செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு இங்கிலாந்தில் 2 லட்சம் பேருக்கு வேலை இழப்பு அபாயம்: பொருளாதார மந்தநிலை குறித்து CBI எச்சரிக்கை

இங்கிலாந்தில் 2 லட்சம் பேருக்கு வேலை இழப்பு அபாயம்: பொருளாதார மந்தநிலை குறித்து CBI எச்சரிக்கை

1 minutes read

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்ற நிலை மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் காரணமாக, இங்கிலாந்து பொருளாதாரம் மேலும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளதாக Confederation of British Industry (CBI) அமைப்பு எச்சரித்துள்ளது. இதன் விளைவாக, இந்த ஆண்டில் சுமார் 2 இலட்சம் இங்கிலாந்து பிரஜைகள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் என புதிய பொருளாதார கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக உயரக்கூடும் என CBI வெளியிட்டுள்ள அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இது சுமார் 20 இலட்சம் மக்களை பாதிக்கும் அளவிலான எண்ணிக்கையாகும். தற்போது தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்படி, வேலையின்மை விகிதம் 5 சதவீதமாக காணப்படுவதுடன், சுமார் 18 இலட்சம் மக்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.

நிறுவனங்களின் அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் நுகர்வோர் செலவினக் குறைவு குறித்த அச்சங்களை எதிர்கொள்வதால், வணிக முதலீடுகள் குறைந்து வருவதாக CBI பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன்தாக்கம் தொழிலாளர் சந்தையிலும் பிரதிபலித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனினும், 2027ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் சற்றுக் குறைந்து 5.3 சதவீதமாக இருக்கும் என CBI கணித்துள்ளது. அதேவேளை, பொருளாதார வளர்ச்சி குறித்த தனது முந்தைய கணிப்புகளையும் அமைப்பு திருத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டில் 1.4 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்த இங்கிலாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), இந்த ஆண்டில் 1.1 சதவீதமாகவும், 2027ஆம் ஆண்டில் 0.9 சதவீதமாகவும் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CBIயின் தலைமைப் பொருளாதார நிபுணர் லூயிஸ் ஹெல்லம், உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் சவால்கள் இங்கிலாந்தின் வளர்ச்சியை மேலும் பாதித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்த்தக மோதல்களும், தற்போது தீவிரமடைந்துள்ள மத்திய கிழக்கு நெருக்கடியும் பொருளாதார முன்னேற்றத்தை மந்தப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளவில் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவதும், விநியோகச் சங்கிலிகளில் ஏற்பட்டுள்ள தடைகளும், வணிகங்கள் மற்றும் நுகர்வோரிடையே நிலவும் நிச்சயமற்ற சூழலும் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக மாறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகளின் தாக்கம் நிறுவனங்களையும் குடும்பங்களையும் நேரடியாகப் பாதிக்கும் என்பதால், இந்த ஆண்டின் இறுதிக்குள் பணவீக்கம் 4 சதவீதமாக உயரக்கூடும் என CBI கணித்துள்ளது. தற்போது இங்கிலாந்தின் நுகர்வோர் விலைக் குறியீட்டு பணவீக்கம் ஏப்ரல் மாத நிலவரப்படி 2.8 சதவீதமாக உள்ளது.

அதேநேரம், Bank of England தனது வட்டி விகிதத்தை தற்போதைய 3.75 சதவீத அளவிலேயே 2026 ஆம் ஆண்டின் மீதமுள்ள காலத்திலும் தொடரும் என CBI எதிர்பார்ப்புத் தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சி மந்தமடைதல், வேலைவாய்ப்பு குறைவு மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை இங்கிலாந்து பொருளாதாரத்திற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய சவால்களாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.