இஸ்ரேலை தளமாகக் கொண்ட பாதுகாப்புத் தளவாட நிறுவனமான Elbit Systemsஇன் இங்கிலாந்து கிளை தொழிற்சாலையில் ஏற்பட்ட சேத சம்பவம் தொடர்பாகபாலஸ்தீன ஆர்வலர்கள் அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிஸ்டல் நகருக்கு அருகிலுள்ள தொழிற்சாலைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக நிரூபிக்கப்பட்டதையடுத்து, நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆர்வலர்கள் தொழிற்சாலை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பல்வேறு சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஷார்லோட் ஹெட் (வயது 30), சாமுவேல் கார்னர் (வயது 23), லியோனா காமியோ (வயது 30) மற்றும் பாத்திமா ரஜ்வானி (வயது 21) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
சாமுவேல் கார்னருக்கு சொத்துச் சேதம் ஏற்படுத்தியதுடன், பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக 7 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சிறைச்சாலை வாகனத்தை தொழிற்சாலை வளாகத்திற்குள் செலுத்தியதாக கூறப்படும் ஷார்லோட் ஹெட்டிற்கு 5 ஆண்டுகள் சிறை, லியோனா காமியோவிற்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாத்திமா ரஜ்வானிக்கு 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை குறித்து கருத்து தெரிவித்த Green கட்சித் தலைவர் சாக் போலன்ஸ்கி, இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கும் நிறுவனத்திற்கு எதிராக நேரடி நடவடிக்கையில் ஈடுபட்ட நான்கு இளைஞர்கள் சிறையில் அடைக்கப்படுவது மனதை உலுக்கும் நிலை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது போராட்ட உரிமைக்கு எதிரான ஆபத்தான தாக்குதல் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
அதேபோல், லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் மக்டொனல் இந்தத் தண்டனைகள் அளவில் மிகவும் கடுமையானவை என்றும் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.