புதுடெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க இத்தனை காலதாமதம் ஏன் என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.உச்ச நீதிமன்றத்தில் குமார் பன்சால் மற்றும் ரீபக் பன்சால் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், ‘‘நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் இறந்த ஒவ்வொருவருக்கும் இழப்பீட்டு தொகையாக ரூ. லட்சத்தை ஒன்றிய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்க வேண்டும்.
நோய் தொற்றால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஜூன் 30ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி அல்லது இழப்பீட்டு தொகை வழங்குவதும், இறப்பு சான்றிதழ் வழங்குவதும் அவசியமாகும். இதுகுறித்து ஒன்றிய அரசு 6 வாரத்தில் ஒரு திட்டத்தை உருவாக்கி பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் தற்போது வரையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதுகுறித்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என கடந்த இரு மாதங்களுக்கு முன்னதாக உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்ன? இதில் கொரோனா மூன்றாவது அலையே வரப்போகும் நிலையில், காலதாமதம் செய்வது ஏன்?’’ என சரமாரி கேள்வியெழுப்பினர். இது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘கொரோனாவால் உரிழந்தவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் வரும் 11ம் தேதிக்குள் விரிவான விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நிதி உதவிவழங்கப்பட உள்ளது. அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களும் அதில் குறிப்பிட வேண்டும்’’ என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்
5,352 பேருக்கு பாதிப்பு
- கடந்த 2 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5,352 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 3 கோடியே 29 லட்சத்து 3 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது.
- கடந்த 2 மணி நேரத்தில் 366 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை லட்சத்து 39 ஆயிரத்து 895 ஆக உள்ளது.
- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 3 லட்சத்து 99 ஆயிரத்து 778 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 10,195 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நேற்று காலை 7 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 67.09 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.