கேம்பிரிட்ஜ்ஷயர் (Cambridgeshire) பகுதியில் உள்ள மிருகக்காட்சிசாலையில் மூன்று வயது சிறுவன் ஒருவன் முதலையால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்துள்ளான்.
இது தொடர்பாக கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் 30 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் (bail) விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் சம்பவம், ஹண்டிங்டன் (Huntingdon) அருகிலுள்ள ‘ஜான்சன்ஸ் ஆஃப் ஓல்ட் ஹர்ஸ்ட்’ (Johnsons of Old Hurst) என்ற பண்ணை மற்றும் மிருகக்காட்சிசாலையில் வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
முதலைகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சிறுவன் விழுந்தபோது, அங்கிருந்த குறைந்தது ஒரு முதலையால் தாக்கப்பட்டதாகத் தெரிகிறது. மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டு, சிறுவனை மீட்டனர்.
சிறுவனுக்குத் தகுந்த முதலுதவி அளிக்கப்பட்டு, கேம்பிரிட்ஜில் உள்ள ஆட்டன்ப்ரூக் (Addenbrooke) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான். தற்போது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும், அவனது உடல்நிலை சீராக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், நார்ஃபோக் (Norfolk) பகுதியைச் சேர்ந்தவர். இருப்பினும், உடல் அல்லது மனநிலை காரணமாக அவரிடம் விசாரணை நடத்த இன்னும் தகுதி பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபருக்கும் சிறுவனுக்கும் இடையே முன்பின் அறிமுகம் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவன் எவ்வளவு நேரம் முதலைகள் இருக்கும் பகுதிக்குள் இருந்தான் என்பது குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்குள்ள முதலைகள் அடைக்கப்பட்டிருக்கும் ‘டிராபிகல் ஹவுஸ்’ (Tropical House) பகுதி மூடப்பட்டுள்ளது.
இங்கு உலோக வேலிகளால் அமைக்கப்பட்ட உயர்ந்த நடைபாதைகளில் இருந்து முதலைகளைப் பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சம்பவத்தில் தொடர்புடைய முதலைகள் எதுவும் இன்னும் கைப்பற்றப்படவோ அல்லது கொல்லப்படவோ இல்லை.
சிறுவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் ஆதரவாகத் தங்களது பிரார்த்தனைகள் இருப்பதாக மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொலிஸார் இதனை ஒரு “தீவிரமான சம்பவம்” (critical incident) என்று வகைப்படுத்தி, இணையதளங்களில் இது குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.