செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் திருகோணமலை இராச்சியம் விக்கிரகங்கள் கல்வெட்டுகள் – ஒரு பார்வை | பானு சுதாஹரன்

திருகோணமலை இராச்சியம் விக்கிரகங்கள் கல்வெட்டுகள் – ஒரு பார்வை | பானு சுதாஹரன்

3 minutes read

வரலாறு என்ற ‘வரையறைகளுக்கப்பாற்பட்ட’ சொத்தினை ஆய்ந்தறியும் வேட்கையும், வெறியும், வினைத்திறன் மிக்க வரலாற்றுத் தேடலும் கொண்டு, சமூகத்தின் பலதரப்பட்ட வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள் ஒருங்கு சேர்ந்த அரங்கும்; அங்கு ஒருவருக்கொருவர் சளைக்காத  கருத்துத்தெறிப்புகளும், கண்ணியமான பதிலுரைப்புகளும் என கலாநிதி கனகசபாபதி சரவணபவன் அவர்களின் ‘திருகோணமலை இராச்சியம் விக்கிரகங்கள் கல்வெட்டுக்கள்’ நூல் கடந்த 25.04.2026 சனிக்கிழமையன்று “எண்ணம் போல் வாழ்க்கை இலக்கிய மன்ற”த்தின் ஒழுங்கமைப்பில் திருமலையில் விமரிசையாக வெளியீடு கண்டது.

ஆலயம் தொழுவது என்பது ஒரு மதக் ‘கடமை’ மட்டுமே என்ற  ஒடுங்கிய நம் பார்வையில், மணியொலியும் மந்திரமும், திரைச்சேலை விலகியதும் பஞ்சாலாத்தி சுடர்தெரிய “அரோகரா!” கோஷமிட்டு, இடித்து விலக்கி  விபூதி சந்தனம், இடையிடையே அவசரமாய் அலைபேசி புகைப்படங்கள் காணொளிகள், அப்போதே  வலைத்தளத்தில் பதிவேற்றி பதிந்து விட்டால், ‘மோட்சம் பெற்றதொரு’ மாபெரும் திருப்தி கொள்ளும் நம் வழிபாட்டு  வகையறாக்களை (விக்கிரக  வழிபாடுகளை), முற்றிலுமாய் பரிமாணம் மாற்றியது கனகசபாபதி சரவணபவன் அவர்களின் ‘விக்கிரகங்கள் கல்வெட்டுக’ளின் விறுவிறுப்பான வாசிப்பு.

“விக்கிரகம் என்பது வெறும் கல்லின் கலை வடிவமல்ல; அது ஒரு காலத்தின் பரிணாமம்; ஒரு சமுதாயத்தின் தத்துவம்; ஒரு உள்ளத்தின் எதிரொலி; நேரடி தெய்விக உணர்வின் செயல்முறை வடிவம்; குறியீட்டியல் (Symbolism) மற்றும் தத்துவம் (Archetypes) என்பவற்றின் வெளிப்பாடுகள்” என வாசகரின் பார்வையில் விக்கிரகங்கள் பற்றி ஒரு புதிய, நேர்த்தியான, முழுமையான தெளிவினை சிந்தை செறிய சொல்லிக்கொடுத்துள்ளார் ஆசிரியர்.  “சிற்பிகளின் சிந்தனைச் சுதந்திரம்” மற்றும் “அந்தந்த சமூகத்தின் ஆன்மிக பரிணாமத்திற்கான சாட்சியங்”களாக காட்சிகள் விரிகின்ற ஆன்மிகப் பயணத்தின் விந்தை மிகு விரிந்த கதவுகள் ஆசிரியரால் வாசகர்க்காகத் திறக்கப்பட்டன.

“ஒரு கற்சிலை சிற்பமாக (Icon)  மாறுவதற்கு தத்துவம், மெய்ஞ்ஞானம், கலை ஆகிய மூன்றும் இணைய வேண்டும்” என்ற மூலக்கருத்தினை நூல் தெளிவாகப்புலப்படுதுகிறது. ஆசிரியரின் ‘பார்வை’, குறித்த மதம் என்ற எல்லைகளுக்குள் குறுகவில்லை,  விக்கிரகங்கள் மீதான விரிந்த ஆய்வின் அவரது ‘கூரிய நோக்கிலிருந்து’ ‘புத்தர்சிலை’யின் அடையாளங்களாக, ‘ஞான மகத்துவ’மும், ‘புலனடக்க’மும் கூட விலகி விட்டிருக்கவில்லை.

தென்னிந்திய விக்கிரகங்களின் பரிணாம வளர்ச்சி முதல் சிற்ப இலக்கணங்கள், முத்திரைகள், வார்ப்பு முறை, உலோக உருப்பாடுகள், கால மதிப்பீடு பற்றிய சோதனை மற்றும் கணிப்பீட்டு தகவல்கள் என இன்னோரன்ன தரவுகள் நுண்ணிய ஆய்வுகளின் அறிக்கைகளாக தொகுத்தளிக்கப்படுள்ளன. ஆசிரியர் சரவணபவன் அவர்களின் படைப்புகளிலுள்ள ஒரு சிறப்பம்சம், ஒரு தகவல், ஆய்வறிக்கை, செய்தி கூறப்படும் போது, இயல்பாகவே வாசகரின் மனதில் அடுத்ததாயுதிக்கும் அவை பற்றிய மேலதிக வினாக்களுக்குரிய அச்சொட்டான விடைகளையும் உசாவிப்பெற்று, விரிந்த விளக்கங்கங்களாக கூடவே அடுத்து வரும் பந்திகளில் பதிவிட்டிருப்பார்.

வாசிப்பில் வாசகரின்  சிந்தனைச்சிதறல்களுக்கு இடமளிக்காமல் விரைந்து தொடரும் விசாலமான வாசிப்பைப் பெறுகின்ற  விறுவிறுப்பின் அனுபவத்தை முழுமையாய்ப்பெற முடிகிறது.  இது ஆசிரியரின் பத்தொன்பதாவது (ஆய்வு) வெளியீடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விக்கிரக்கத்தின் முன், பக்தன் தனது நிலையில் ஈகோ (Ego) கடந்து; ‘நான் யார்?” என்பதைத் தெளிந்து, சக்தியோடு ஒன்றிணைகின்ற (Ego – less State) அனுபவம் Self-transcendence.

“கோணேஸ்வரர் சிற்பங்களில் முக்கியமாக காணப்படுவது, உடலின் உயிரோட்டம். சிற்பம் என்பது வெறும் காட்சியல்ல, அது நடையை, பார்வையை, நிமிர்வைக்கூட வெளிக்கொணரும் ஆன்மிகம் கலந்த கலைமொழி…..” என்ற ஆசிரியரின் வரிகளை என் வாசிப்பு அடைந்த வேளை, கடந்தவாரம் மாதுமையம்மாள் சமேத கோணேஸ்வரர், தெப்பமேறி மாண்புமிகு மாமலையடிவார  பெருங்கடலலைகளில் நித்திலமாய் நிமிர்ந்தசைந்து நகர்ந்து முன்னேறி பக்தர் முன் ‘வீசிய பிரசன்னம்’, என் உள்ளினுள் ஏற்படுத்திய ஆன்மிக அதிர்வுகளை மீள்நிறுத்தின.

“ஒரு சிற்பி முதலில் கல்லை எடுப்பதில்லை; நினைவுகளைத் தான் தேர்ந்தெடுக்கிறான். ஒரு சிற்பத்தினுள் வைக்கப்படும் ஒவ்வொரு கோணமும், ஒரு உள்ளார்ந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகும்” என்ற கலாநிதி சரவணபவன் அவர்களின் முன்வைப்பினை அது பரிபூரணமாக உள்ளுணர்த்தியது.

“The highest and most inclusive level of consciousness is self-transcendence.” (உணர்வின் மிக உயர்ந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய நிலை என்பது சுயத்தைக் கடந்த நிலையாகும்) – Abraham Maslow

“Stone inscriptions preserve what memory and manuscripts often lose.” (நினைவுகளும் கையெழுத்துப்பிரதிகளும் இழக்கும் செய்திகளை கல்வெட்டுகள் காத்துநிற்கின்றன) – E. Hultzsch (Epigraphist of South India).

“கல்வெட்டுகள் ‘பேசாத தொகுப்புகளை’ சொல்கின்றன” என ஆரம்பித்து, காலத்தின் சாட்சியங்களாக அவை, நம் முன்னோரின் சிந்தனை, சமூக அமைப்புகளை புரிய உதவுவதோடு, மற்றொரு பார்வையில், மொழியின் அழகு, பரிணாம வளர்ச்சி, மொழி வரலாறு, கலாசாரம் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆய்வு செய்யும் ஒரு திறவினையை வழங்குகின்றது” எனக்கூறும் ஆசிரியரின் ஆழ்பரிமாண ஆய்வில், கலிங்க ராயன் கல்வெட்டு, கந்தளாய் சோழ இலங்கேஸ்வரன் கல்வெட்டு, முதலாம் ராஜராஜசோழன் மேய்க்கீர்த்தி (கி. பி. 985-1014) கல்வெட்டு என்றவாறு மொத்தமாக 39 கல்வெட்டுகள் காட்சிகளுடன் (ஆதாரங்கள்), துல்லியமான ஆய்வுகளாக  தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. அறிய அறிய ஆவல் பெருகும் பதிவுகள் இவை.

கவனத்தையீர்த்த கல்வெட்டுகள் பலவாயினும், ‘வெல்கம் விகாரை கல்வெட்டுக’ளில் ராஜராஜப் பெரும்பள்ளி கல்வெட்டு (11 – 13 ம் நூற்றாண்டு) (1929-34 காலப்பகுதியில்) தொல்பொருள் திணைக்களம் கண்டெடுத்து தற்போது வரை பாதுகாக்கப்பட்டு, ஆய்ந்தறியப்பெற்ற  சுவாரஷ்யங்களாக:

“சோழர்களின் அரசாணையும், பெளத்த தர்மத்தின் அமைதியும் ஒரே கதிராகக் கண்ணில் பட்ட இடமிது………….. இது பௌத்தம் தொடங்கி, இந்துத்துவம் வரை, மதநிலை மாற்றங்களின், ஒத்திசைவுகளின் ஓர் அழுத்தமான அடையாளம்”.

காலத்துக்குக்காலம் பேரரசுகளின் படையெடுப்புகளாலும், ஆட்சிமாற்றங்களாலும், அதன் பின்னரான இனமுரண்பாடுகளாலும், இணக்கப்பாடற்ற மேலாதிக்க அதிகாரசக்திகளாலும்  இடையின்றி ரத்தம் சிந்திய வரலாறு நீளும், பல்லின, மத, கலாசாரங்களைக்கொண்ட ஒரு நாட்டின், தோண்டத்தோண்டத் தொகையாகும் வரலாற்று அதிசயங்களாகத் தொடர்கின்ற சுவைமிக்க நூல் இது. தமிழ், பிராமி, வட்டெழுத்து என்பன பெருமளவு கல்வெட்டுகளில் செதுக்கப்பட்டுள்ள மொழிகள். மேலும் தொல் விக்கிரகங்களினூடாக அவற்றுக்கான காலகட்டங்கள், பரிணாம வளர்ச்சி என்பவற்றில் தத்துவக்குறியீடுகள், கலாசாரச்சான்றுகள் என, ‘பலதள ஆய்வுக’ளில்; மேலும்  X-Rays, Isotope Analysis என்றவாறான அறிவியல் ஆய்வுகளும் மிகத்துல்லியமாக தெளிவு படுத்தப்பட்டுள்ளன.

“மண்ணின் இடுக்குகளில் உமிழ்ந்த உயிர்கள் பேசும் வரலாறு; இது தத்தம் குரலால் கையெழுத்திட முடியாத மக்களின் ஓர் அழைப்பு” என, தன் ஆய்வின் ஆழங்களுக்குள் பயணிக்க வாசகர்களை அழைத்துள்ள கலாநிதி  கனகசபாபதி சரவணபவன் அவர்களுக்கு: ஐயா! தங்கள் ‘பார்வை’ பெறும் நம் மண்ணின் இடுக்குகள், தங்கள் ‘படைப்பு’ உள்ளவரை, பார்கேட்கும் பெருங்குரலால், காலமுள்ளவரை கையெழுத்திடும்!

நன்றி – வீரகேசரி வார இதழ்: 03.05.2026

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.