பொன்னியின் செல்வன் | திரைவிமர்சனம்

கதைக்களம்

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம்.

விமர்சனம்

பொன்னியின் செல்வன்

சோழப் பேரரசின் பேரரசரான சுந்தர சோழனுக்கு (பிரகாஷ் ராஜ்) ஆதித்த கரிகாலன் (விக்ரம்), அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி), குந்தவை (திரிஷா) என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். தொடர்ச்சியாக போரில் வெற்றி பெற்று வரும் ஆதித்த கரிகாலன், அவரின் தந்தையின் ராஜ்ஜியத்தில் பிரச்சனை வர விருப்பதை உணர்ந்து கொண்டு இந்த செய்தியை அவருடைய தந்தைக்கு தெரியப்படுத்த வல்லவராயன் வந்திய தேவனிடம் (கார்த்தி) பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அவரும் பல வீரர்களை கடந்து யாருக்கும் தெரியாமல் இந்த செய்தியை சுந்தர சோழனுக்கு தெரியப்படுத்த முயற்சிக்கிறார். அச்சமயம் நந்தினியை (ஐஸ்வர்யா ராய்) சந்திக்கிறார். வந்தியதேவன் வந்திருக்கும் நோக்கத்தை புரிந்துக் கொண்ட நந்தினி இதனை பெரிய பழுகுவேட்டையாரிடம் தெரியப்படுத்துகிறார். இதற்கிடையில் சோழ படையில் இருக்கும் பெரிய பழுகுவேட்டையார் (சரத்குமார்), சின்ன பழுகுவேட்டையார் (பார்த்திபன்) மற்றும் சிற்றரசர்கள் தலைமையில் மதுராந்தகணை (ரகுமான்) அரசராக்க முயற்சிப்பதை வந்திய தேவன் கண்டுபிடிக்கிறார்.

இதனை குந்தவையிடம் சொல்ல, அருண்மொழி வர்மனை இங்கு அழைத்துவர வந்திய தேவனிடம் பொறுப்பு ஒப்படைக்கிறார். இதனிடையில் பெரிய பழுகுவேட்டையாரும் தந்திரமாக அருண்மொழியை வர வழைக்க ஒரு படையை ஏற்பாடு செய்கிறார்.

இறுதியில் அருண்மொழி வர்மனை வந்திய தேவன் பத்திரமாக அழைத்து வந்தாரா? இந்த சூழ்ச்சியில் இருந்து சோழ வீரர்கள் எப்படி வெளியே வருகிறார்கள்? பெரிய பழுகுவேட்டையார் போடும் திட்டம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் அவருக்கே உரித்தான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார். வல்லவராயன் வந்திய தேவனாக வரும் கார்த்தி தனித்துவம் பெறுகிறார். அவர் பேசும் வசனங்கள் உடல்மொழி நடனம் என அனைத்திலும் பாராட்டுக்களை பெறுகிறார். நந்தினியாக தோன்றும் ஐஸ்வர்யா ராய் அழகில் மிஞ்சும் அளவிற்கு தென்படுகிறார். அவருடைய தந்திரமான கதாப்பாத்திரத்தின் நடிப்பு சிறப்பு.

அருண்மொழி வர்மனாக நடித்திருக்கும் ஜெயம் ரவி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் பாதியை ஜெயம் ரவி நடிப்பின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்கிறார். குந்தவையாக வரும் திரிஷா அழகிலும் நடிப்பிலும் அனைவரின் பாராட்டுக்களையும் பெறுகிறார்.

பெரிய மற்றும் சின்ன பழுகுவேட்டையார்களாக வரும் சரத்குமார் மற்றும் பார்த்திபன் அவர்களுடைய முதிற்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சுந்தர சோழன் பிரகாஷ் ராஜ் சில இடங்களிலே தோன்றினாலும் அவருடைய பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். மேலும் படத்தில் தோன்றும் பல கதாப்பாத்திரங்கள் அவர்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்துள்ளனர். யானை, குதிரைகள் என சிறப்பாக பயிற்சி கொடுத்து படத்தில் அழுத்தமாக பதிவு செய்துள்ள்னர்.

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் திரைக்கதை அமைத்து சுவாரஸியப்படுத்தியுள்ளார். பெரிய நாவலை படத்திற்கு ஏற்றாற்போல் இருக்கக்கூடிய நேரத்தில் சொல்லி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதாப்பாத்திரத் தேர்வு சிறப்பாக அமைந்துள்ளது. சில இடங்களில் தொய்வு ஏற்படுவது போன்று தோன்றினாலும் சரித்திரக்கதையை இந்த அளவிற்கு ரசிக்கும்படி சொல்லியிருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெறுகிறது.

ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். காட்சியமைப்பின் மூலம் அனைவரையும் அந்த காலக்கட்டத்திற்கே கொண்டு செல்கிறது. படம் தொடங்கி சிறிது நேரத்தில் குதிரையில் அமர்ந்து கொண்டு விக்ரம் வசனம் பேசும் காட்சியை 360 டிகிரியில் காட்சிப்படுத்தியுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்தின் நீரோட்டத்தில் பயணிக்க வைக்கிறது. பல இடங்களில் இவரின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. நந்தினி மற்றும் குந்தவை கதாப்பாத்திரங்களுக்கு வரும் பின்னணி இசை அந்த கதாப்பாத்திரத்தின் தன்மையை இன்னும் சிறப்பாக கவனிக்கவைக்கிறது. படத்தின் கலை அந்த காலக்கட்டத்திற்கு பார்வையாளர்களை பயணிக்க வைக்கிறது. தோட்டா தரணியின் கலைத்தன்மை அனைவரின் பாராட்டுக்களையும் பெறுகிறது.

மொத்தத்தில் பொன்னியின் செல்வன் – காவியம்.

ஆசிரியர்