Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘பொன்னியின் செல்வன் 2’ | திரைவிமர்சனம்

‘பொன்னியின் செல்வன் 2’ | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு: லைக்கா புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள்: சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, ஐஸ்வர்யா ராய் பச்சன், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர்.

இயக்கம்: மணிரத்னம்

மதிப்பீடு: 3.5 / 5

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வரவேற்பை பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் ரசிகர்களுக்கு கிடைத்த பரவச அனுபவம்… இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் கிடைத்ததா..? இல்லையா..? என்பதனை தொடர்ந்து காண்போம்.

முதல் பாகத்தில் இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்த அருள்மொழிவர்மனை சிறை பிடித்து வருமாறு பெரிய பழுவேட்டரையர் நந்தினியின் ஆலோசனையை கேட்டு உத்தரவிடுகிறார். இலங்கைக்குச் சென்ற சோழ கப்பற்படை வீரர்கள், அங்கு நடைபெற்ற இயற்கை பேரிடரில் அருள்மொழிவர்மன் மற்றும் வந்திய தேவன் இருவரும் கடலில் மூழ்கி இறந்து விட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மந்தாகினி எனும் முதிய ஊமை பெண் அருள்மொழிவர்மனை காப்பாற்றி உயிர் பிழைப்பதற்காக புத்தப்பிக்குகளிடம் ஒப்படைக்கிறார். புத்த பிக்குகள் அருள்மொழி வர்மனுக்கு பிரத்யேக சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றி அவரை தஞ்சைக்கு அனுப்புகிறார்கள்.

இந்நிலையில் சோழ தேசத்தின் கடற் பகுதியான கோடியக்கரை எனும் பகுதிக்கு இலங்கையிலிருந்து வருகை தரும் பல்லவ மன்னனும், ஆதித்ய கடிகாலனின் நண்பனுமான பார்த்திபேந்திர பல்லவன், அருள்மொழிவர்மன் கடலில் மூழ்கியதாக தகவல் தெரிவிக்கிறார். இதைத்தொடர்ந்து பழுவூர் அரசி நந்தினியை சந்திக்கும் பல்லவ மன்னன், அவளின் விருப்பத்தை நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கிறார். ஆதித்ய கரிகாலனை சந்தித்து கடம்பூர் அரண்மனைக்கு வருகை தருமாறு வேண்டுகோள் விடுக்கிறார. கடம்பூர் அரண்மனைக்கு வருகை தரும் ஆதித்ய கரிகாலன், தன் மனம் கவர்ந்த பெண்ணான நந்தினி மூலம் மரணத்தை தழுவுகிறான். இதன் பிறகு சோழப்பேரரசை ஆட்சி செய்வது அருள் வழிவர்மனா? அல்லது அந்த பட்டத்திற்காக ராஜதந்திரமாக காய் நகர்த்தும் மதுராந்தக சோழனா? என்பதுதான் படத்தின் கதை.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த விறுவிறுப்பு.. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் ஓரளவு இருக்கிறதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அதிலும் அருள்மொழிவர்மனை வதம் செய்வதற்காக பாண்டிய மன்னனின் ஆட்கள் செய்யும் தந்திர யுத்தத்தையும் அதனை அருள்மொழிவர்மன்- வந்தியத்தேவன்- ஆழ்வார்கடியான் எதிர்கொள்ளும் அழகும் சிறப்பு.

சீயான் விக்ரமின் நடிப்பு முதலிடம் பெறுகிறது. தான் நேசித்த பெண் கேட்ட விடயத்தை செய்ய இயலாத தவிப்பையும்.. அதற்கான தண்டனையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் எனும் பேசும் இடம் அற்புதம். இதனையடுத்து மந்தாகினி மற்றும் நந்தினி என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் நந்தினியின் நடிப்பு பிரமாதம். சுந்தர சோழர்- மந்தாகினி இடையேயான உறவு விவரித்திருப்பதும்… சுந்தர சோழரை மந்தாகினி காப்பாற்றுவதும் சுவையான திருப்பங்கள். வந்தியத்தேவனாக நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பும்.. கார்த்தி -திரிஷா இடையிலான காதலும் நவரசம்.

ஒளிப்பதிவு இயக்குநருக்கு பக்கபலமாக கை கொடுத்திருக்கிறது. ஆனால் பின்னணியிசையைப் பொறுத்தவரை முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் இசை புயல் ஏ ஆர் ரகுமான் பல தருணங்களில் திறமையை காட்ட வாய்ப்பிருந்தும் மறுத்திருப்பது..   இசைஞானியின் பங்களிப்பு இல்லாததை நினைவுபடுத்துகிறார்.

உச்சகட்ட காட்சியாக பல்லவ மன்னன் ராஸ்ட்ரகூடர்கள் ஆகியோரின் கூட்டணியை எதிர்த்து, சோழ மன்னர்களின் போர்… பெரும் எதிர்பார்ப்புக்கு பிறகு குறைவான நேரத்தில் மட்டுமே வருவதால், யானை பசிக்கு சோளப் பொரியாகிறது.

தமிழகத்தின் கடற்கரை நகரமான நாகப்பட்டினத்தில் பத்தாம் நூற்றாண்டில் புத்த விகார் இருந்தது என மணிரத்னம் குறிப்பிடுவது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தும். இதுபோல் இன்னும் சில விடயங்கள் இருப்பதால் படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகும் என அவதானிக்கலாம். கடல் வணிகத்திலும், கடலை படகு மூலமாக வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் ஒரு வழிப்போக்கன்.. அரச ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பதாக கூறுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. இருப்பினும் பொன்னியின் செல்வன் வரலாற்றை ஒட்டிய புனைவு கதை என்பதால் ஒரு முறை கண்டு ரசிக்கலாம்.

பொன்னியின் செல்வன் 2-  கூர் முனை மழுங்கிய வாள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More