செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை ஆபிரிக்காவில் புதிய இளம் தலைமை | மேற்குலகின் சிம்ம சொப்பனம் இப்ராகிம் தராரே | ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஆபிரிக்காவில் புதிய இளம் தலைமை | மேற்குலகின் சிம்ம சொப்பனம் இப்ராகிம் தராரே | ஐங்கரன் விக்கினேஸ்வரா

3 minutes read

நீண்ட காலமாகவே துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கும் ஆபிரிக்க குடும்பங்களில் புதிய காற்றை வீசச் செய்திருக்கிறது. ஒட்டு மொத்த ஆபிரிக்காவுக்கும் புதுச் சுவாசம் பெற வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளது. உலகில் உள்ள ஏழை நாடுகளிலும் அரசியல் மாற்றம் சாத்தியம் என்பதற்கு இப்ராகிம் தராரே என்ற இளம் வீரரின் வருகை விடிவெள்ளியாக மிளிர்கிறது.

பிரெஞ்சு அரசு தனது சொந்த நலனுக்காக ஆபிரிக்காவில் அதிகார வர்க்கங்களின் போட்டிகளை கையாள்வதில் நீண்ட கால சாதனையை கொண்டுள்ளது. அத்துடன் பாரிஸ் அதன் முன்னாள் ஆபிரிக்க காலனித்துவ சாம்ராஜ்யத்தில் எண்ணற்ற இராணுவ சதிகளையும் கண்டுள்ளது.

தராரே என்ற புரட்சியாளன்:

இன்று மேற்குலகத்தைக் கலங்கடித்து, மேற்குலக ஆதிக்கத்திலிருந்து முழு ஆபிரிக்காவையும் மீட்டெடுப்பொம் என்று சபதமிட்டு அதற்காகத் துரிதமாகாக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் இப்ராகிம் தராரே என்ற இளம் வீரர்.

அன்றைய புர்கினா பாசோ்(Burkina Faso) நாட்டின் புரட்சியாளன் தோமஸ் சங்காரா கிளர்ந்தெழுந்தபோது உலக அரச பயங்கரவாதத்தால் அவர் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் தற்போது அந்த வரலாறு மீள திரும்புகிறது. மூன்று தசாப்தங்கள் கழித்து அந்த மண்ணிலிருந்து இப்ராகிம் தராரே என்ற புரட்சியாளன் வெடித்துக் கிளம்பியிருக்கிறான்.

பாட்ரிஸ் லுமும்பாவில் தொடங்கி சமோரா மோசஸ் மார்சல், தோமஸ் சங்கரா என்று ஆபிரிக்கப் புரட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. அதில் தற்போது இப்ராகிம் தராரே இணைந்து கொள்கிறார்.

காலனித்துவ காலத்தின் பின்னர் தாம் வெளியேறும் போது தமது கனிமவள சுரண்டலை தொடர்வதற்க்காக ‘ஒரு பொம்மை அரசை’ நிறுவுவது மேற்கு ஜரோப்பியர்களின் வழக்கம். அப்படியான பொம்மை அரசை உதறித் தவிர்த்து சுயாதீன அரசை நிறுவியவர். ஜரோப்பிய – பிரான்ஸ் படைகளை ஆபிரிக்க நாடான புர்கினோ பாசோவை விட்டு வெளியேற்றியவர் இப்ராகிம் தராரே ஆவார்.

புர்கினா பாசோவின் விடிவெள்ளி:

தற்போது மாலி உட்பட பல ஆபிரிக்க நாடுகளை ஒன்றிணைக்கும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார். பலமிக்க ஒன்றிணைந்த ஓற்றுமையான ஆபிரிக்க பொருளாதாரம் மூலமே உலக சாம்ராஜியங்களின் சுரண்டலை ஒழிக்கலாம் என்பதை உணர்ந்து புரிந்தவர்.

அமெரிக்கா, மேற்கு ஜரோப்பிய முதலாளிய கழுகுகளை நிராகரித்து ஏழை நாடுகள் எப்படி உலகில் அரசியல் செய்ய முடியும், என்ற கேள்விக்கு விடையை அறியத் தந்துள்ளார். அதாவது சமத்துவ தேடலின் விடிவெள்ளியாக, சங்காராவின் அரசியல் வாரிசாக, மேற்க்கு ஆபிரிக்காவின் இளம் சூரியனாக தோற்றம் பெற்றுள்ளார் இந்த் இப்ராகிம் தரோரே ( Ibrahim Traore).

பாரிஸின் காலனித்துவ கொள்கைகளை விமர்சித்துவந்த ஆபிரிக்க ஆட்சிகளை வெளியேற்றுவதற்கு, ஆபிரிக்க நாடுகளில் பல சதிப்புரட்சிகளை பிரான்ஷ் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியுள்ளது.

1987 இல், புர்கினா பாசோவில், சோவியத் சார்பு ஜனாதிபதி தோமஸ் சங்கராவை தூக்கியெறிந்து, அவரை கொலை செய்த பின்னர் பிளைஸ் கம்போரேவை பிரெஞ்சு அரசாங்கம் ஆதரித்தது. ஆபிரிக்காவின் மிக மோசமான அகதிகள் நெருக்கடிகளில் ஒன்றான, புர்கினா பாசோவில் நடந்துவரும் சண்டையால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பிற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக புர்கினா பாசோ, நைஜர், மாலியில் முன்னாள் காலனித்துவ சக்தியான பிரான்சை தங்கள் நாடுகளில் இருந்து, அதனது படைகளை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டன. தற்போது மேற்கு ஆபிரிக்கா முழுவதும் அரசியல் ரீதியாக பிரான்சை எதிர்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆயினும் புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் மீது படையெடுப்பதற்கு தயாராகுமாறு மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (ECOWAS) மீது பிரெஞ்சு அழுத்தம் கொடுக்கிறது. 2023 அக்டோபர் மாத தொடக்கத்தில், இந்த மூன்று நாடுகளும் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை, சஹேல் அரசுகளின் கூட்டமைப்பு (AES) என்பதை உருவாக்கிக் கொண்டன.
AES நாடுகளில் ஒன்றிற்கு எதிரான படையெடுப்பு முயற்சிக்கு, இந்த மூன்று நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகும் என்று கருதி, இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து பதிலளிப்பார்கள் என்று இந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

புர்கினா பாசோ இராணுவப் புரட்சி:

பிரான்சின் 2023 செப்டம்பரில் நடந்த சதிப்புரட்சியை முறியடித்ததாக புர்கினா பாசோவின் ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 2022 இல் புர்கினா பாசோவில் இளம் தலைவர் கேப்டன் இப்ராகிம் தரோரே பதவிக்கு வந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, இந்த தோல்வியுற்ற சதி முயற்சி நடந்துள்ளது.

சுமார் 23 மில்லியன் மக்கள் வசிக்கும் புர்கினா பாசோவில், கடந்த சில ஆண்டுகளாக பல இராணுவப் புரட்சிகளைக் கண்டுள்ளது. 2022 செப்டம்பர் பிற்பகுதியில், கப்டன் தராரே ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய 18 மாதங்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆபிரிக்கா மூலோபாய ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

அடிமைத்தனத்திற்கு எதிராக கிளர்ச்சி:

ஓர் அடிமை, அந்த அடிமைத்தனத்திற்கு எதிராக தான் நடத்தும் கிளர்ச்சி, யாராலும் இரக்கத்துடன் பார்க்கப்படக்கூடாது என்றே விரும்புவான். 2024 இல் ரஷ்யாவிற்கு விஜயம் செய்த போது, “நாங்கள் ஒருபோதும் எங்களுக்காக வருத்தப்படவில்லை. எங்களுக்காக யாரும் வருத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை” என்ற இப்ராகிம் தரோரின் முழக்கம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் மட்டுமல்ல, மேற்கத்திய சக்திகளின் உலகிலும் எதிரொலித்தது.

ஏகாதிபத்தியத்திற்கும் வறுமைக்கும் எதிரான போராட்டத்தை ஒட்டுமொத்த ஆபிரிக்கர்களும் பெரும் எழுச்சியுடன் நடத்த வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆபிரிக்காவில் மக்களின் அடிமைத்தனத்திற்கு எதிராக தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு இதற்கு முன்பும் இப்போதும் பெரும் ஆதரவு அளிக்கிற ரஷ்யாவை நன்றிப் பெருக்குடன் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

மேலும் சவுதி அரசர் தனது நாட்டில் பெரும் எண்ணிக்கையில் மசூதிகளை கட்டித்தருவதாக முன்வந்ததை நிராகரித்து பாடசாலைகளையும் வைத்திய சாலைகளையும் மற்றும் தொழிற்சாலைகளையும் நிர்மாணிக்குமாறு கேட்டவர் இவரே.

மேலும் பல தடவை ஜரோப்பியர்களின் சதித்திட்டத்தினால் திட்டமிட்ட கொலை முயற்சிகளில் இருந்து தப்பியவர். அத்துடன் பிராஸ்சின் கனிமவள கொள்ளையை எதிர்த்து தடை செய்த பெருமைக்கு சொந்தக்காரர் அவரே.

ரஷ்யாவின் உதவிக்கரமும் நட்பும்:

நீண்ட காலமாகவே துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கும் ஆபிரிக்க குடும்பங்களில் புதிய காற்றை வீசச் செய்திருக்கிறது. ஒட்டு மொத்த ஆபிரிக்காவுக்கும் புதுச் சுவாசம் பெற வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளன.

இரண்டாம் உலகப்போரின் நாசிகளின் பிடியிலிருந்து இந்த உலகையே பாதுகாப்பதற்காக ரஷ்யா (சோவியத் ஒன்றியம்) செய்த தியாகங்கள் அளவிட முடியாதவை. எங்களது ஆப்பிரிக்க மக்கள், எங்களது மூதாதையர்கள், நாசிசத்தின் பிடியிலிருந்து – பாசிசத்தின் பிடியிலிருந்து ஐரோப்பா தன்னை விடுவித்துக் கொள்வதற்காக பலவந்தமாக போர்க்களத்தில் நிறுத்தப்பட்டார்கள்.

வரலாற்றின் பக்கங்களிலிருந்து, எங்களது மூதாதையர்களின் இந்த மகத்தான தியாகம் மறைக்கப்பட்டுவிட்டது. பாசிசத்திற்கு எதிரான போரில் எங்களது பங்கைப் பற்றி யாரும் எழுதவில்லை. திரைப்படங்களும் எடுக்கவில்லை.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவும் ஆப்பிரிக்காவும் தோளோடு தோள் நின்று போராடிய மகத்தான தோழமை வரலாறு உண்டு. எங்களது மக்களுக்கு ஒரு சுதந்திரமான எதிர்காலத்தை உறுதிசெய்வதற்காகவே உங்கள் முன்னால் நிற்கிறேன். எங்களது உள்நாட்டு விவகாரங்களில் யாரும் தலையிடாத இறையாண்மை உறுதி செய்யப்பட வேண்டும் என இப்ராகிம் தரோரே வலியுறுத்தியுள்ளார்.

இவ்வருடம் மொஸ்கோவில் நடந்த இரண்டாம் உலக போரின் சுதந்திர விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஐங்கரன் விக்கினேஸ்வரா

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.