April 2, 2023 3:54 am

துப்பாக்கியும் கணையாழியும் : புலம்பெயர் திரைப்பட வரலாற்றில் ஒரு பாய்ச்சல் [இலண்டனில் நாளைய பிரிமியர் காட்சியை முன்னிட்டு மீள் தரவேற்றம் செய்யப்படுகின்றது]துப்பாக்கியும் கணையாழியும் : புலம்பெயர் திரைப்பட வரலாற்றில் ஒரு பாய்ச்சல் [இலண்டனில் நாளைய பிரிமியர் காட்சியை முன்னிட்டு மீள் தரவேற்றம் செய்யப்படுகின்றது]

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அது அறுபதுகளின் பிற்பகுதி. இலங்கையின் கரையோரக்கிராமம் ஒன்றில் ‘ஆழிக்கரையின்   அன்புக் காணிக்கை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. திரைப்படத்தில் அனாதை இளைஞன் சங்கராவும், சி. ஐ. டி. சிவராமாகவும் எம். எல். ஜெயகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். கிராமத்தை ஆட்டிப்படைக்கும் பணக்கார ராஜப்பன் இரகசியமாக கடத்தல் தொழிலும் செய்கிறான். ராஜப்பனால் கொல்லப்பட்ட சங்கர், சிவராமாகத் திரும்பி வந்து கிராமத்தையும், காதலி மஞ்சுளாவையும் மீட்கிறான். இந்த திரைப்படத்துக்கு அப்போது தோன்றியிருந்த ‘இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின்’ உதவியும் கிடைக்கவில்லை. பத்து ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்த திரைப்படம் 1973 நவம்பரில் ‘மீனவப்பெண்’ என்று பெயர்மாற்றம் பெற்றுத் திரைக்கு வந்தது. சுமாராக ஓடியதாகவே சொல்லப்படுகிறது.

கதாநாயகன் எம். எல். ஜெயகாந்த் நூறு நாடகங்களுக்கு மேல் எழுதி மேடையேற்றியவராம். நடிப்பில் இருந்த தீராக்காதலாலேயே நாடகங்களிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்திருக்கிறார். அவர் வேறு படங்களில் நடித்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக  எம். எல். ஜெயகாந்த் என்கிற வி. எம். எல். சிவத்துக்கு தனது ஈழத்து சினிமாவின் முக்கியமான படைப்பாளியாக வரப்போகிறார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கனடியத்தமிழரான லெனின் எம். சிவம் எழுதி இயக்கிய ‘A Gun & A Ring’ என்ற தழிழ்த் திரைப்படம் 16வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக்கிண்ண விருதுக்கு போட்டியிடும் திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வாகியிருக்கிறது. இன்று முக்கியத்துவம் வாய்ந்த திரை விழாக்களில் ஒன்றாக ஷாங்காய் திரைப்பட விழா கருதப்படுகிறது. இதுவரை ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவின் தங்கக்கிண்ண விருதுக்கு (Golden Goblet Award) போட்டியிடும் திரைப்படங்களில் ஒன்றாக எந்தத் தமிழ்த் திரைப்படமும் தேர்வானதில்லை. இணையத்தில் தேடியதில் நான்கு இந்தியத் திரைப்படங்களே இதுவரை இந்தத் தங்கக்கிண்ண விருதுக்குக்கான போட்டிக்கு தேர்வாகியிருப்பதாகத் தெரிகிறது. கடந்த வருடம் ‘ஆகாசத்திண்டே நிறம்’ என்ற Dr. பிஜு இயக்கிய மலையாளப் படம் இந்தப் போட்டியில் கலந்துகொண்டது. அப்போது ஷாங்காய் தங்கக்கிண்ண விருதுக்குப் போட்டியிடும் முதல் மலையாளத் திரைப்படம் என்ற அளவில் அது முக்கியமான செய்தியாக அமைந்தது.

இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை 1962இல் வெளிவந்த ‘சமுதாயம்’ திரைப்படத்துடன் ஆரம்பிக்கிறது. இலங்கையில் 30க்கு மேற்பட்ட முழுநீளத் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கனடியத் தமிழ் சினிமாவின் கதை தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கிறது. இதுவரை 40க்கும் அதிகமான தமிழ்த் திரைப்படங்கள் கனடாவில் வெளிவந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவற்றை முயற்சிகள் என்ற அளவிலேயே கூறமுடியும். இந்த நிலையில் கனடியத் தமிழர் ஒருவர் இயக்கிய தமிழ்த் திரைப்படமொன்று முக்கிய திரைப்படவிழாவொன்றில் போட்டிக்குத் தெரிவாகியிருப்பதை புலம்பெயர் சினிமாவின் மைல்கல் என்றே கூறலாம்.

1049005_468007159953477_1147571197_o      1009351_464310533656473_249795325_o

382487_467811049973088_1224919846_n      1025448_465734936847366_803618736_o

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா 1993முதல் நடந்து வருகிறது. 2013ஆம் ஆண்டின் 16வது விழாவில் தங்கக்கிண்ண விருதுப் போட்டிக்கு  112 நாடுகள், பிராந்தியங்களிலிருந்து 1600க்கும் மேற்பட்ட படங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 12 படங்களே போட்டிக்கான படங்களாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தன. ‘A Gun & A Ring’ அவற்றில் ஒன்று.

லெனினுக்கு இள வயதிலிருந்தே சினிமா மீது தீராத ஆர்வம் இருந்திருக்கிறது. தந்தையாரின் சினிமா மற்றும் நாடக ஆர்வம் குடும்பதில் மிகுந்த நெருக்கடிகளை உருவாக்கியிருக்கிறது. ‘படித்து முடித்துவிட்டு எதையாவது செய்’ என்று குடும்பத்தினர் கூறிவிட்டார்கள். லெனின் வோட்டர்லூ பல்கலைக் கழகத்தில் மென்பொருள் பொறியியலாளராகப் படிப்பை முடித்தார். படிப்பை முடித்து பணியில் இணைந்ததும் முதல் வேலையாக றயர்சன் பல்கலைக் கழகத்தில் ‘திரைப்படப் பிரதியாக்கத்’ துறையிலும் தொடர்ந்து ஒளிப்பதிவு, தொகுப்பாக்கத் துறைகளிலும் பயின்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து இனியவர்கள், உறுதி, பக்கத்துவீடு போன்ற குறும்படங்களை இயக்கியிருக்கிறார். மூன்று கோணங்களில் கதை சொல்லப்படும் ‘1999’, இவர் இயக்கிய முதல் முழுநீளத் திரைப்படம். இது வன்கூவர் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

401206_377407402346787_1977592505_n     380272_381372168616977_922453778_n

‘A Gun & A Ring’ நகர்ப்புற நாடகம் என்கிற வகையைச் சேர்ந்த திரைப்படம் என்று லெனின் கூறுகிறார். ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்கில் வாழும் தமிழர்களுக்கு அருகிலேயே போர் உட்கார்ந்திருக்கிறது என்பதே கதையின் மையநாடி என்கிறார். ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த ஆறு கதாபாத்திரங்களை மையப் படுத்தியே கதை சொல்லப் படுவாதகவும் சொல்கிறார். திரைப்படத்தில் ஐம்பது பேரளவில் நடித்திருக்கின்றனர். பிரதியைத் தயார் செய்து அதை நேர்த்தியாக்க லெனினுக்கு ஏறக்குறைய ஒரு வருடம் எடுத்திருக்கிறது. சுறுசுறுப்பான கனடா வாழ்வில் மிகவும் திட்டமிட்டு இரண்டே வாரத்தில் முழுப்படப் பிடிப்பையும் நிறைவு செய்திருக்கிறார். படப்பிடிப்புக்குப் பிறகு தொகுப்பு, இசைச் சேர்க்கை போன்றவற்றுக்கு மேலும் ஒருவருடம் எடுத்திருக்கிறது.

திரைப்படத்தில் தேனுகா கந்தராஜா, பாஸ்கர் மகேந்திரன், மதிவாசன் சீனிவாசகம், ஜோண் பெரி, கந்தசாமி கங்காதரன், சேகர் தம்பிராஜா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் ரோகின் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் மணி இசையமைத்திருக்கிறார். விஷ்ணு முரளி திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.

சந்தைப்படுத்துதலில் இருந்த சிரமங்களே ஒரு தமிழ்த்திரைப்படத்துக்கு ஆங்கிலத் தலைப்பு வைக்கக் காரணம் என்று லெனின் கூறுகிறார். ஆனாலும் தலைப்பு தமிழில் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

புலம்பெயர் திரைப்பட வரலாற்றில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படமும் இந்த மைல்கல்லை எட்டுவதற்கு ஏதோ ஒரு வகையில் பங்காற்றியிருப்பதாகவே லெனின் கூறுகின்றார். தான் எடுத்த ஒவ்வொரு திரைப்படங்களிலிருந்தும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறும் லெனின் இந்தத் திரைப்படத்திலும் பல புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார்.

புலம்பெயர் திரைத்துறை எதிர்கொள்ளும் சவால்கள் என்ன என்று கேட்டோம். பொருளாதாரம் முக்கியமான சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார். புலம்பெயர் நாடுகளில் திரைப்படங்களைக் கலையார்வத்தாலேயே உருவாக்க முடிகிறது. இங்கு செலவிட்ட பணத்தை திரும்பப் பெற்றாலேயே அது வெற்றி என்ற அளவிலேயே இருக்கிறது. இந்த நிலையில் திரைத்துறையை வணிகமாகக் கருதி முதலீடு செய்ய முன்வருபவர்கள் இருக்க வாய்ப்புக்கள் குறைவு. இந்த நிலையிலும் Eye catch Multimediaவைச் சேர்ந்த விஷ்ணு முரளி மிகவும் ஆர்வமாக இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். உண்மையில் இவர் தான் இப்படி ஒரு சினிமா உருவாக முக்கியமான காரணம் என்கிறார்.

178743_328711340549727_782093276_o      177175_328694413884753_1819680125_o

285316_415397718547755_479721869_n      207231_415397811881079_1389733358_n

அடுத்தது சுறுசுறுப்பான கனடிய வாழ்வியலில் கலைஞர்கள் கிடைப்பதும் சிரமமாக இருப்பதாகவும் கூறுகிறார். எம்மிடம் ஏராளமான கதைகள் உள்ளன. ஆனால் அவற்றை திரைப்படத்துக்கு ஏற்றவகையில் பிரதியாக்கம் செய்ய வேண்டியிருப்பதாவும் கூறுகிறார்.

174932_359103944177133_16150348_o  132540_355899767830884_1059418097_o    256553_328710610549800_311500234_o   471202_329037467183781_1090611460_o
266967_374526295968231_764547387_o  218519_355095661244628_104127320_o  469550_328555733898621_2021304300_o  191477_354802844607243_1094539178_o

லெனினின் தந்தையார் ஜெயகாந்த் நடித்த ‘மீனவப்பெண்’ படத்துக்கு அப்போது இலங்கையில் வெளிவந்த ‘தேசாபிமானி’ என்ற பத்திரிகையில் வெளிவந்த விமர்சனத்தில் ஒரு பின்குறிப்பு இருந்தது. அதில் இவ்வாறு இருந்தது ‘இலங்கையில் தமிழ்ப் படம் எடுக்கத் தொடங்கி ஏறக்குறைய 15 ஆண்டுகளாகி விட்டன. 15 ஆண்டுகள் என்பது லேசுப்பட்ட சங்கதியல்ல. எனவே, பத்தாவது படம் லேசுப்படாத சங்கதியாக இருக்கவேண்டும்’.

A Gun & A Ring லேசுப்பட்ட சங்கதியல்ல. வரலாறுச் சாதனை. இனி எமது ஏணிகளை கூரை மீதல்ல வானத்தை நோக்கி வைப்போம்.

 vincent karuna கருணா | கனடாவிலிருந்து
நன்றி – தாய்வீடு | கனடா | June 2013 
படங்கள் – A Gun &  A Ring | முகநூல்  

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்