ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் கடந்த வாரம் முதலிடத்திலிருந்து வனிந்து ஹசரங்க, தற்சமயம் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி:20 தொடரின் முதலிரு ஆட்டங்களிலும் ஹசரங்க 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
எனினும் கொவிட்-19 தொற்று காரணமாக கான்பராவில் நேற்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் ஹசரங்க விளையாடவில்லை. அத்துடன் தற்சமயம் தனிமைப்படுத்தலில் இருக்கும் ஹசரங்க அடுத்த போட்டிகளில் விளையாடுவதும் கேள்விக் குறியாகியுள்ளது.
இவ்வாறான பின்னணியிலேயே ஐ.சி.சி. டி:20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஹசரங்க 760 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்து மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பட்டியலில் தென்னாபிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி 784 புள்ளிகளுடன் முதலிடத்திலும், அவுஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் நான்கு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இலங்கைக்கு எதிரான டி:20 தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் ஹேசில்வுட் எட்டு விக்கெட்டுகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.