செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த அனுமதி!

4 minutes read

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை  கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் போலீஸ் மேல் விசாரணையை தொடர முடிவு செய்துள்ளதால், முக்கிய குற்றவாளி சயனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய விஐபிக்களை விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஊட்டியில் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சயான் உட்பட குற்றவாளிகள் 10 பேரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக டெல்லியில் சயான் பேட்டி அளித்தார்.

இந்த பேட்டி அளித்த அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் கைது செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு பின் சயான் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின், அவர் இந்த வழக்கில் தான் மீண்டும் பல உண்மை தகவல்களை தெரிவிக்க உள்ளதாக கூறினார். இதனை தொடர்ந்து, கடந்த 17ம் தேதி சயானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், சயான் பல புதிய தகவல்களை அளித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆட்சியில் இருந்த ஒரு விஐபி உத்தரவின்பேரில்தான் ரூ.2 ஆயிரம் கோடி ரொக்கப் பணம், 5 மாஜி அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்றதாகவும், அவருக்கு உதவிய நாங்களும் ஜெயலலிதா பயன்படுத்திய சில பொருட்களை கொள்ளையடித்தோம் என்றும் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.

இந்நிலையில் இக்கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படும் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜின் சகோதரரிடம் விசாரணை மேற்கொள்ள கோத்தகிரி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி கடந்த 24ம் தேதி ஊட்டியில் உள்ள பழைய எஸ்பி அலுவலகத்தில் கனகராஜின் சகாேதரர் தனபால் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் நீலகிரி எஸ்பி ஆசிஸ் ராவத் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டார். அப்போது, தனது சகோதரரின் மரணம் திட்டமிட்ட கொலையே. விபத்து அல்ல என கூறியதாக தெரிகிறது.

இதற்கிடையே, நேற்று ஊட்டி நீதிமன்றத்தில் சயான் ஆஜரானார். அப்போது, அவரது வாக்குமூலம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வாறு தாக்கல் செய்யப்பட்டால், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில விஐபிக்களிடம் போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், கொடநாடு  கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறை சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச்  சேர்ந்த ரவி என்ற அனுபவ் ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், கொடநாடு கொலை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டுள்ள மறைந்த கனகராஜ் என்பவரை எனக்கு தெரியும். இந்த  வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால் தங்கள் விருப்பப்படி வாக்குமூலம்  அளிக்குமாறு பல தரப்பில் இருந்தும் எனக்கு மிரட்டல்கள் வருகிறது.

அரசு தரப்பில்  41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்த நிலையில் இதுவரை  குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை இன்னும் தொடங்கவில்லை.  நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தப்படுகிறது. உயர் நீதிமன்ற  உத்தரவின்படி இந்த  வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும். மேல் விசாரணைக்கு தடை விதிக்க  வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார்  முன்பு கடந்த 24ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அனுபவ் ரவி தரப்பில் மூத்த  வழக்கறிஞர் ஐ.சுப்ரமணியம் ஆஜராகி, சாட்சியங்கள் யாரிடமும் தெரிவிக்காமல்,  குற்றம்சாட்டப்பட்ட சிலரிடம் மட்டுமே தெரிவித்துவிட்டு வழக்கை மேற்கொண்டு  விசாரிப்பதாக காவல்துறை, நீலகிரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.  மனுதாக்கல் செய்த மறுநாளே விசாரணைக்கு அழைத்துள்ளனர் என்றார்.

 மற்றொரு  மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து  குற்ற வழக்கின் விசாரணையே தொடங்கிய பின் குற்றவாளியிடம் மறு விசாரணை நடத்த  முடியாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி சயானிடம் காவல்துறை மறு விசாரணை  மேற்கொண்டு வருகிறார்கள் என்றார். அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ஒரு குற்ற  வழக்கில் தொடர்புடையவர்களை முழுமையாக கண்டறிந்து சட்டத்தின் முன்  நிறுத்தவேண்டுமென்ற நோக்கில், விசாரணையை விரிவுபடுத்துவதற்காக நீலகிரி  நீதிமன்றத்தில் காவல்துறை மெமோ தாக்கல் செய்தது. அந்த மனு  நிராகரிக்கப்படவில்லை என்றார்.

 காவல்துறை தரப்பில் அரசு தலைமை  குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் அனுபவ் ரவி  காவல்துறை சாட்சியம் மட்டுமல்ல. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு  நெருக்கமானவர். விரிவுபடுத்தப்பட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.  அதன்படி நீதிமன்றம் முடிவெடுக்கும். வழக்கில் தொடர்புடையவர்கள் சிலர்  மரணம், சிலர் விபத்துக்குள்ளானது போன்ற விஷயங்கள் முன்னர் முறையாக  விசாரிக்கப்படவில்லை. எனவே தற்போது முழுமையாக விசாரிக்கப்படுகிறது.  விசாரணைக்கு ஆஜராகாமல் மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். கொடநாடு  எஸ்டேட்டின் உரிமையாளரான நிறுவனத்தின் இயக்குனரையும் இதுவரை  விசாரிக்கவில்லை என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  அளித்த தீர்ப்பில், ‘‘போலீசார் நடத்தும் மேல் விசாரணையால் நீதிமன்ற விசாரணையில் காலதாமதம் ஆகலாம். அதே நேரத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். மோசமான விசாரணை நடத்தப்பட்டதாக நீதிமன்ற விசாரணையின்போது தெரியவந்தால் மேல் விசாரணை நடத்தப்படலாம். இந்த கோரிக்கையை விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திடம் கட்டாயம் அனுமதி பெற்றுத்தான் மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டத்தில் கூறப்படவில்லை. எப்போதெல்லாம் குற்ற வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்கள், சாட்சிகள் கிடைக்கின்றனவோ அது குறித்து மேல் விசாரணை நடத்த விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இந்த முக்கியமான தருணத்தில் விசாரணையில் புதிதாக அல்லது கூடுதல் ஆவணங்கள் கிடைக்கலாம். எனவே, மேல் விசாரணையை நிராகரிக்க முடியாது. நேர்மையான விசாரணைதான் உரிய நீதியை தரமுடியும். விரைவான நீதி பெறும் உரிமைக்கும் நேர்மையான நீதியை பெறும் உரிமைக்கும் வித்தியாசம் உள்ளது. உண்மையான, நேர்மையான, சார்பற்ற, சிறப்பான விசாரணை என்பதை கவனத்தில் கொள்வது நீதிமன்றத்தின் கடமையாகும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் மேல் விசாரணை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை.

குற்ற வழக்குகளில் உண்மையும், சாட்சியங்களும் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் கொடநாடு தேயிலை எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை நடந்துள்ளது. சந்தேக மரணங்கள் நிகழ்ந்துள்ளன. எப்போதெல்லாம் சாட்சி ஆவணங்கள் சேகரிக்கப்படுகின்றனவோ அதை நீதிமன்றம் பரிசீலித்து உரிய முடிவுக்கு வர வேண்டும். குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 173 (8)ல் கூறப்பட்டுள்ளதுபோல் மனுதாரர் இந்த வழக்கில் புகார் கொடுத்தவரோ அல்லது பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவரோ அல்ல. இந்த வழக்கில் அவர் சாட்சி மட்டுமே. எனவே, இந்த வழக்கில் அவர் மேல் நடத்துவதற்கு தடை கோர முடியாது. மேல் விசாரணையால் மனுதாரருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. போலீசார் மேல் நடவடிக்கையை எடுக்க எந்த குறுக்கீடும் இருக்க கூடாது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான சயான், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சில முக்கிய விஐபிக்கள் குறித்து சில திடுக்கிடும் தகவல்களை விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாக்குமூலத்தை போலீசார் நேற்று ஊட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாக்கல் செய்யப்படவில்லை. அதேநேரத்தில், சயன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில முக்கிய விஐபிக்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்போது சென்னை உயர் நீதிமன்றம் போலீஸ் விசாரணைக்கு தடை விதிக்காததால், இந்த வழக்கு விரைவில் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* போலீசார்  நடத்தும் மேல் விசாரணையால் நீதிமன்ற விசாரணையில் காலதாமதம் ஆகலாம். அதேநேரத்தில் உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
* எப்போதெல்லாம் குற்ற வழக்கு தொடர்பாக புதிய ஆவணங்கள்,  சாட்சிகள் கிடைக்கின்றனவோ அதுகுறித்து மேல் விசாரணை நடத்த விசாரணை  அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.