அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், இங்கிலாந்தின் பொதுத் தொலைக்காட்சி ஊடகமான பிபிசி (BBC)க்கு எதிராக பெரும் அளவிலான அவதூறு வழக்கைத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். பிபிசி தனது உரையைத் திருத்தி வெளியிட்டதன் மூலம், Capitol கட்டடத்தை தாக்குமாறு அவர் ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டது போல் தோன்றச் செய்ததாக டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஒவ்வொரு வழக்கிற்கும் குறைந்தபட்சம் 5 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கோரப்படுவதாகவும், இரண்டு வழக்குகளின் மொத்த இழப்பீட்டு தொகை 10 பில்லியன் டொலராக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இந்த வழக்கை இன்று மாலை அல்லது நாளை காலை தாக்கல் செய்வோம்,” என செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார்.
பிபிசிக்கு எதிராக பில்லியன் டொலர் அளவிலான அவதூறு வழக்கைத் தொடுப்பதாக சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அவர் எச்சரித்திருந்தார். “நான் சொல்லாத விஷயங்களை நான் சொன்னதாக அவர்கள் காட்டினார்கள்,” என அவர் கூறி, எந்த ஆதாரமும் வழங்காமல் பிபிசி செயற்கை நுண்ணறிவு அல்லது வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தனது வார்த்தைகளைப் புனைந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
டிரம்பின் உரையைப் பிபிசி திருத்தி வெளியிட்டதாக நவம்பர் மாதத்தில் எழுந்த சர்ச்சை, அந்த ஊடக நிறுவனத்திற்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, பிபிசியின் தலைமை இயக்குநரும் செய்திப் பிரிவின் தலைமை அதிகாரியும் பதவி விலகினர். மேலும், பிபிசியின் தலைவர் சமீர் ஷா, டிரம்பிடம் மன்னிப்புக் கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.
பல சர்வதேச ஊடகங்கள் நடுநிலையற்ற முறையில் செய்தி வெளியிடுகின்றன என்ற குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.