‘ஈ’ படத்திற்கு பிறகு ஜீவா-நயன்தாரா இணைந்து நடித்து வரும் புதிய படம் ‘திருநாள்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முரட்டுத்தனமான கிராமத்து இளைஞனாக ஜீவா நடிக்கிறார். பி.எஸ்.ராம்நாத் என்பவர் இப்படத்தை இயக்கி வருகிறார்.
நயன்தாரா, நடிகையாக அறிமுகமான ‘ஐயா’ படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் நகரத்து பெண்ணாகவும், மாடர்ன் பெண்ணாகவும் நடித்திருந்தார். தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முழுக்க முழுக்க கிராமத்து பெண்ணாகவே நடித்து வருகிறார் நயன்தாரா. படம் முழுக்க பாவடை, தாவணியில் நயன்தாரா வலம் வருவாராம்.
காமெடியுடன், காதல், ஆக்ஷன் கலந்து இப்படத்தை எடுத்து வருகிறார்கள். கும்பகோணத்தில் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து, தினமும் ஆயிரம் துணை நடிகர்கள் நடிக்க, படத்தின் முக்கிய காட்சிகளை விறுவிறுப்பாக படமாக்கி வருகின்றனர். இப்படத்திற்கு ஸ்ரீ இசையமைக்கிறார். மகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கோதண்டபாணி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக எம்.செந்தில்குமார் தயாரிக்கிறார்.