அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்த வாரம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சீன அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பயணத்தின் போது, அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) ஐ சந்திக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த விஜயம், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவுகளில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. மேலும், சுமார் ஒரு தசாப்தத்திற்கு பின்னர் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் முதல் விஜயம் என்பதால், உலக அரசியல் வட்டாரங்களிலும் அதிக கவனம் பெற்றுள்ளது.
உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதார சக்திகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகம், தொழில்நுட்பம், இறக்குமதி வரிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் நடைபெறவுள்ள ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீண்டும் சீராக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, Boeing, Citigroup மற்றும் Qualcomm உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளும் ட்ரம்புடன் சீனாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சீன நிறுவனங்களுடன் புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, 2025 ஏப்ரல் மாதத்தில் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த உயர்ந்த இறக்குமதி வரிகள் காரணமாக அமெரிக்கா – சீனா இடையே கடுமையான வர்த்தகப் போர் உருவானது. அதன் பின்னர் இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று 100 சதவீதத்திற்கும் அதிகமான வரிகளை விதித்தன. இதனால் உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது.
பின்னர் சில கட்டங்களில் சமரச பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, சில வரிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டாலும், இரு நாடுகளுக்கிடையிலான அரசியல் மற்றும் பொருளாதார பதற்றம் இன்னும் முழுமையாக குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.