அறிவறிந்த மக்கட்பேறு | உடுவை.எஸ்.தில்லைநடராசாஅறிவறிந்த மக்கட்பேறு | உடுவை.எஸ்.தில்லைநடராசா

சிறந்த பேறாகக்கருதப்படும் மக்கட்பேறு பெற்றவர்கள் அம்மக்களை அறிவறிந்த மக்களாக்குவதற்கு அல்லும் பகலும் ஆவன செய்வார்கள். முதலில் “அகரத்’திலிருந்து ஆனா ஆவன்னா எழுதப் பழக்குவதற்கான பயிற்சி கல்வித்தெய்வம் கலைமகளுக்கு விழா கொண்டாடப்படும் “சரஸ்வதி பூஜை“ யோடு வரும் விஜயதசமி தினத்தன்று வித்தியாரம்பம் எனப்படும் ஏடு தொடக்கல் நிகழ்வோடு ஆரம்பமாகும்.

தமிழ் மக்கள் தெய்வ நம்பிக்கை நிறைந்தவர்களாக இருப்பதால் நெடுங்காலமாக ஏடுதொடக்கல் நிகழ்வு பெரும்பாலும் ஆலயங்களிலேயே நடைபெற்று வந்தன. ஆலயத்தில் பூஜை இறைவழிபாடு ஆகியவற்றைத் தொடர்ந்து தாம்பாளத்தில் பச்சைஅரிசியை நிரப்பி வித்தியாரம்பம் செய்யப்பட வேண்டிய பிள்ளையின் விரலால் அகரம் முதலான பன்னிரெண்டு உயிரெழுத்துக்களை  எழுதி பின் ஒவ்வொரு எழுத்துகளைகளையும் தெளிவான உச்சரிப்புடன் உரக்கச்சொல்லும் நிகழ்வு இடம் பெறும்.

A beutifull song about mothers love

இந்தியாவில் பாலில் எழுத்தாணி தொட்டுக்கொண்டு “அறிவோம் நன்றாக., குரு வாழ்க., குருவே துணை” என்று எழுதி அந்தப்பாலை குழந்தை பருகும்படிச் செய்வதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்.;

எனது பிறந்த ஊராகிய உடுப்பிட்டிக்கிராமத்தில் நெடுங்காலமாக விஜயதசமி தினத்தன்று வித்தியாரம்பம் செய்து வைக்கும் பணியைச் செய்து வந்தவர் ஆசிரியர் சின்னத்தம்பி. எப்போதும் தூய வெள்ளை வேட்டியுடன் வெண்ணீறணிந்த நெற்றியும் பிரகாசமான விழிகளும் ஆசிரியர் சின்னத்தம்பிக்கு ஒரு வகையான தனிப்பொலிவைக் கொடுக்கும். மூன்று தலைமுறையைச்சேர்ந்தவர்களுக்கு ஏடு தொடக்கி வைத்தவர்

.

இவரை ஊரிலுள்ளோர் ‘வாத்தியார்’ எனவும் படித்தவர்கள் ‘உபாத்தியாயர்’ ‘மாஸ்டர்’ எனவும் அழைப்பார்கள். இப்படி ஒவ்வொரு ஊரிலும் இரண்டொரு கைராசிக்கார ஆசிரியர்கள் இருந்தனர். இத்தகைய கைராசிக்கார ஆசிரியர்களைக்கொண்டு தங்கள் பிள்ளைகளுக்கும் ஏடு தொடக்கினால் அவர்கள் அறிவறிந்த பிள்ளைகளாக- அறிய வேண்டியவற்றை அறிந்து முன்னணிக்கு வருவார்கள் என்பது பெரும்பாலனவர்களின் நம்பிக்கை. வித்தியாரம்பம் ஊரின் மத்தியிலுள்ள வீரபத்திர கோவிலில் நடைபெறும். எப்போதும் ஆலயத்தில் ஆரம்பிக்கும் விடயங்கள்; நன்றாக அமையும் என்பது நம்மவர் நம்பிக்கை. ஏடு தொடங்கும் நாளன்று பெற்றோர் குழந்தைகளை ஆலயத்துக்கு அழைத்து வந்து அந்த நிகழ்வை சிறப்பாகச் செய்விப்பர்.

சின்னத்தம்பி ஆசிரியர் தனது கையால் குழந்தைகளின் விரலைப்பிடித்து ஆனா ஆவன்னா என எழுதப்பழக்குவார்  வீட்டுக்கு வந்தபின் பெற்றோர் அரிசிக்குப் பதிலாக மணலில் எழுதப் பழக்கும் பயிற்சி தொடரும்

இப்போது ஆலயங்களில் மாத்திரமன்றி சில கல்லூரிகள்- பொது இடங்களிலும் வித்தியாரம்ப நிகழ்வுகள் இடம் பெறுகின்றன.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் மிகவும் முக்கிய இடம் கல்வி என்பதில் இரண்டாம் கருத்திருக்க முடியாது. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தை பிறந்தவுடன் ஏடு தொடங்க வேண்டும்- நல்ல பாடசாலையில் பிள்ளையை அனுமதிக்க வேண்டும் என்பதில் எல்லாப் பெற்றோரும் அதிக அக்கறை காட்டுவார்கள்

அந்த நாட்களில் ஐந்து வயதாகும் போது பெரும்பாலும் பாடசாலைக்கு செல்லும் வழக்கம் ஆரம்பமாகும். வசதிகள் செல்வாக்கைப் பொறுத்து அந்த வயதை அடையுமுன்; சிலருக்கு பாடசாலை செல்லும் வாய்ப்பு கிடைத்து விடும். சிலருக்கு வறுமையாலோ வேறு காரணங்களாலோ அந்த வாய்ப்பு கிடைக்க ஆறு ஏழு எட்டு என்று அதிகரித்துச் சென்றதும் உண்டு.

ஏடு தொடக்கிய பின் பிள்ளைகளை பாலர் (அக்காலத்தில் ‘அரிவரி’ )வகுப்பில் சேர்ப்பிப்பார்கள். முழுமையாக அரிச்சுவடி எழுதவும் படிக்கவும் பயிற்சி நடக்கும். எண்களும் சிறிய கூட்டல் கழித்தலும் சொல்லிக் கொடுக்கப்படும். பள்ளி செல்லும் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக இனிப்பு தின்பண்டம் போன்றவற்றையும் வாங்கிக் கொடுப்பார்கள். வசதியுள்ள பெற்றோர் வாங்கிக்கொடுக்கும் இனிப்பு தின்பண்டம் ஆகியன மற்றப்பிள்ளைகளையும் மகிழ்விக்கும்.

தெய்வ நம்பிக்கையும் விடா முயற்சியும் நேர்மையும் உடையவர்கள் அவ்வப்போது சிறிதளவுக்கு துன்பங்கள் அனுபவிக்க நேர்ந்தாலும் ஈற்றில் இன்பமடைகின்றார்கள் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. இது எங்களுரில் நான் நேரிடையாகக் கண்டது. சிறியவனாக கோவிலுக்குச் சென்று வந்த நாட்களில் தெய்வ விக்கிரம் இருந்த மூலஸ்தானம் மாத்திரம் சீமேந்தினால் கட்டப்பட்ட சிறு அறையாக இருந்தது. உள் வீதியில் புற்களும் சிறு செடிகளும் பரவியிருந்தது. கோவிலை சுற்றி  பெரியகற்களால் எப்போதோ கட்டப்பட்ட மதில் பல இடங்களில் சிதைதிருந்தது. பாழடைந்த கோவில் போன்று தோற்றமளித்த கோவில் இன்று, அலங்கார மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகள் சுவரோவியங்கள் தீர்த்தமாட கேணி ஆகியவற்றுடன்  புதுப்பொலிவுபெற்று விளங்குகிறது. இவையெல்லாம் தெய்வ அனுக்கிரகமின்றி நடை பெறாது. ஊர் மக்களில் கணிசமான எண்ணிக்கையிலானோர் பிறந்த நாடு விட்டு பல்வேறு நாடுகளில் புலம் சிதறி வாழ்கின்றபோதும் இறையருளால்  நலமாயிருக்கிறார்கள். சொந்த மண்ணிலும் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நம்பிக்கையுள்ளவர்களுக்கு இறைவன் அருள் புரிய…நன்றியாக மக்கள் கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை- நேர்த்திக்கடன் உபயங்களால் தான் ஆலயங்கள் அழகாகத் தோற்றமளிக்கின்றன.

முதல் முதலாக பாடசாலை சென்ற ஆரம்ப நாட்களில் அம்மாவும் என்னுடன் பள்ளிக்கூடம் வந்து வகுப்பு முடிவடையும் வரை வகுப்பறைக்கு வெளியே நிற்பார். சில பிள்ளைகளின் பெற்றோர் அல்லது உறவினர் வருவார்கள். பள்ளிக்கூடம் ஆசிரியர்கள் கூடப்படிப்பவர்கள் எல்லாம் ஒத்துப்போகத்தொடங்கியதும் அம்மா என்னுடன் பள்ளிக்கூடம் வருவதை நிறுத்தி விட்டாலும் அம்மா அடிக்கடி என்னிடம் மட்டுமல்லாமல் சந்திக்கும் பலரிடம் என்னைப்பற்றி- எனது படிப்புகள் பற்றி—எனது நடவடிக்கைகள் நடத்தைகள் பற்றி விசாரித்த வண்ணம் இருப்பார்

நேரம் கிடைக்கும் போத அம்மா வீட்டுக்குப் பக்கத்திலுள்ள சிறிய  கோவிலுக்குச் செல்வார். பெரும்பாலும் வெள்ளிக்pழமை தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவிலுக்குச் செல்வார். திருவிழாக்காலங்களில் நல்லூர் கந்தசுவாமி கோவில்- வல்லிபுரக்கோவில் என்று செல்லும் வழக்கமும் உண்டு. செல்லும். பொருட்கள வாங்க சந்தைக்குப்போவார். தினமும் தண்ணீர் அள்ள கிணற்றடிக்குச் செல்வார். மின்சாரம் எரிவாயு இல்லாத கிராமத்தில் விறகு பொறுக்குவதும் அம்மாவின் வேலைகளில் ஒன்று. ஊரில் நன்மை தீமை நிகழ்வுகளுக்காகவும் போவார் அப்படியெல்லாம்; போகும் போது சந்திப்பவர்கள் ஆசிரியர்களாக இருக்கலாம்ஃ- உறவினர்களாக இருக்கலாம் அல்லது புதுமுகங்களாகவும் .இருக்கலாம். அநேகமாக அம்மாவின் கதைகளில் என்னைப்பற்றிய விசாரிப்பும் மற்றவர்களின் குழந்தைகளைப்பற்றிய விசாரிப்பும் இடம் பெறும். பிள்ளைகளைப்பற்றி விசாரிப்பதிலும் அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வதிலும்  அம்மா மட்டுமல்ல ஏறக்குறைய எல்லாப் பெற்றோரும் அக்கறையாக இருந்தனர். அம்மா படித்து பட்டம் பெற்றவரல்ல..உத்தியோகம் பார்க்கும் பெண்ணுமல்ல. அம்மா மட்டுமல்ல பொதுவாக பெண்கள் பிள்ளைகள் மேல் அவர்கள் கல்வி நல்லொழுக்கம் என்பவற்றில் அதிக அக்கறை காட்டினார்கள். ஆனால் இன்று கைத்தொலை பேசி தொலைக்காட்சி எனப்பல நவீன சாதனங்கள் பலரது நேரத்தை வீணாக விழுங்கி விடுவதால் அவர்கள் பிள்ளைகளுடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதிக அக்கறையும் கொள்வதில்லை. அக்காலத்து பெற்றோர் சற்று மாறுபட்டவர்களாகவே பிள்ளைகளின் கல்வி ஒழுக்கம் பற்றி அதிக அக்கறை காட்டினார்கள்.

இப்போது பெரும்பாலான பெற்றேர் கவனம் தொலை பேசி தொலைக்காட்சி தொடர் நாடகங்கள் என மாறி அவற்றில் தம்மைத்தொலைத்துக்கொள்வதால் தங்கள் பிள்ளைகளிலும் அவர்கள் கல்வி போன்றவற்றிலும் கவனம் கொள்வது குறைவடைந்து வருகிறது.

ஒரு தடவை வெளிநாடொன்றில் கண்ட காட்சி- பள்ளிகூடத்தில் ஆரம்ப வகுப்பில் பாய் மெத்தை தலையணை ஆகியவற்றுடன் பல வகையில் பல அளவுகளில் மரக்குற்றிகளும் பெரிய அளவிலான துணிப்பொம்மைகளும் காணப்பட்டது. பாடசாலையில் விரும்பிப் படிக்கத்தக்க சூழலை உருவாக்க இத்தகைய ஏற்பாடு.

2Mother_son

எனக்கு இப்போதும் நல்ல நினைவு-சுவரோடு சாய்ந்து கொண்டு படிப்பதிலும் மரக்கிளையிலிருந்து படிப்பதும்  ஓரு வகை இன்பம. இன்றைய கல்லாரி சூழலில் இப்படியெல்லாம் செய்ய முடியாவிட்டாலும் வீட்டில் அவர்களின் விருப்பப்பபடியும் விட்டுப்பிடிக்க வேண்டும்

அரிவரி வகுப்பு முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என உயர்ந்து செல்லும் வகுப்புகளில் ‘பாலபோதினி’ ‘பாலபாடம்’ பின்னர் ‘உமாவாசகம’; என்று புத்தகங்கள் படித்தது நல்ல நினைவு- அப்போது படித்த சில பாடல்கள்

“பச்சைக்கிளியே வா வா

பச்சைக்கிளியே வா வா

பாலும் சோறும் உண்ண வா

கொச்சி மஞ்சள் பூச வா

கொஞ்சி விளையாட வா”…அறுபது வருடங்களுக்குப்பின்பும் நினைவில் நிற்கிறதே

“கந்தன் நல்ல கமக்காரன்

காய்கறித்தோட்டம் செய்திடுவான்”…..என்ற பாடல் வீட்டுத்தோட்டத்துக்கான எண்ணத்தை தோற்றுவித்தது.

சிறு வயதில் அம்மா பாடம் சொல்லித் தந்தாலும் மேல் வகுப்புகளுச் சென்ற போது அவரால் எனக்கு பாடம் சொல்லித்தர முடியவில்லை எனது கல்வித்தகைமைகள் அவரது தகைமைகளை விட அதிகரித்துச்சென்றது. ஆனாலும் அம்மா நான் படித்து முடியும் வரை  பக்கத்தில் இருப்பார்.  சோர்வடையும் போது தேநீரோ கோப்பியோ கிடைக்கும். சில நேரம் புத்தகம் வாசிக்கும் போது நித்திரை வந்தால் ‘போய் படு; என்று செல்லமாகச் சொல்லி பின்னர் காலையில் எழுப்பி விடுவார்.

ஒரு தடவை ஒரு புத்தகத்துக்குள் மயிலிறகொன்றை வைத்துவிட்டு அடிக்கடி மயிலிறகு வைத்த புத்தகத்தை திறந்து பார்த்தபோது அம்மாவிடம் மாட்டிக் கொண்டேன். –‘இது என்னுடன் படிக்கும் மாணவன் தந்தவன். சில நாளில் குட்டி போடும்  என்று கதை சொன்னதும் அம்மா சிரித்து-மயிலிறகு குட்டி போடாது என்ற கதையை பக்குவமாகச் சொல்லி ஏற்றுக்கொண்டதால் பின்னர் அது போன்ற முயற்சிகளில் ஈடுபடதில்லை.

‘சனி நீராடு’ என்பார் எனது தாயார்.

ஆம்! திங்கள் முதல் வெள்ளி வரை பள்ளி-சனி ஞாயிறு வாரஇறுதி விடுமுறை. பள்ளிக்கூட நாட்களில் அவசரம் அவசரமாக விரைவாக குளிப்பு முடிந்து விடும் அதைக், ‘காக குளிப்பு’ என்பார்கள். சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து அரப்பு சீகைக்காய் தேசிக்காய் அவித்து அதனை தலையில் தேய்த்து சூடு போக நல்ல முழுக்கு. மதியஉணவுககான கறியும் பிரமாதம். முழுகியதும் உள்ளி சுட்டுத்தருவார்கள். சாப்பாட்டுக்கு முன் ரசமும் உண்டு. இன்று இரவும் பகலும் மேலதிக வகுப்புகளுக்க படையெடுக்கும் மாணவர்கள் சிலருக்கு சனி நீராட நேரமிருப்பதில்லை.

இடையிடையே அம்மா காலையில் பயறு அவித்து, அதை சர்க்கரை தேங்காயப்பூ சேர்த்து இடித்து சிறு சிறு உருண்டைகளாக்கி காலை உணவாகத் தருவார். பயறு அவித்த நீரை பருகவும் தந்து விடுவார். அந்த நீர் பித்தத்தை போக்கிவிடும்.

இப்படி சில உணவுவகைகள் பசியைபோக்குவதற்கு மட்டுமல்லாமல் நோய்தடுப்புக்கும் பயன் படுத்தப்பட்டது.

ஒரு மரப் பெட்டிக்கு மேல் பல சிறிய புத்தகங்களை அம்மா அடுக்கி வைத்திருந்தார். அவற்றில் ஒன்றை இழுத்தெடுக்கும்போது கீழே விழுந்து விட்டது. மற்றப் பிள்ளைகள் செய்வது போல நானும் அந்தப்புத்தகததை; நெஞ்சு நெற்றி என மாறி மாறி வைத்து ‘அப்பு சாமி! பாடம் வா’ எனக்கும்பிட்டேன. அது முதல்; புத்தகம் கீழே விழவிடக்கூடாது என எண்ணத்தொடங்கிவிடுவோம் அதுவும் அம்மாவுக்கு சந்தோஷம். எல்லாம் நம்பிக்கைதான்.

ஏதாவது விசேட பாடசாலைக்கொண்டாட்டங்கள் இல்லாத நாட்களில் செருப்பு சப்பாத்து போன்ற காலணிகள் அணிவதில்லை. வீட்டுக்குள் நுழைவதற்கு முன் கால் கழுவ வேண்டும். வாளியிலிருந்து கோப்பையில் தண்ணீரை அள்ளி காலுக்கு ஊற்றினல் குதிக்காலோடிணைந்த பின்புறத்துக்கு நீர் படாது. ‘சனியன் பின்காலுக்கூடாக உள்ளே வரப்போகுது’ எனப் பயமுறுத்தி விடுவார்கள். தன்மை வழமையாகச் சொன்னால் கேட்க சிறுவர்கள் கேட்க மாட்டார்கள்.

034 Sunset Bike - Ice Bear, Negombo

சிறிது வளர்ந்தபின் ‘சனியன் பின்காலுக்கூடாக உள்ளே போக மாட்டாது’ என்று தெரியும். ஆனாலும் முழுமையாக கால்களைக் கழுவும் அளவுக்கு துப்பரவாக இருப்போம்.

மரப்பெட்டியின் மேலிருந்து எடுத்த சிறிய புத்தகத்தில் ஒரு வரி-

எழுத்தறிவித்தவன் இறைவன்

பின்னர் பாரதியார் பாடல் ஒன்றை அம்மா பாடிக்காட்டினார்.

மாதா பிதா குரு தெய்வம்

அவர் மலரடி தினம் தினம் வணங்குதல் செய்வோம்

சிறியவனாக பாடசாலை செல்லும் நாட்களில் அம்மா சிறிய சிறிய புத்தகங்களிலிருந்து சில வசனங்களை சொல்லித்தந்து  அவற்றை விளங்கிப்படித்து மனப்பாடம் பண்ணும் வண்ணம் வற்புறுத்தினார்.

மனப்பாடம் பண்ணினால் அவை என்றும் நினைவில் நிலைத்து நிற்கும் எனச்சொல்லி-

‘நான் மறந்தாலும் நா சொல்லும் நமசிவாயமே’ என்ற தேவார அடிகளையும் சொல்லித்தந்தார்.

அப்படி அறிய வேண்டியவற்றை சொல்லித்தந்ததால் அநேகமானவை என் நெஞ்சில் பசுமரத்தாணியாகப் பதிந்துள்ளன. அவற்றில் சில.

அரை குறையாகச் சில விடயங்களைச் செய்யும் போது அம்மாவின் குரல் கேட்கும்-

செய்வன திருந்தச்செய்-

எதிலும் உற்சாகமின்றி சுருண்டு படுப்பதில் சுகம் காணும் போது அம்மா முன்னால் தோற்றம் தருவார்-

சோம்பித்திரியேல்;

கிடைக்கும் புத்தகங்களைக்கூட பார்க்காமல் இருக்கும் போது பக்கத்தில் வருவார்-

நூல் பல கல்

சில வேளைகளில் சுவையான உணவுகளை அதிகம் உண்டு அவதிப்படும் போது எச்சரிப்பார்

மீதுணண் விரும்பேல்;

சிறு வயதில் என் விருப்பப்படி எல்லாவற்றையும் செய்ய எண்ணுகையில் புத்தக வரிகளைச் சுட்டிக்காட்டுவார்

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்…

பின்னர் பெரியவனாக வளரும் போது படித்துப்பாடமாக்கியவை சில திரைப்படப்பாடலகளாகவும் வந்தன. உதாரணத்துக்கு ஒன்று

கால் போன போக்கிலே மனம் போகலாமா

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

ஆன முதலில் அதிகம் செலவானால் மான மழிந்து மதி கெட்டு என்பதும்- திரைப்படபாடலானது

வரவு எட்டணா செலவு பத்தணா

கடைசியில் துந்தணா

என்னை அறிவுடையவனாக்கி வாழ்விப்பவற்றில் சில—

நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க

நல்லார் சொற் கேட்பதும் நன்றே-நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதவும் நன்று.

தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற

தீயார்சொற் கேட்பதும் தீதே- தீயார்

குணங்கள் உரைப்பதும் தீதே அவரோடு

இணங்கி இருப்பதும் தீதே

அம்மா ஒரு கடதாசியில் எனது பெயரையும் சகோதரர்கள் பெயர்களையும் எழுதி அவற்றின் கீழே சில உப தலைப்புகளையும் எழுதி வைத்திருந்தார்.அந்த உப தலைப்புகள்—ஒழுக்கம். சுத்தம்-கீழ்ப்படிவு-வீட்டில் படித்தல்-வீட்டு வேலைகளைச் செய்தல், மாலை நேரத்தில் விளையாடுதல், சகோதர ஒற்றுமை…இப்படியாகச்சில.

ஓவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலையில் ஒவ்வொரு உப தலைப்பின் கீழும் எங்கள் முன்னிலையில் புள்ளிகள் வழங்குவார்.

மாலையில் அதிக நேரம் விளையாடினால் அல்லது தங்கையுடன் சண்டையிட்டால் எனது புள்ளிகள் குறையும்.

தங்கை வீட்டு வேலைகளைச் செய்யாவிட்டால் அவளுக்கு புள்ளிகள் குறையும்.

தம்பி சுத்தமான உடை அணியாவிட்டால் அவனுக்கு புள்ளிகள் குறையும்.

ஓவ்வொரு மாதமுடிவிலும் அதிக புள்ளிகள் பெற்றவருக்கு பரிசும் கிடைக்கும். அதிக புள்ளிகள் பெறுவதற்கான ஆலோசனையும் வழங்கப்படும்.

தமது பிள்ளைகள் அறிய வேண்டியவற்றை அறிவதற்கு அவசியமான வற்றைச் செய்து கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருடையதே. பிள்ளைகள் யாருடையதாக இருப்பினும் சமூக நலனில் அக்கறைகொண்டு வளர்ந்தவர்கள் பிள்ளைகளைத்தங்கள் பிள்ளை போலக்கருதி வழிகாட்டி நல்லவற்றை அறிந்து கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தால் நாடும் வீடும் நன்மையடையும்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற – -திருக்குறள்

thill  உடுவை.எஸ்.தில்லைநடராசா | எழுத்தாளர்

ஆசிரியர்