இவற்றில் முக்கியமானது அமெரிக்க பாதுகாப்பு செயலகத்தின் ஆய்வும் அபிவிருத்திக்கும் (Research and Development – R&D) பொறுப்பான பகுதியில் பணியாற்றி பின்னர் ஓய்வுபெற்ற கேணல் பிலிப் ஜெ.கோசோ (Colonel Philip J.Corso) வெளியிட்ட தகவல்கள் ஆகும். பிலிப் வெளிநாட்டு தொழிநுட்பங்கள் தொடர்பான ஆய்வில் ஜெனர்ல் ஆதர் ருடோ (Gen.Arthur Trudeau) வின் தலைமையின் கீழ் R&D இல் பணியாற்றி வந்தார். இவரது முக்கிய தொழிலாக இருந்தது அமெரிக்க இராணுவத்தின் ஆயுத தொழிநுட்பத்தை ஏனைய நாட்டு தொழிநுட்பங்களுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்து அவற்றுக்கு மாற்றீடாக உள்ள தொழிநுட்பங்களை ஆய்ந்தறிந்து ஜெனரல் ஆதருக்கு அறிக்கை சமர்பிப்பதேயாகும்.
அந்தவகையில் 1961ம் ஆண்டு இவரது அலுவலகத்திற்கு ஜெனரல் ஆதரினால் ஆய்வுக்குட்படுத்தும்படி, அதியுயர் இரகசியம் (top secret) என குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டிருந்த ரொஸ்வெல் தொடர்பான ஆவணங்கள் அவரை ஆழ்ந்த அதிர்ச்சிக்குட்படுத்தியது. ஏனெனில் அதுவரை ரொஸ்வெல் சம்பவத்தை பிலிப் ஒரு கட்டுக்கதையாகவே கருதிவந்திருந்தார்.
ஆனால் ரொஸ்வெலில் கைப்பற்றப்பட்ட பறக்கும் தட்டு மற்றும் அதனுள் பயணித்த வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான தகவல்களை கொண்டிருந்த அவ்வாவணங்களை ஆய்விற்குட்படுத்தி அத்தொழிநுட்பங்களை எவ்வாறு இராணுவ பாதுகாப்பு பொறிமுறைகளுக்குள் உள்வாங்கலாம் என ஆய்ந்து அறிக்கை சமர்பிக்கும்படி ஜெனரல் ஆதர் அவரை பணித்திருந்தது பிலிப்பிற்கு உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிந்தது.
இதன்பின்னரே பிலிப் கோசோ ரொஸ்வெலில் நடந்த சம்பவம் உண்மை என்றும் அரசாங்கம் அச்சம்பவம் தொடர்பாக மக்களை பல வழிகளில் ஏமாற்றி அதனை மூடி மறைத்து வந்துள்ளதென்பதையும் உணர்ந்துகொண்டார். இச்சம்பவத்தை இருட்டடிப்பு செய்வதில் முக்கிய பங்காற்றியவர் உளவுத்துறையின் இயக்குனர் ரோஸ் கிளேன்கோட்டர் (Roscoe Hillenkoetter) என்பதையும் பின்னர் அறிந்துகொண்டார்.
உயர்மட்ட இரகசியமாக பேணப்பட்டு வந்த ரொஸ்வெல் தொடர்பான ஆவணங்களிலிருந்து தான் அறிந்துகொண்ட தகவல்களை பிலிப் தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரே உலகிற்கு வெளிப்படுத்தினார். அத்தகவல்கள், பறக்கும் தட்டில் பயணித்த வேற்றுக்கிரக வாசியினது பிரேத பரிசோதனையையும் பறக்கும் தட்டினது தொழிநுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் எதிர்ப் பொறியியல் (reverse engineering) முறைக்கு உட்படுத்தி மேற்கொண்ட கண்டிபிடிப்புகளையும் உள்ளடக்கியதாக காணப்பட்டது. அவற்றை நாம் சற்று விபரமாக நோக்குவோம்.
வேற்றுக்கிரக உயிரினத்தின் பிரேதபரிசோதனை[1] (Medical autopsy of the Extraterrestrial Biological Entity)
ஆவணப்படுத்தப்பட்டிருந்த தகவல்களின்படி வேற்றுக்கிரக உயிரினத்தின் பிரேதபரிசோதனையானது வொஷிங்டனில் அமைந்துள்ள வோல்ட்ரர் ரீட் (Walter Reed) மருத்துவமனையிலேயே இடம்பெற்றுள்ளது. இப்பிரேத பரிசோதனையை மேற்கொள்ளும்போது அவ்வுயிரினத்தின் உடல் குறிப்பிடத்தக்களவு சிதைந்த நிலையில் இருந்த்தால் சில உடற்கூறுகளை முறையாக ஆராய முடிந்திருக்கவில்லை என உடற்கூற்றியலாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
அதற்கு காரணம் நமது பூமியினது வளிமண்டலம் அவ்வுயிரினத்திற்கு நச்சுத்தன்னையானதாக இருந்திருக்கலாம். பிரேதபரிசோதனையை மேற்கொண்ட உடற்கூற்றியலாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அவ்வுயிரினமானது நீண்ட தூர பிரயாணங்களுக்கு நன்றாக இசைவாக்கம் பெற்றிருந்தது. வெளித்தோற்றத்தில் அவ்வுயிரினம் மனிதனைப் போன்ற உடலமைப்பையே கொண்டிருந்தது. உடலுடன் ஒப்பிடும்போது தலை மிகப்பெரிதாக இருந்தது. அதற்கு பெரிய இரண்டு கண்களும் சிறிய மூக்கும் வாயும் காணப்பட்டது.
நெஞ்சுக்கூட்டினுள் (thorax) ஒப்பீடளவில் அது மிகப்பெரிய இருதயத்தினையும் சுவாசப்பைகளையும் கொண்டிருந்தது. அதனது குறைந்த கொள்ளளவுடைய நன்றாக விருத்தியடையாத சுற்றோட்டத்தொகுதியில் (circulatory system) நிணநீர் (lymph) போன்ற பாயம் (fluid) இருப்பதையும் அவதானித்துள்ளனர். அப்பாயதால் விருத்தியடையாத சுற்றோற்றத்தொகுதியில் வேகமாக சுற்றி ஓடமுடியாது.
எனவே அதனது இருதயம் மனிதனைப் போன்றதன்றி குறைந்த எண்ணிக்கையான துடிப்புகளை மேற்கொண்டே பாயத்தை மெதுவாக அதனது சுற்றோட்டத்தொகுதியில் ஓடவிட்டுள்ளது. இப்பொறிமுறைகள் அவ்வுயிரினம் மெதுவான அனுசேப செயன்முறையையும் (slow metabolism) கூடிய ஆயுளையும் கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது.
தொடரும்…
நன்றி : பதிவுகள் இணையம் | பொ.மனோ