காணாமல் ஆக்கப்பட்டவர்களை நிலத்தில் தோண்டித்தான் எடுக்க வேண்டும் என்று விமல் வீரவன்ச கூறியிருக்கிறார். இதை அவர் மட்டும்தான் கூறுகிறார் என்று இல்லை. ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய அதை கூறிவிட்டார். அவருக்கு முன் ரணில் விக்கிரமசிங்க அதை கூறிவிட்டார். சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல சம்பந்தரும் அப்படித்தான் கூறுகிறார்.

ஆனால் அந்த உண்மையை கூறுவதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் தான் வேறுபாடு உண்டு. 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தன்று அதை ரணில் விக்ரமசிங்க கூறினார். காணாமல் போனவர்களில் பலர் வெளிநாடு சென்று இருக்கலாம் என்று அவர் சொன்னார். அதைத்தான் புதிய ஜனாதிபதியும் சொன்னார். இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் அவர் சொன்னார். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் இயக்கம் பிடித்துச் சென்றிருக்கலாம் என்று அவர் சொன்னார். அதைத்தான் இப்பொழுது விமல் வீரவன்சவும் கூறியிருக்கிறார். அவர்கள் அனைவரும் புதைக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.

சம்பந்தரும் காணாமல் ஆக்கப்படடவர்கள் உயிருடன் இல்லை என்பதே உண்மை என்று கூறுகிறார். கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீன குழுவிடம் அவர் அவ்வாறு கூறினார்.மேற்படி குழு கொழும்பில் சம்பந்தரை அவருடைய இல்லத்தில் சந்தித்து.அப்பொழுது அக் குழுவில் அங்கம் வகித்த ஓர் அங்கிலிக்கன் மதகுரு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சம்பந்தரிடம் கேள்வி கேட்டார். அப்போது சம்பந்தர் மேற்கண்டவாறு பதில் சொன்னார். அவர் அப்படி சொன்னதும் அந்த மதகுருவின் கண்கள் கலங்கிவிட்டன. அதற்குப்பின் அவர் எதுவுமே பேசவில்லை.

இவர்கள் எல்லாரோடும் ஒப்பிடுகையில் விமல் வீரவன்ச வெளிப்படையாக கதைக்கிறார். காணாமல் ஆக்கப்பட்ட ஆக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டு விட்டார்கள் என்று அவர் கூறுகிறார். விமல் வீரவன்ச ஒரு முன்னாள் ஜேவிபி உறுப்பினர். ஜெவிபி இயக்கத்தின் இனவாத முகங்களில் அவர் மிகத் தீவிரமானவர். யுத்த வெற்றி வாதத்தின் பங்காளிகளில் ஒருவர் . எனவே அவர் அப்படி கூறுகிறார். ஆனால் அவர் ஒரு காலத்தில் அவரோடு ஒன்றாகச் சாப்பிட்டு ஒன்றாக உறங்கிய ஜேவிபி தோழர்கள் பலர் கடந்த தசாப்தங்களில் கொன்று புதைத்க்கப்பட்டு விட்டார்கள். அல்லது குற்றுயிராக ரயர் போட்டு கொளுத்தப்பட்டு விட்டார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது? யார் கொன்றது ? என்பது குறித்து யாருமே கிடைக்கவில்லை. அமரர் சுனிலா அபேசேகர போன்ற மனித உரிமைவாதிகள் சிலர் அதைப் பற்றி பேசினார்கள் . ஆனால் எந்த இயக்கத்தில் இருந்ததற்காக அவர்கள் கொல்லப்பட்டார்களோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டார்களோ அந்த இயக்கம் அவர்கள் அவர்களைப்பற்றி கேட்பதை நிறுத்தி விட்டது.

தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கதை மறக்கப்பட்டு விட்டது என்று இளைப்பாறிய பேராசிரியர் கலாநிதி ஜெயதிலக்க கூறினார். சில ஆண்டுகளுக்கு முன் வவுனியாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவர் அவ்வாறு கூறினார். தமிழ் சிவில் சமூக அமையம் ஒழுங்கு செய்த அக் கருத்தரங்கு வவுனியாவில் நடந்தது. அதில் ஜெயதிலக்க மேற்கண்டவாறு கூறினார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எப்படி மறக்க பட்டார்கள் ?அவர்களைக் குறித்து குரல் எழுப்ப வேண்டிய ஜேவிபி ஏன் அதைச் செய்யவில்லை? என்று ஒரு சிங்கள செயற்பாட்டாளரிடம் கேட்டேன். அவர் சொன்னார் “அவர்களை காணாமல் ஆக்கியவர்கள் தான் உங்களுடைய ஆட்களையும் காணாமல் ஆக்கினார்கள். எனவே காணாமல் ஆக்கியவர்களை விசாரிக்க வேண்டும் நீதியின் முன் நிறுத்த வேண்டும் தண்டிக்க வேண்டும் என்று கேட்டால் இலங்கைத்தீவின் படைத்தர்ப்பைத்தான் விசாரிக்க வேண்டியிருக்கும். ஆனால் கேவிபி யுத்த வெற்றியைக் கொண்டாடுகிறது. அது யுத்த வெற்றியின்பங்காளியாக காணப்படுகிறது. யுத்த வெற்றியைக் கொண்டாடும் ஒரு கட்சி அந்த வெற்றி நாயகர்களை விசாரிக்க கேட்குமா? கேட்காது. இது விடயத்தில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தனக்கும் நீதி தேவையில்லை இன்று ஜேவிபி நம்புகிறது. அதனால்தான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை அது கைவிட்டது. அதை கடந்து வந்துவிட்டது” என்று அவர் சொன்னார்.

ஜேவிபி மட்டுமில்ல ஒட்டுமொத்த தென்னிலங்கை அரசியலே அங்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தை கடந்து வந்து விட்டது. ஒப்பீட்டளவில் தமிழ் மக்கள் மத்தியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடவும் அதிக தொகையினர் அங்கு காணாமல் ஆக்கப்பட்டார்கள். உத்தியோக பூர்வ தரவுகளின்படி கிட்டத்தட்ட 12000 பேர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உத்தியோகப்பற்றற்ற தகவல்களின்படி கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தென்னிலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.

இது விடயத்தில் சில மனித உரிமைவாதிகளை தவிர பெரும்பாலான சிங்கள தலைவர்கள் அந்த விவகாரத்தை அப்படியே கைவிட்டு விட்டார்கள். அதை மறந்துவிட்டார்கள். அதை கடந்து வந்து விட்டார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு அமரர் சுனிலா அபேசேகர அதாவது அவர் இறப்பதற்கு முன்பு சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அது வழங்கப்பட்ட காலம் மலையகத்தில் ஓரிடத்தில் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. அதைப்பற்றி தனது நேர்காணலில் குறிப்பிட்டார். இதுவே லத்தீன் அமெரிக்கா என்றால் அங்கே அப் புதைகுழியை நோக்கி பாதிக்கப்பட்ட மக்கள் படையெடுத்து வருவார்கள். தங்களுடைய உறவினர்களின் எச்சங்கள் உண்டா என்று தேடுவார்கள்.ஆனால் இலங்கைத் தீவில் அப்படி எதுவும் நடக்கவில்லை. புதைகுழியை நோக்கி பாதிக்கப்பட்ட மக்கள் யாருமே பெருமளவில் வரவில்லை என்று சுனிலா கவலைப்பட்டு இருந்தார்.

இது ஒரு கொடுமையான உண்மை. இலங்கைத் தீவு மனித புதைகுழிகளுடன் சகஜமாக வாழப் பழகி விட்டது. ஒரு மேற்கத்திய ஊடகம் ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சிக்கு பின் பின்வருமாறு எழுதியது “காணாமல்போனவர்களை அதிகம் உடைய ஒரு தீவு” என்று.

இவ்வாறு தமது சொந்த இனத்துக்குள்ளேயே எரிக்கப்பட்டும் புதைக்கப்பட்டும் ஆறுகளில் வீசப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை கடந்து வருகிற ஓர் அரசியல் பாரம்பரியமானது தன்னுடைய இனமல்லாத வேறு ஒரு இனத்தின் விவகாரத்தில் எப்படி நடந்து கொள்ளும்?

இக்கேள்வியை உலக சமூகத்தை நோக்கியும் ஐநா வை நோக்கி
யும் மனித உரிமை நிறுவனங்களை நோக்கியும் தமிழ் மக்களை நோக்கியும் கட்டுரை கேட்கிறது. இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மறக்கும் ஒரு தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?

இது விடயத்தில் ஆகப் பிந்திய கூற்று விமல் வீரவன்ச உடையது. அவர் ஒப்பீட்டளவில் வெளிப்படையாக ஒரு உண்மையை போட்டு உடைக்கிறார் .மண்ணில் தோண்டி எடுங்கள் என்று கூறுவதன் மூலம் அவர்கள் புதைக்கப்ப்பட்டு விட்டார்கள் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவர்களை புதைத்தது யார்? எங்கே புதைத்தது? ஏன் புதைத்தது? எந்த நீதி பரிபாலன கட்டமைப்பின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டார்கள் ?எந்த நீதிமன்றம் அவர்களுக்கு மரணத் தீர்ப்பு வழங்கியது ?அதுவும் காணாமல் ஆக்குமாறு எந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது? அந்த தண்டனையை நிறைவேற்றிய சட்டத்தின் காவல் அமைப்பு எது?

இக்கேள்விகளுக்கு வீரவன்சவும் உட்பட அனைத்து சிங்களத் தலைவர்களும் பதில் கூறவேண்டும். ஆனால் அவர்கள் அதற்கு ஒரு டெம்ப்ளேட் பதில் வைத்திருக்கிறார்கள். அது என்னவெனில் புலிகள் இயக்கமே அதற்கு பொறுப்பு என்பதுதான். அப்படி என்றால் இறுதிக்கட்ட போரில் அரச படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது சரணடைந்த புலிகள் இயக்கத்தவர்களை யார் காணாமல் ஆக்கியது?

எனினும் இது விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிரோடு இல்லை என்று கூறுவதே அரசாங்கத்தை பொறுத்தவரை பாதுகாப்பானது. ஏனெனில் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் எங்கே? யாரால்? தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்?ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்? எந்த நீதி பரிபாலன கட்டமைப்பின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் ?போன்ற கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் இவ்வாறு ஒரு தொகுதி கைதிகளை ரகசியமாக தடுத்து வைத்து இருக்கிறதா ?என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவ்வாறு பதில் கூற புறப்பட்டால் இலங்கை அரசாங்கம் ஒரு தோல்வியுற்ற அரசாங்கமாக வெளி அரங்கில் பார்க்கப்படும். எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை என்று கூறுவதே ஒப்பீட்டளவில் அவர்களுக்கு பாதுகாப்பானது. ஏற்கனவே காணாமல் ஆக்கப்பட்ட சிங்கள மக்களை எப்படி மறந்துவிட முடிந்ததோ அப்படியே வரும் காலங்களில் தமிழ் மக்களின் விடயத்திலும் மறதிதான் அதற்கு சரியான தீர்வு என்று சிங்கள அரசியல்வாதிகள் நம்புகிறார்களா?

அவர்கள் நம்புகிறார்களோ இல்லையோ அவர்களின் நம்பிக்கைகளை மெய்ப்பிக்கும் விதத்தில் தான் தமிழ் பகுதிகளில் நிலைமை காணப்படுகிறதா? குறிப்பாக கடந்த செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் என்றழைக்கப்பட்ட நாளில் கிளிநொச்சியில் நடந்த சம்பவங்கள் அதைத்தான் மெய்ப்பிக்கின்றனவா?

கடந்த செவ்வாய்க்கிழமை சுதந்திர தினம் அன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒழுங்குபடுத்திய இரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளும் தமிழ் மக்கள் ஒரு திரளாக இல்லை என்பதைத்தான் காட்டுகின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில். கூட தமிழ் தரப்பு ஒற்றுமைப்பட முடியவில்லை. அன்றைக்கு கிளிநொச்சியில் கூட்டமைப்பினரின் தலைமையில் நடந்த எதிர்ப்பு நடவடிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். ஆனால் அந்த எதிர்ப்பு நடவடிக்கையில் பங்குபற்றிய மக்களின் மொத்த தொகையைவிட அதிகரித்த தொகையினர் மற்றொரு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமை தாங்கி இருக்கிறது. அதில் ஒர் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டவர்கள் “காசுக்காக போராட மாட்டோம் என்று குரல் எழுப்பினார்கள்” அப்படியென்றால் யார் காசு கொடுப்பது? யார் காசு வாங்குவது? யாரை யார் இயக்குவது?

இறுதிக்கட்ட போரில் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு சிறிய தமிழ் பட்டினத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக இரண்டு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இது எதைக் காட்டுகிறது? தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெறும் பொருட்டு ஒரு பெரும் திரளாக மேலெழுவதற்கு இன்னும் காத்திருக்க வேண்டியிருக்கிறது என்பதைதானா? சுதந்திர தினம் என்றழைக்கப்படட ஒரு நாளைக் கொண்டாடுவதில் நாடு இன ரீதியாக இரண்டாகப் பிளவுண்டு காணப்பட்ட ஒரு நாளில் தமிழ் மக்களும் இரண்டாக அல்லது அதைவிட பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறார்கள் என்பதையா?

-நிலாந்தன்