Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை இலங்கையில் இனவாத ஆட்டம் ஆரம்பம் | தாயகன்

இலங்கையில் இனவாத ஆட்டம் ஆரம்பம் | தாயகன்

7 minutes read

னாதிபதி கோத்தபய ராஜபக்ச -பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசில் தமிழ்,முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் கடந்த புதன்கிழமை கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகுல்மடுவ மண்டபத்தில் நடந்தேறிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமனம் மற்றும் அதன் பின்னரான அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனத்தின் மூலம் நிதர்சனமாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின் 25 பேரைக் கொண்ட அமைச்சரவையில் ஒரு தமிழருக்கும் ஒரு முஸ்லிமுக்கும் 39 பேரைக்கொண்ட இராஜாங்க அமைச்சர்களில் இரு தமிழர்களுக்கும் நியமனங்களை வழங்கியும் மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவர் பதவிகளில் தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகப் பிரதேசங்களான திருகோணமலை ,அம்பாறை மாவட்டங்களுக்கு சிங்களவர்களை நியமித்தும் 25 அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனத்தில் எந்தவொரு தமிழ் முஸ்லிமுக்கும் இடம்வழங்காதும் தந்து பேரினவாத முகத்தை எந்தவித மனக்கிலேசமுமின்றி அப்பட்டமாக கோத்தபாய அரசு வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி நடந்த இலங்கை பாராளுமன்றத்துக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவுக் கட்சிகளின் சார்பில் என்றுமில்லாதவாறு தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த அங்கயன் இராமநாதன், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. யை சேர்ந்த திலீபன், பொதுஜன பெரமுனவை சேர்ந்த காதர் மஸ்தான் என 4 பேர் வெற்றி பெற்றனர்.

அதேபோன்று தமிழ், முஸ்லிம் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவனேசதுரை சந்திரகாந்தன்,பொதுஜன பெரமுனவை சேர்ந்த முன்னாள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யான வியாழேந்திரன் ஆகியோரும் திகாமடுல்ல மாவட்டத்தில்,தேசிய காங்கிரஸை சேர்ந்த முன்னாள் அமைச்சரான அதாவுல்லாவும் வெற்றி பெற்றனர். அதேபோன்று தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ரமேஸ்வரன் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர்.

எனவே இந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தலைவராகக்கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் என்றுமில்லாதவாறு 11 தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையிலேயே அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர்கள், அமைச்சு செயலாளர்கள் நியமனங்களில் தமிழ், முஸ்லிம்கள் திட்டமிட்டு பொதுஜன பெரமுன அரசினால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

கோத்தபாய ராஜபக்ச அரசின் அமைச்சரவையில் முன்னர் பிரதி அமைச்சர் பதவிகளைக்கூட வகித்திராத நாமல் ராஜபக்சவுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும், உதய கம்மன்பிலவுக்கு வலுச் சக்தி துறை அமைச்சும் நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்தில் பொதுஜன பெரமுனவினர் மீது தொடுக்கப்பட்ட இலஞ்ச , ஊழல் மோசடிக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவினருக்கு ஆதரவாக வாதாடிய ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்கு தேசியப்பட்டியல் ஊடாக எம்.பி. பதவியும் நீதி அமைச்சும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் வடக்கிற்கு மட்டும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கிற்கு இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரனும் மலையகத்துக்கு இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமானுமே நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ், முஸ்லிம் சார்பில் மலையகத்துக்கு அமைச்சரவை அமைச்சு வழங்கப்படவில்லை. எனினும் அமைச்சரவை அமைச்சராக முஸ்லிமான அலி சப்ரி இருக்கின்றபோதும் அவர் தேசியப்பட்டியல் ஊடாகவே வந்தவர் என்பதனால் எந்த மாகாணத்தையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. கிழக்கு மாகாணத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு சிங்கள அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை. இதே போன்றே பொலனறுவை மாவட்டம், மொனராகல மாவட்டம்,கேகாலை மாவட்டம் ஆகியவற்றுக்கும் அமைச்சரவை அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை.

கண்டி மாவட்டத்தில் மஹிந்தானந்த அளுத்கமகே , கெஹெலிய ரம்புக்வெல்ல, நுவரெலியா மாவட்டத்தில் சி.பி.ரத்நாயக்க, பதுளை மாவட்டத்தில் நிமல் சிறிபால டி சில்வா ,காலி மாவட்டத்தில் ரமேஷ் பத்திரன,மாத்தறை மாவட்டத்தில் டலஸ் அழகப்பெரும, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த அமரவீர, சமல் ராஜபக்ஷ , மாத்தளை மாவட்டத்தில் ஜனக பண்டார தென்னகோன், களுத்துறை மாவட்டத்தில் ரோஹித அபேகுணவர்தன, இரத்தினபுரி மாவட்டத்தில் பவித்ரா வன்னியாராச்சி ,வாசுதேவ நாணயக்கார, அநுராதபுரம் மாவட்டத்தில் எஸ்.எம் சந்திரசேன,குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ ஜொன்ஸ்டன் பெரேரா, கொழும்பு மாவட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பந்துல குணவர்தன, தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே,கம்பஹா மாவட்டத்தில் பிரசன்ன ரணதுங்க என்ற வகையில் அமைச்சரவை அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசியப்பட்டியலில் இரு அமைச்சரவை அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கொழும்பு மாவட்டம் 5 அமைச்சரவை அமைச்சுக்களைப்பெற்று முதலிடத்திலும் அம்பாந்தோட்டை மாவட்டம் 3 அமைச்சரவை அமைச்சுக்களைப்பெற்று இரண்டாமிடத்திலும் உள்ளன.

அதுமட்டுமன்றி இராஜாங்க அமைச்சுக்களில் கூட முன்னர் பிரதி அமைச்சுப்பதவிகளைக்கூட வகித்திராதவர்களுக்கும் தேசியப்பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. தேனுக விதானகமகே , சிசிர ஜயக்கொடி, பியல் நிசாந்த டி சில்வா பிரசன்ன ரணவீர டீ.வீ.சானக டீ.பீ. ஹேரத், சசிந்திர ராஜபக்‌ஷ,நாலக கொடஹேவா, ஜீவன் தொண்டமான், அஜித் நிவாட் கப்ரால் – சீதா அரும்பேபொல, சன்ன ஜயசுமன ஆகியவர்களுக்கே இவ்வாறு இராஜாங்க அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் நாலக கொடஹேவா, அஜித் நிவாட் கப்ரால், சீதா அரும்பேபொல ஆகியோர் தேசியப்பட்டியல் உறுப்பினர்களாவர்.

இதேவேளை ஜனாதிபதி கோதாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் 25 பேரைக்கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில் முக்கியமான 8 அமைச்சுக்குள் ராஜபக்ச குடும்பத்துக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் பாதுகாப்புஅமைச்சும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நிதி, புத்த சாசனம், மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி,வீடமைப்பு அமைச்சுக்களும் சமல் ராஜபக்சவிடம் நீர்ப்பாசன அமைச்சும் நாமல் ராஜபக்சவிடம் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்‌ஷவும் நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழங்கள், மிளகாய், வெங்காயம் விதை உற்பத்தி உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்சவின் புதல்வரான சசிந்திர ராஜபக்‌சவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இம்முறை இராஜாங்க அமைச்சு நியமனங்கள் எதிர்க்கட்சிகளின் கிண்டல்களுக்கு இலக்காகியுள்ளதுடன் மக்களும் இந்த நியமனங்களை வேடிக்கையாகவே பேசுகின்றனர். கரும்பு ,சோளம் ,மரமுந்திரிகை , மிளகு , கராம்பு, கறுவா, வெற்றிலை க்கு ஒருஇராஜாங்க அமைச்சர், ,உர உற்பத்தி , விநியோகம் , கிருமிநாசினி பாவனை க்கு ஒரு இராஜாங்க அமைச்சர், அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு க்கு ஒரு இராஜாங்க அமைச்சர், மகாவலி வலயங்களை அண்மித்த கால்வாய்களுக்கு ஒரு இராஜாங்க அமைச்சர், வயல் நிலங்கள் அதனை அண்மித்த குளங்கள் , நீர்த்தேக்கங்களுக்கு ஒரு இராஜாங்க அமைச்சர், பிரம்புகள், பித்தளை , மட்பாண்டங்கள், மரக் கைத்தொழிலுக்கு ஒரு இராஜாங்க அமைச்சர்,கால்நடை வளங்கள் , பண்ணை மேம்பாடு , பால் மற்றும் முட்டைக்கு ஒரு இராஜாங்க அமைச்சர்,மரக்கறிகள் , பழங்கள் , மிளகாய் , வெங்காயம் விதை உற்பத்தி க்கு ஒரு இராஜாங்க அமைச்சர், கழிவுப்பொருட்கள் அகற்றல் , சமூதாய தூய்மைப்படுத்தலுக்கு ஒரு இராஜாங்க அமைச்சர் என தமது உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒரு அமைச்சை வழங்க வேண்டுமென்ற ரீதியில் ஒரு அமைச்சு பல அமைச்சுக்களாகப் பிரித்து வழங்கியுள்ளனர்.

எனினும் கடந்த ஒவ்வொரு அரசிலும் இருந்து வந்த மீள்குடியேற்ற அமைச்சு, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு,தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழி மற்றும் நல்லிணக்க அமைச்சு, மலைநாட்டு புதிய கிராம உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சு போன்ற சிறுபான்மையினங்களான தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய அமைச்சுக்கள் பொதுஜன பெரமுன அரசில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளன. தமிழ், முஸ்லிம்களுக்கான அமைச்சுக்கள் மட்டுமல்ல அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களும் இல்லாது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமிழ் ,முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு,கிழக்கு மற்றும் மலையகத்தில் என்றுமில்லாதவாறு 11 தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளைப்பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் 11 பேரில் வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஈ.பி.டி.பி. செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவியும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வியாழேந்திரனுக்கும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி ஜீவன் தொண்டைமானுக்கும் இராஜாங்க அமைச்சுப்பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. மிகுதி 8 பேரில் கிழக்குமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதாவுல்லா ஒரு கட்சித்தலைவர்.அத்துடன் முன்னாள் அமைச்சரவை அமைச்சராகவும் இருந்தவர். அவருக்கு எந்த அமைச்சுப் பதவியும் வழங்கப்படவில்லை. அதேபோன்று வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கயன் கடந்த மைத்திரி அரசில் முன்னாள் இராஜாங்க அமைச்சராக இருந்தவர். அதேபோன்று காதர் மஸ்தான் பிரதி அமைச்சராக இருந்தவர். இவர்கள் இருவருக்கும் எந்தவொரு அமைச்சும் வழங்கப்படவில்லை.

புதிய முகங்களுக்கு கூட தேசியப்பட்டியலையும் வழங்கி இராஜாங்க அமைச்சுக்களையும் வழங்கிய கோத்தபாய அரசு வடக்கு,கிழக்கில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பொதுஜன பெரமுனவிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் பொதுஜன பெரமுன ஆதரவு தனிக்கட்சியாகவும் போட்டியிட்டு வெற்றி பெற்று, “நாம் வடக்கு கிழக்கிலும் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவோம்.வடக்கிலும் நாம் வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளோம்” என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச பெருமை பேசுவதற்கான கள நிலைமையை ஏற்படுத்திக்கொடுத்த அதாவுல்லா, அங்கயன், காதர்மஸ்தான் ஆகியோரை இராஜாங்க அமைச்சுப்பதவிகள் கூட வழங்காது புறக்கணித்தமை திட்டமிட்ட இன, மத ரீதியான பாகுபாடு.

சரி அமைச்சரவை அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களில் தான் தமிழ் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று பார்த்தால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் நியமனத்தில் கூட தமிழ், முஸ்லீம் தாயகப்பகுதிகளில் சிங்களத் திணிப்பு இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாணத்தில் அந்த திணிப்பு இடம்பெறாதபோதும் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் திருகோணமலை மற்றும் திகாமடுல்ல [அம்பாறை]மாவட்டங்களுக்கு சிங்கள எம்.பி.க்களே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை . மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுன வில் போட்டியிட்ட வியாழேந்திரன் வெற்றிபெற்ற நிலையில் அவருக்கு இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தவர் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினை சேர்ந்த சிவநேசத்துரை சந்திரகாந்தன். இவர் தற்போது சிறையில் இருக்கின்றார்.

அதேவேளை இராஜாங்க அமைச்சுப்பதவிகளில் ஒன்று மிகுதியாக இருப்பதுடன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான ஒருங்கிணைப்பாளர் பதவியும் வெற்றிடமாக இருப்பதனால் இவற்றுக்கு சிவநேசத்துரை சந்திரகாந்தன் நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அமைச்சரவை அமைச்சில் தமிழ் முஸ்லிம்களுக்கு இரு இடங்களும் இராஜாங்க அமைச்சுக்களில் தமிழர்களுக்கு இரு இடங்களும் வழங்கப்பட்ட போதும் அமைச்சுக்களுக்கான செயலாளர் நியமனங்களில் எந்தவொரு தமிழ், முஸ்லிமும் உள்வாங்கப்படவில்லை. அமைச்சரவை அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள், அமைச்சு செயலாளர்கள் நியமனங்களில் தனது முதல் ஆட்டத்தை தொடங்கியுள்ள கோத்தபாய ராஜபக்ச அரசின் அடுத்த ஆட்டங்கள் எப்படி இருக்குமென்பதனை இன்னும் சில நாட்களில் கண்டு கொள்ளக்கூடியதாக இருக்கும்.

தாயகன்

நன்றிதினக்குரல்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More