வார்விக்ஷயரில் (Warwickshire) உள்ள ஒரு ரயில்வே மேம்பாலத்தின் மீது லொறி மோதியதால், பாலம் பகுதியளவில் இடிந்து விழுந்தது. இந்த விபத்து தொடர்பாக 64 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரயில் பயணிகளுக்கு ஆபத்து விளைவித்தமை மற்றும் விபத்து நடந்த பிறகு வாகனத்தை நிறுத்தாமல் சென்றமை ஆகிய சந்தேகங்களின் அடிப்படையில் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வியாழக்கிழமை மதியம் 15:30 மணியளவில் ஒயிட்ஸ்டோனில் (Whitestone) உள்ள மார்ஸ்டன் லேன் (Marston Lane) பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் பாலம் கடுமையாக சேதமடைந்ததாக நெட்வொர்க் ரயில் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தால் இலண்டன் மற்றும் ஸ்காட்லாந்து இடையிலான முக்கிய ரயில் பாதையான வெஸ்ட் கோஸ்ட் மெயின் லைன் (West Coast Main Line) பாதிக்கப்பட்டது. ஃபோர்டர்ஸ் லேன் (Forders Lane) மற்றும் நுனீட்டன் வீதி (Nuneaton Road) இடையிலான வீதிப் போக்குவரத்தும் இடைநிறுத்தப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை நுனீட்டன் மற்றும் ரக்பி (Rugby) இடையிலான ரயில் பாதைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இருப்பினும், ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுவதால், பயணிகள் தங்கள் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவான்டி வெஸ்ட் கோஸ்ட் (Avanti West Coast) மற்றும் இலண்டன் நார்த்வெஸ்டர்ன் இரயில்வே (London Northwestern Railway) சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, வியாழக்கிழமை பயணிக்க வேண்டிய பயணிகள், அதே பயணச் சீட்டுகளை வெள்ளிக்கிழமை பயன்படுத்தலாம் அல்லது முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க் ரயில் அமைப்பின் புள்ளிவிவரப்படி, ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை சுமார் 1,666 முறை பாலங்கள் மீது வாகனங்கள் மோதியுள்ளன. இத்தகைய விபத்துகளால் ஆண்டுக்கு சுமார் 23 மில்லியன் பவுண்டுகள் வரை பழுதுபார்ப்புச் செலவு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லொறி ஓட்டுநர்களில் 52 சதவீதமானோர் தாழ்வான பாலங்களைக் கருத்தில் கொள்வதில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.