சமூக ஆர்வலர்கள் சிலர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் மெழுகுசிலையை திருடி, ஜனாதிபதியின் கொள்கைக்கு மாறுபட்ட செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், உக்ரேனுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்ய எ நிறுவனங்களை ஊக்குவிக்கிறார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த எதிர்ப்புக்கு வலுசேர்க்கும் முகமாக, தலைநகர் பாரிஸில் உள்ள கிரவின் அருங்காட்சியகத்திலிருந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மெழுகுச் சிலையை சமூக ஆர்வலர்கள் திருடிச் சென்றனர்.
Greenpeace என்ற அமைப்பைச் சேர்ந்த அவர்கள், அந்தச் சிலையை ரஷ்யத் தூதரகத்தின் முன் வைத்தனர். ரஷ்யாவுடனான பிரான்ஸின் பொருளியல் உறவைக் குறைகூறி, அவர்கள் அவ்வாறு செய்தனர்.
இரு பெண்களும் ஓர் ஆணும் சுற்றுப் பயணிகளைப்போல அருங்காட்சியகத்தினுள் நுழைந்தனர். உள்ளே சென்றதும் ஊழியர்கள் போல் ஆடை மாற்றிக்கொண்ட அவர்கள், மெழுகுச் சிலையை அவசர நுழைவாயில் வழியாக வெளியே எடுத்துச் சென்றனர்.
அந்த மெழுகுச் சிலையின் மதிப்பு சுமார் 40,000 யூரோ ஆகும்.
அதேவேளை, சிலைக்கு எவ்வித சேதமுமின்றி திருப்பிக் கொடுக்கப்படும் என்று அருங்காட்சியகத்திடம் குறித்த சமூக ஆர்வலர்கள் உறுதியளித்துள்ளனர்.