் பூசலை அதிகரித்துள்ளது.
ஓ.பி.எஸ். தீர்மானம்
இந்நிலையில், பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்கவும், துணை முதல்வர் பதவியை துறக்கவும், ஓ.பி.எஸ். (பன்னீர்செல்வம்) தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல், கட்சி, ஆட்சி இரண்டையும், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, எடப்பாடி விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ளதாக தெரியவருகிறது.
இவ்வாறானதொரு நிலையில், கட்சியின் தலைமை பதவியை கைப்பற்றுவதற்கு, முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கிடையே ஏற்பட்டுள்ள கடும் போட்டி, கட்சியில் பிளவை ஏற்படுத்திவிடக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே, அவ்வாறானதொரு பிளவு ஏற்படாமல் கட்சியை பாதுகாப்பதற்கும், ஒற்றுமையுடன் செயல்பட வலியுறுத்தியும் சமரசத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் சில சிரேஷ்ட நிர்வாகிகள், தலைவர்கள் முயற்சிசெய்து வருகின்றனர்.-
அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்பதை வலியுறுத்திவருகிறார் ராஜன் செல்லப்பா.
ஏற்கனவே மதுரை மாநகர மேயராக இருந்த இவர், அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்த தனது மகனின் தோல்வியை சரிக்கட்டும் விதமாக, அதே பதவியை குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வழங்கவேண்டும் என்று அ.தி.மு.க. தலைமையிடம் கேட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பரங்குன்றத்தில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் ராஜன் செல்லப்பா.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உள்ளாட்சி தேர்தல் குறிப்பாக கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். ஒருவேளை இது உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டமாக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
மறைமுக செயற்பாடு
ஒற்றை தலைமை தேவை என்று ராஜன் செல்லப்பா அறிவித்ததையடுத்து அந்த ஒற்றை தலைமை யாராக இருக்கமுடியும் என்பதில்தான் போட்டியும், சிக்கலும் எழுந்துள்ளது.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு எடப்பாடி பழனிசாமி முழுமூச்சாக செயற்பட்டுவருகிறார் என்பதே உண்மை.
எடப்பாடியின் தீவிர ஆதரவாளர் செல்லப்பா என்பதாலும், எனவே அவர் ஓ.பி.எஸ்.க்கு எதிராகத்தான் பேசுகிறார் என்பதும் புரிந்து கொள்ளப்பட்டது.
அதனால்தான் ஒவ்வொருவரும் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளில் மறைமுகமாக இறங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
பலம் யாருக்கு? யார் அந்த ஒற்றை தலைமை என்பது, இவர்கள் பக்கம் உள்ள எம்.எல்.ஏ.க்களின் பலத்தை வைத்துதான் தீர்மானிக்கப்படும் என்பதே நிலைமை.. ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலரின் ஆதரவு இருந்தாலும், அதிகபட்ச பலத்தை தன்னுடன் வைத்திருக்க முதல்வர் எடப்பாடி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
ஜெயலலிதாவே வலிமைமிக்க ஆளுமை
ஜெயலலிதா எப்படி முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய இரண்டு பதவிகளையும் தன்னிடம் வைத்திருந்தாரோ, அதுபோலவே தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இவை கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் திட்டமாம்- அதற்கான முயற்சியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளாராம்.
பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமியே வகிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இது சம்பந்தமாக எம்.எல்.ஏ.க்களை தமது பக்கம் இழுப்பதற்கான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் அ.தி.மு.க.வுக்குள் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஜெயலலிதா விசுவாசிகள் செயல்படும் அதேவேளை, பிளவு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகவே காணப்படுகிறது.
ஆனால், அ.தி.மு.க. பிளவுபடுவதை தடுத்து நிறுத்தி அனைவரையும் ஒரே அணிக்குள் கொண்டுவந்து, அக்கட்சியை தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கான முயற்சியில் மத்திய பா.ஜ.க. யும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
எனவே, பா.ஜ.க.வை மீறி எதனையும் செய்யமுடியாத ஒரு நிலையும் காணப்படுவதை மறுக்கமுடியாது.
நன்றி – நல்ல தம்பி நெடுஞ்செழியன்
