இங்கிலாந்தில் இருந்து கடந்த ஓராண்டில் 40,000 கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டு, சீனாவுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு சர்வதேச கும்பலை பொலிஸார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.
பெருநகர பொலிஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, இங்கிலாந்தில் கையடக்கத் தொலைபேசிகள் திருட்டுகளுக்கு எதிராக இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாகும்.
18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2,000 இற்கும் மேற்பட்ட திருடப்பட்ட சாதனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பல்கேரிய நாட்டவர் ஆவர். ஏனையவர்களில் அனைவரும் பெண்களாவர்.
இலண்டனில் திருடப்படும் கையடக்கத் தொலைபேசிகளில் 40 சதவீதம் வரையான ஏற்றுமதிக்கு இந்தக் கும்பலே காரணமாக இருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர்.
விசாரணை ஆரம்பமானது எப்படி?
கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுயைன்று ஒருவர் தனது திருடப்பட்ட ஐபோனை மின்னணு முறையில் கண்டறிந்து, அது ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கிடங்கில் இருந்ததை உறுதிப்படுத்தினார். அங்கிருந்த பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன், மீட்கப்பட்ட ஒரு பெட்டியில் அந்த ஐபோன் மற்றும் 894 கையடக்கத் தொலைபேசிகள் இருப்பதை பொலிஸார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன.
தலைநகரில் திருட்டு அதிகரிப்பு
இங்கிலாந்தில் திருடப்படும் அனைத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் நான்கில் மூன்று பங்கு இலண்டன் நகரிலேயே திருடப்பட்டுள்ளன.
இலண்டனில் கையடக்கத் தொலைபேசித் திருட்டு எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இது 2020ஆம் ஆண்டு 28,609 ஆக இருந்த அதேவேளை, கடந்த 2024ஆம் ஆண்டு 80,588 ஆக உயர்ந்துள்ளது.
“மேற்படி சுற்றிவளைப்பு நடவடிக்கை மூலம், தெரு மட்ட திருடர்கள் முதல் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான திருடப்பட்ட சாதனங்களை ஏற்றுமதி செய்யும் சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் வரை ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள குற்றவியல் வலைப்பின்னல்களை நாங்கள் தகர்த்துள்ளோம்” என்று பெருநகர பொலிஸின் தலைமை அதிகாரி ஆண்ட்ரூ ஃபெதர்ஸ்டோன் (Commander Andrew Featherstone) கூறினார்.