பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பிய 72 பேர், இங்கிலாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வூல்விச் கிரவுன் நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்றுகூடிய இந்தக் குழுவினர், பாலஸ்தீன ஆதரவு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இஸ்ரேலைத் தளமாகக் கொண்டு இங்கிலாந்தில் இயங்கி வந்த ஒரு தொழிற்சாலையை இலக்காகக் கொண்டு, கடந்த 2024ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு ஆர்வலர்கள், நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இந்த நால்வருக்கும் ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஏராளமானோர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே திரண்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டபோது சட்டம் மற்றும் ஒழுங்கை மீறியதாகக் கூறி, பொலிஸார் தலையிட்டு, 72 பேரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது எந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட உள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் பின்னர் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரத்தை மையமாகக் கொண்ட போராட்டங்கள் அண்மைக்காலமாக இங்கிலாந்தின் பல நகரங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில், வூல்விச் நீதிமன்றத்திற்கு வெளியே நேற்று இடம்பெற்ற போராட்டமும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.