அவதார்: தி வே ஒஃப் வோட்டர் | திரை விமர்சனம்

தயாரிப்பு: லைட்ஸ்டோர்ம் என்டர்டெய்ன்மென்ட் & டி.எஸ்.ஜி என்டர்டெய்ன்மென்ட்

நடிகர்கள்: ஸாம் வொர்த்திங்டன், ஜோ சால்ட்னா, ஸ்டீபன் லெங், கதே வின்ஸ்லெட் மற்றும் பலர்.

இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன்

மதிப்பீடு: 3.5/5

முதல் பாகத்தில் பாண்டோராவை ஆக்கிரமித்து தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாக கொண்ட வில்லன் குவாட்ரிச், இந்த பாகத்தில் தனது மரணத்துக்கு காரணமாக இருந்த ஓமாட்டிகாயா எனப்படும் நாவி இன மக்களின் தலைவனான ஜேக் சல்லி மற்றும் அவனது குடும்பத்தை கொல்ல முயற்சி செய்கிறார். 

இதை அறிந்துகொண்ட ஜேக், தனது குடும்பத்தினருடன் மெட்கைனா எனப்படும் மக்கள் வாழும் கடல் பகுதிக்குச் சென்று அடைக்கலமாகிறான். 

அங்கேயும் அவனை துரத்திக்கொண்டு வரும் குவாட்ரிச், ஜேக்கை அழிப்பதற்காக பிரத்தியேக படையை உருவாக்குகிறான். இதிலிருந்து ஜேக்கும், அவனது குடும்பத்தினரும், அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மெட்கேனா இன மக்களும் தப்பித்தார்களா, இல்லையா? இதுதான் இரண்டாம் பாகத்தின் கதை.

‘அவதார்: தி வே ஒஃப் வோட்டர்’ படத்தின் நிஜ நாயகர் க்ராபிக்ஸ் காட்சிகள் தான். 

ஹொலிவுட் திரைப்படங்கள் என்றால் க்ராபிக்ஸ் காட்சிகள் அதிகமிருக்கும். இது பார்வையாளர்களின் கண்களுக்கு வியப்பை அளிக்கும் விருந்தாகவும் இருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் க்ராபிக்ஸ் கலைஞர்கள் கடினமாக உழைத்திருக்கிறார்கள்.

முதல் பாகத்தில் வனங்களின் வனப்பை வசீகரிக்கும் வகையில் வெளிப்படுத்திய இயக்குநர், இந்த இரண்டாம் பாகத்தில் கடலும் கடல் சார்ந்த பகுதியும், ஆழ்கடல் மற்றும் ஆழ்கடலில் வாழும் வினோத உயிரினங்களையும் காட்சிப்படுத்தி பார்வையாளர்களின் கண்களை வியப்பில் விரிய வைத்திருக்கிறார். 

குறிப்பாக, கடலில் மனிதர்கள் இயந்திர துப்பாக்கிகளுடனும், அம்பு, வேல், கொம்பு ஆகியவற்றுடன் நாவி இன மக்களும் சண்டையிடும் காட்சிகள் அற்புதம்.

காட்சிகள் பிரமிப்பு, பிரம்மாண்டம் என்றாலும், திரைக்கதை மெதுவாக பயணிப்பதால் பல இடங்களில் தொய்வும் சோர்வும் ஏற்படுகிறது. 

முதல் பாகத்தில் ஜேக் சல்லியை தீரமிக்க ஆமி அதிகாரியாக காட்டிய இயக்குநர், இரண்டாம் பாகத்தில் குழந்தைகள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் பாசமுள்ள தந்தையாகவும், தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக ஆதிக்க சக்திகளிடம் சமாதான போக்கை கடைபிடிக்கும் சாதாரண மனிதராகவும் காண்பித்துள்ளார்.

ஓமாட்டிகாயா இன மக்களின் வீர பெண்மணியாக சித்திரிக்கப்பட்ட நைட்ரி, இந்தப் பாகத்தில் உச்சகட்ட காட்சியில் மட்டும் தீரமுடன் போராடுவதாக கதை அமைக்கப்பட்டிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 

ஆனால், நைட்ரியை போலவே கடல் பகுதியை வாழும் மக்களின் தலைவியாக ரோனலை காட்டியிருக்கிறார். அதிலும், நிறைமாதமாக கருவுற்றிருக்கும் இவர் இறுதிக் காட்சியில் கணவருடன் போருக்குச் செல்லும் தருணங்கள் பார்வையாளர்களின் உணர்வை எளிதில் தூண்டுகின்றன. சபாஷ்!

முதல் பாகத்தில் அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரமாக வருகை தந்து, ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற வைத்தியர் கிரேஸின் கதாபாத்திரம், இந்த பாகத்தில் எங்கும் இடம்பெறவில்லை. ஏன் என்பது இயக்குநருக்கு மட்டுமே வெளிச்சம். 

வில்லனாக ஸ்டீபன் லெங் தன் நேர்த்தியான நடிப்பை வழங்கி, ரசிகர்களை மிரட்டி இருக்கிறார்.

அனைத்து வயதிலும் அவதார் கதாபாத்திரத்தை படைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதையும் இயக்குநர் கவர்ந்திருக்கிறார். இருப்பினும், 45 நிமிட நேரம் கொண்ட உச்சகட்ட காட்சி, ஒரு பிரிவு பார்வையாளர்களை சோர்வடையச் செய்கிறது. 

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், கப்பல் தொடர்பான அதிகமான விபரங்களை நுட்பமாக திரையில் கொண்டு வருவதில் நிபுணத்துவம் பெற்றிருப்பதால், டைட்டானிக் படத்தை போன்று இந்தப் படத்திலும் உச்சகட்ட காட்சியில் கப்பல் மூழ்கும் காட்சிகள் விவரிக்கப்பட்டிருப்பதால், சிலருக்கு டைட்டானிக்கின் விஷுவல்கள் நினைவில் வந்து மறைகின்றன. இருப்பினும், கடல்வாழ் பகுதியில் வசிக்கும் நாவி இன மக்களுக்கான கதாபாத்திர தோற்றம், குறிப்பாக, அவர்கள் ஆழ்கடலில் நீந்துவதற்கு ஏற்ற வகையில் கைகளை வடிவமைத்திருப்பது ரசிகர்களிடம் பாராட்டை பெற்றிருக்கிறது. 

துல்குன் எனும் விலங்குகளின் வடிவமைப்பும் காட்சிகளும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

அவதார் 2 – பிரமிப்பை தரும் விஷுவல் மெஜிக்!

ஆசிரியர்