விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சவுத்தம்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.
அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் செப்டம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி திணறும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி சிறந்த வீரர்களை கொண்டது. ஆனால் பந்துவீச்சில் பந்து நகர்ந்ததால் எப்போதுமே அந்த வாய்ப்புகளை இங்கிலாந்து அதிகமாக பயன்படுத்தி கொள்ளும். ஆகஸ்ட் மாதத்தில் நிலைமைகள் ஈரப்பதத்துடன் இருந்தால், இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து நன்கு நகரும் வகையில் பந்துவீசும். இந்திய அணி உலகத்தரம் வாய்ந்த பேட்டிங் பிரிவை கொண்டது.
ஆனால் அவர்களது பெரிய பலவீனம் நகரும் பந்து. அதே போல் நிலைமை இருந்தால் அந்த வாய்ப்பை அவர்களுக்கு எதிராக எப்போதும் நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.