தன்னுடைய 15 வயதில் இசை ஆசிரியரால் திட்டமிட்டு பாலியல் வன்புணர்வு மற்றும் அத்துமீறல்களுக்கு உள்ளான பெண் ஒருவர், 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மௌனத்தைக் கலைத்து பொலிஸில் முறைப்பாடு அளித்ததன் அடிப்படையில், அந்த ஆசிரியருக்கு நீதிமன்றம் எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் 1990களின் தொடக்கத்தில், பர்மிங்காமில் உள்ள தனது பள்ளியில் படித்து வந்தபோது, அங்கு தற்காலிக இசை ஆசிரியராகப் பணிபுரிந்த கீத் ஆலன் (Keith Allen – தற்போது வயது 82) என்பவரை முதன்முதலில் சந்தித்துள்ளார். அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வயது 15 மட்டுமே.
ஆரம்பத்தில் ஆலன் மிகவும் நட்பாகவும் நகைச்சுவையாகவும் பழகுபவர் போலத் தோன்றியுள்ளார். ஆனால், காலப்போக்கில் அவர் அந்தச் சிறுமியை மிகவும் சாதுரியமாகக் கையாளத் (grooming) தொடங்கியுள்ளார்.
பள்ளியில் clarinet மற்றும் saxophone கற்றுக் கொடுத்த ஆலன், பின்னர் மாணவியின் வீட்டுக்கே வந்து தனி வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார்; மேலும் அவரைப் பள்ளிக்குத் தனது காரிலேயே அழைத்துச் செல்லவும் செய்தார். ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு, அவருக்குக் காலையிலேயே மதுபானம் (wine) தருவது, தோளைத் தொட்டு இசைக் கருவிகளைப் பிடிக்கக் கற்றுத் தருவது போன்ற நுட்பமான பாலியல் அத்துமீறல்களில் ஆலன் ஈடுபட்டுள்ளார்.
மாணவி பள்ளிக்குச் செல்லாமல், Harborne பகுதியில் உள்ள ஆலனின் வீட்டுக்குச் செல்லத் தொடங்கினார். ஒரு நாள் இரவு அங்கு சீன உணவை உட்கொண்ட பிறகு, மாணவிக்குக் கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டு, மூச்சுத் திணறலும் குமட்டலும் ஏற்பட்டுள்ளது. அவர் கழிவறைத் தரையில் அமர்ந்து தவித்துக் கொண்டிருந்தபோது, ஆலன் மேலே வந்து அவரைப் படுக்கையறைக்கு இழுத்துச் சென்று வன்புணர்வு செய்துள்ளார். “வேண்டாம்” என்று பலமுறை கத்தியும், உடலளவில் பலவீனமாக இருந்ததால் அவரால் ஆலனைத் தடுக்க முடியவில்லை.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயந்துபோன மாணவி, தான் ஏன் அங்கு சென்றோம் என்பதைப் பிறரிடம் எப்படி விளக்குவது என்று தெரியாமல், யாரிடமும் இதைப் பகிராமல் தவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அவரது பள்ளிப் படிப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
சுமார் 30 ஆண்டுகள் கழித்து, 2022ஆம் ஆண்டில் அவர் எடுத்துக் கொண்ட ஒரு மனநல ஆலோசனையின்போதுதான் இந்தத் துயரத்தை அவரால் வெளிக்கொண்டு வர முடிந்தது. பின்னர், 2023 இல் அவர் பொலிஸில் முறைப்பாடு அளித்தார். “தற்போது நான் ஒரு தாய்; எனது பிள்ளைகள் அன்று எனக்கு இருந்த வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்காகவே துணிச்சலுடன் புகார் அளித்தேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் இந்தத் துணிச்சலான முயற்சியை வழக்கைப் புலனாய்வு செய்த வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸாரின் முதன்னிலை விசாரணை அதிகாரி ஆண்ட்ரூ ஜோன்ஸ் (Andrew Jones) வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பர்மிங்காம் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதி பால் ஃபேரர் (Paul Farrer KC), ஆலன் தனது தகுதியையும் நம்பிக்கையையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகக் கூறி அவருக்கு 8½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.
ஆலன் தரப்பில், அவர் அப்போது பதற்றத்தில் இருந்ததாகக் கூறப்பட்ட வாதங்களை நீதிபதி நிராகரித்தார். ஆலன் தற்போது நீரிழிவு நோய், குளுக்கோமா, காது கேளாமை, இதய நோய் மற்றும் Parkinson’s disease போன்ற உடல்நலப் பாதிப்புகளால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“இந்தத் தீர்ப்பை விட, நான் கூறியதை இந்தச் சமூகம் கேட்டு என்னை நம்பியதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்” என்று பாதிக்கப்பட்ட பெண் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தற்போது அவர் இந்தத் துயரத்திலிருந்து மீள ஓவியக் கலையைப் பயன்படுத்தி வருகிறார்.
