அகமதாபாத்தில் கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி நடந்த துயரமான ஏர் இந்தியா விபத்து குறித்த தனது முதற்கட்ட 15 பக்க விசாரணை அறிக்கையை, இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்டுள்ளது.
இதில் விமானம் புறப்பட்ட சில நொடிகளில் இரண்டு என்ஜின்களும் நடுவானில் நின்று போனதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் துண்டிக்கப்பட்டதே அதற்கான காரணம் என்பதும் உறுதியாகியுள்ளது.
கப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் விவாதித்த கொக்பிட் குரல் பதிவுகள் பதிவாகியுள்ளதாக அறிக்கை வெளிப்படுத்துகிறது.
AAIB இன் கண்டுபிடிப்புகளின்படி, விமானம் கிளம்பிய ஒரு நொடியிலேயே, இன்ஜினுக்குப் போக வேண்டிய எரிபொருள் ‘RUN’-ல் இருந்து ‘CUTOFF’-ற்குச் சென்றுள்ளது.
விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல் பதிவுகளில், ஒரு விமானி, “நீங்கள் ஏன் எரிபொருளை துண்டித்தீர்கள்?” என்று கேட்பது கேட்கிறது. அதற்கு மற்றவர், “நான் அவ்வாறு செய்யவில்லை” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட விமானிகள், RAT அமைப்பை செயல்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர். முதல் என்ஜினை செயலுக்கு கொண்டுவர முயன்று, லேசாக வெற்றி கண்ட போதும், இரண்டாவது என்ஜின் செயல்படவில்லை.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பி ஜே மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் மோதியதில் 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள் உயிரிழந்தனர்.
ஒரே ஒரு பயணி மட்டுமே உயிர் பிழைத்தார். இது பல தசாப்தங்களில் இந்தியாவின் மிக மோசமான விமானப் பேரழிவாக மாறியது.
இதற்கிடையே, இரண்டு இயந்திரங்களும் விரிவான பரிசோதனைக்காக மீட்கப்பட்டுள்ளதாகவும், இடிபாடுகள் உள்ள இடம் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் AAIB உறுதிப்படுத்தியது.
அமெரிக்காவின் முதல் எச்சரிக்கை
இதேவேளை, போயிங் 737 விமானங்களில் எஞ்சினுக்கு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் பட்டன் குறித்து அமெரிக்க அரசின் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அமைப்பு, 2018 ஆம் ஆண்டில் வெளியிட்ட எச்சரிக்கை கவனம் பெற்று வருகிறது.
அதாவது 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வெளியிடப்பட்ட அந்த அறிக்கைப்படி, சில போயிங் 737 விமானங்களின் எரிபொருள் கட்டுப்பாட்டு பட்டன்களில் ஒரு தவறான பூட்டுதல் அம்சம் இருக்கிறது. இது பாதுகாப்பற்றது என்று கூறப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் விபத்தை ஏற்படுத்திய போயிங் 737-8 விமானத்திலும் இதே பட்டனே பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.