Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வறிய, ஆதரவற்ற சிறார்களுக்கு வாழ்வளித்த திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம்!

வறிய, ஆதரவற்ற சிறார்களுக்கு வாழ்வளித்த திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம்!

3 minutes read
  • மனிதநேய சேவையில் 45 ஆண்டுகள் நிறைவு

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கலை,கலாசாரம்,கல்வி மற்றும் ஆன்மீக ரீதியாக தடம்புரண்டு சென்று கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை நெறிப்படுத்தவென 1976இல் ஸ்தாபிக்கப்பட்ட சமய நிறுவனமே அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனமாகும்.

இந்த ஆதீனம் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசான் இறைபணிச் செம்மல் அமரர் சுவாமிநாதன் தம்பையா அடிகளாரின் தீர்க்கதரிசனத்தில் உதித்து இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து 1976ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்திற்கு ஆங்கில ஆசானாக இடமாற்றம் பெற்று வந்தவர் அமரர் சுவாமி தம்பையா அடிகளார். அம்பாறை மாவட்டத்தில் அப்போது நிலைகுலைந்து காணப்பட்ட இளைஞர்களை நெறிப்படுத்தி சைவத்தையும் தமிழையும் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் உயரிய சிந்தனையுடன் திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தை அவர் அன்று ஸ்தாபித்தார்.

திருநாவுக்கரசு நாயனார் குருகுலமானது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக் கொண்டு தனது சமயப் பணிகளை வரலாற்றுச் சிறப்பு மிக்க உகந்தைமலை ஸ்ரீமுருகன் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் மற்றும் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயம், தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம் உட்பட அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் தொண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

நாட்டில் யுத்தம் தீவிரம் அடைந்த போது இளைஞர், யுவதிகளை மதரீதியாகவும் மனரீதியாகவும் நெறிப்படுத்தி அவர்களின் எதிர்கால வாழ்கையினை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டிய தேவைப்பாடு உணரப்பட்டது.இந்நிலையில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் சமயப் பணிகளுடன் கல்விப் பணியையும் முன்னெடுக்க வேண்டி கட்டாய நிலையில், 1978.01.06ந் திகதி சிறுவர் இல்லத்திற்கான கால்கோள் இடப்பட்டு அது சிறுவர் இல்லமாக பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஹவாய் ஆதீனத்தின் குருமுதல்வர் சுவாமி சிவாய சிவசுப்பிரமணிய சுவாமிகள், இமாலய நித்தியானந்தா சுவாமிகள், நுவரெலியா காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள், இலங்கை இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ரங்கநாயகி பத்மநாதனின் காணி அன்பளிப்புடன் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் அமரர் எம்.சிவநேசராசா மற்றும் அமரர் சங்கீத பூசணம் சி.கணபதிப்பிள்ளை, முன்னாள் அதிபர் மு.சச்சிதானந்தம், அதிபர் நேசராசா, ெடாக்டர் கே.சண்முகராசா ஆகியோரின் ஆதரவுடன் சுவாமி தம்பையா அடிகளாரால் 10 மாணவர்களுடன் 1990.02.04ந் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று தம்பிலுவிலில் நிரந்தரமான கட்டடத்தில் சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு உருவாக்கப்பட்ட குருகுலமானது மட்டக்களப்பு முதல் அம்பாறை மாவட்டத்தில் பல கிராமங்களில் இருந்தும் தாய் தந்தையை இழந்த வறிய மாணவர்களை அரவணைத்துக் கொண்டது. அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான கல்வி மற்றும் ஆன்மீக ரீதியான ஒழுக்க கல்வி முறைகள் போதிக்கப்பட்டன. குருகுல ஆதீனத்தின் நோக்கமும் இலக்கும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அந்த வகையில் ஆலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

63 நாயன்மார்களின் குருபூஜை தினங்களில் இந்து சமய வினாவிடைப் போட்டிகள் நடத்தி பரிசில்கள் வழங்கப்பட்டன.

இந்து மாணவர்களை ஊக்கப்படுத்துதல், கற்றல் உபகரணங்கள் வழங்குதல், சமய நூல்களை வெளியிடுதல், ஆலயங்களில் புராண படலங்களை ஓதுவதற்கான ஒழுங்குளை முன்னெடுத்தல், எழுத்தாளர்களை ஒன்றிணைத்து சமய மற்றும் இலக்கிய நூல்களை வெளியிடுதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின் பக்கக் கிளைகளாக பிரதேச இளைஞர்களை ஒன்றிணைத்து அம்பாறை மாவட்ட இந்து மாமன்றம் மற்றும் சிவதொண்டர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டன. அதனுடாக ஆலய தொண்டுகள் மற்றும் கதிர்காமம் யாத்திரிகர்களுக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு, பின்னாளில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தில் இருந்து சிவதொண்டர் அமைப்புக்கென தனியான ஒரு நிருவாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு சமய மற்றும் கல்விச் செயற்பாடுகளுடன் சமூகப் பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்து வந்ததை கௌரவிக்கும் வகையில் 1993ம் ஆண்டு இந்து சமய கலாசார அமைச்சு சுவாமி தம்பையா அடிகளாருக்கு ‘இறைபணிச் செம்மல்’ எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

1995ஆம் ஆண்டு சுவாமி தம்பையா அடிகளார் இறைபதம் அடைந்ததைத் தொடர்ந்து குருகுல ஆதீனத்தின் பணிகளை கண.இராஜரெத்தினம் தலைமையிலான நிருவாக குழுவினர் முன்னெடுத்து வந்தனர்.

இவ்வாறு திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின் சேவைகளை முன்னெடுத்து வரும் நிலையில், 2004.12.26ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப் பேரலை தாக்கத்தில் சிக்குண்டு குருகுல ஆதீனத்தின் கட்டடம் தரைமட்டமாகி அழிந்து போனது. இல்லத்தில் இருந்த 55 சிறுவர்களும் சிவனருளால் உயிர் தப்பியிருந்தனர்.

அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீன சிறுவர் இல்லத்தின் மாணர்கள் இன்று வைத்தியர்கள், பொறியலாளர்கள், சட்டத்தரணிகள், அரச தனியார் வங்கி உத்தியோகத்தர்கள் மற்றும் அரச திணைக்களங்களில் உயர் பதவிகளில் தொழில் புரிந்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More