இலண்டன் – கேட்விக் (Gatwick) விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகள் பயன்படுத்தும் ஒரு தனியார் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 140 வாகனங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளன.
சனிக்கிழமை இரவு 09 மணிக்கு மேல், கிராவ்லி (Crawley) அருகே ரோஃபாண்ட் (Rowfant), வல்லேஜ் லேனில் (Wallage Lane) அமைந்துள்ள கால்டைன் வணிகப் பூங்காவில் (Caldyne Business Park) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அங்கு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு மேல் மிகப்பெரிய தீப்பிழம்புகளும், அடர்ந்த புகையும் சூழ்ந்திருப்பதை சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.
அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.
இந்தத் தீயை அணைக்கும் பணியில் உச்சகட்டமாக 08 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் லொரிகள் ஈடுபடுத்தப்பட்டன. திங்கட்கிழமை வரை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திலேயே தங்கி, எஞ்சியிருந்த வெப்பப் பகுதிகளைக் குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், பாதிக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது கார் நிறுத்த சேவை நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு மேற்கு சசெக்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தத் தீ விபத்தின் காரணமாகச் சனிக்கிழமையன்று அப்பகுதியில் இருந்த 2,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சார விநியோகம் தடைபட்டது. இருப்பினும், தற்போது பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் 67 வயது முதியவர் ஒருவர் தீவைப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சசெக்ஸ் (Sussex) பொலிஸார் அவரைப் பிணையில் விடுவித்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து இலண்டன் கேட்விக் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்தத் தளம் கேட்விக் விமான நிலையத்துக்குச் சொந்தமானதோ, அல்லது எங்களால் அங்கீகரிக்கப்பட்டதோ அல்லது இயக்கப்படுவதோ இல்லை. எனினும், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் கவலையையும் மன உளைச்சலையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது” என்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை இயக்கும் ‘சஃபையர் பார்க்கிங்’ (Sapphire Parking) நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “தற்போது இது அனைவருக்கும் ஒரு பெரிய கனவாக மாறியுள்ளது. நாங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ளோம், சுமார் 600 முன்பதிவுகளை இரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மிகுந்த வேதனையுடன் எங்களை அழைத்து வருகிறார்கள். ஆனால், எங்களால் தற்போது அதிகம் ஒன்றும் செய்ய இயலவில்லை” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.
கென்ட் (Kent) பகுதியின் ரோசெஸ்டரைச் (Rochester) சேர்ந்த பென்னி ரீயர்டன் (Penny Reardon) என்ற பெண், ஸ்பெயின் நாட்டிலிருந்து சுற்றுலா முடிந்து திரும்பியபோது, தனது மெர்சிடிஸ் கார் முற்றிலும் எரிந்து சாம்பலாகியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கூறுகையில், “இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை அளிக்கிறது. விடுமுறைக்குச் சென்று வந்த மகிழ்ச்சியே போய்விட்டது. இப்போது எதுவும் செய்ய முடியாத நிலையில் என் ஒட்டுமொத்த வாழ்க்கையும் முடங்கியது போல் உணர்கிறேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார்.