ஆபாசப்பட நடிகை வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் நியூயார்க் நீதிமன்றில் கைது செய்யப்பட்டார்.
தனது கைது பற்றி டொனால்டு டிரம்ப் கூறுகையில், “அமெரிக்காவில் எனக்கு இப்படி நடக்கும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. வழக்கில், குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. நான் நிரபராதி.
நம் நாடு நரகத்திற்கு போகிறது. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக அச்சமின்றி பாதுகாத்ததுதான்” என்று கூறினார்.
மேலும் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்தது உட்பட தன் மீதான 34 குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலரை டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நியூயார்க் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
அங்கு அவர் சட்டமுறைப்படி கைது செய்யப்பட்டார். அவரிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால் விலங்கு மாட்டப்படவில்லை.
சுமார் 57 நிமிடங்கள் நீதிமன்றத்தில் இருந்த டிரம்ப், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.