Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்!

தமிழக விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள்!

4 minutes read

சென்னை: தமிழகத்தில், 1 லட்சம் விவசாயிகளுக்கு புதிய மின்  இணைப்புகளுக்கு ஆணை வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகியவற்றின் சார்பில் விவசாயிகளுக்கு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்ட தொடக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வரவேற்றார். இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மேடையில் 10 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2006-11 திமுக ஆட்சிக் காலத்தில், 2 லட்சத்து 9 ஆயிரத்து 910 பேருக்கு புதிய மின் இணைப்புகள் தரப்பட்டது. ஆனால் 2011-16ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 82 ஆயிரத்து 987 பேருக்கும், அதை தொடர்ந்து 2016-21 அதிமுக ஆட்சியில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 592 பேருக்கும் தான் புதிய இணைப்புகள் தரப்பட்டன. அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்குமான வேறுபாடு என்பது இதுதான். 10 ஆண்டு காலத்தில் சுமார் 2 லட்சம் இணைப்புகள் தான்  அதிமுக ஆட்சியில் தரப்பட்டன. நாம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 4 மாத காலத்தில் ஒரு லட்சம் இணைப்புகளை கொடுக்கப் போகிறோம்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு போன்ற பெரிய பிரச்னையாக  இருந்தாலும், வேளாண் மக்களின் சிறு கோரிக்கையாக இருந்தாலும், அதற்கு உடனடியாகச் செவி மடுத்து அதனை நிறைவேற்றித் தரக்கூடிய ஆட்சி தான் திமுக ஆட்சி. ‘நான் பிறந்தபோது தான் காவிரி ஒப்பந்தமும் உருவானது’ என்று கலைஞர் அடிக்கடி சொல்லி இருக்கிறார். அந்தக் காவிரி பிரச்னையை தீர்ப்பதற்காக முழு முயற்சி எடுத்தவர் தான் கலைஞர். மறைந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலே மின் கட்டணத்தில் ஒரு பைசா குறைக்க வேண்டும் என ஒரு மிகப் பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. ஆட்சிக்கு வருகிறோம், கலைஞர் முதல்வராக வந்து அமர்கிறார்.

யாரும் கோரிக்கை வைக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை. ஒரு கோரிக்கை மனுவை கூட முதல்வரான கலைஞரிடம் கொடுக்கவில்லை. கலைஞர் கோட்டைக்கு சென்றார், சட்டமன்றத்திலே அவர் எழுந்து அறிவித்தார். கடந்த கால ஆட்சியிலே ஒரு பைசா குறைக்க  வேண்டும் என்று போராடினார்கள், இப்போது திமுக ஆட்சியில் ஒரு பைசா கூட தரவேண்டிய அவசியமில்லை என்று கலைஞர் அந்த திட்டத்தை அறிவித்தார். இந்த வரிசையில் ஒரு லட்சம் புதிய இணைப்புகள் என்ற இந்த புதிய திட்டத்தை இன்றைக்கு நாம் தொடங்கி வைத்திருக்கிறோம்.

‘ஒரு லட்சம் புதிய  இணைப்புகள் வழங்குகிறோம்’ அதிலும் பெரும்பாலும் இலவசமாக வழங்குகிறோம்  என்றால், தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது செழிப்பாக இருக்கிறது என்று  யாரும் நினைத்துவிட வேண்டாம். அது உங்களுக்கே தெரியும். செழிப்பாக அல்ல,  கடந்தகால ஆட்சியாளர்கள் சீரழித்து விட்டுப் போயிருக்கிறார்கள். இதுதான் அதிமுக ஆட்சியினுடைய சாதனை. 1.59 லட்சம் கோடி ரூபாய்க்கு கடனில் இருக்கிறது மின்சார வாரியம். ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய  நிலைமையில் இருக்கிறது. மிக அதிகமான விலை கொடுத்து மின்சாரம் கொள்முதல் செய்துள்ளார்கள்.

குறுகிய கால ஒப்பந்தங்களாக இல்லாமல், மிக நீண்ட கால ஒப்பந்தங்களாகப் போட்டுள்ளார்கள். இதைவிட கொடுமை என்னவென்றால், அனல்மின் நிலையங்களில், நிலக்கரி பதிவேட்டில் இருப்பதும், இருப்பு இருப்பதும் வித்தியாசமாக உள்ளது. அதிலும் முறைகேடுகள். அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தின் அவலங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இதிலிருந்து மின்சார வாரியத்தை காப்பாற்றுவதற்கான பணிகள் இப்போது தொடங்கி இருக்கிறது. புதிய மின் திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 17 ஆயிரத்து  980 மெகாவாட் மின்சாரத்தை வரும் 10 ஆண்டு காலத்தில் தயாரிக்க திட்டப்பணிகள் தொடங்கி இருக்கிறது.

சூரிய சக்தி பூங்கா: திருவாரூரில் முதல் சூரிய சக்தி பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. சூரிய மின் உற்பத்தி, புனல் நீரேற்று மின் உற்பத்தி மற்றும் இயந்திர மின் திட்டங்களை தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கவும், நிதி தேவையான, 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 கோடி ரூபாயை திரட்டுவதற்கும்  இந்திய மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு நிறுவனத்துடன் 6.9.2021 அன்று ஒப்பந்தம் போட்டிருக்கிறோம். உழவு உற்பத்தியை பெருக்க வேண்டும்  என்ற ஒரே ஒரு நோக்கத்துடன் ஒரு லட்சம் உழவர்களுக்கு புதிய மின் இணைப்பு ஆணையை இன்று வழங்கி இருக்கிறோம்.

இது தமிழ்நாட்டில் உழவுப் புரட்சிக்கு அடித்தளமாக அமையட்டும். உற்பத்திப் பரப்பு அதிகமாக இது உதவிகள் செய்யட்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்,  தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் கலந்து கொண்டனர்.         

தமிழகத்தில் ஏற்கனவே  விவசாயத்திற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுபோலவே, புதிதாக 1  லட்சம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மின் இணைப்புகளுக்கும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்தகால அதிமுக ஆட்சியாளர்கள் மின்வாரியத்தை சீரழித்து விட்டுப்  போயிருக்கிறார்கள். இதுதான் அவர்களின் சாதனை. 1.59 லட்சம் கோடி ரூபாய்க்கு கடனில் இருக்கிறது மின்சார வாரியம். ஆண்டுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய நிலைமையில் இருக்கிறது.

* அமைச்சர்கள் போட்டி போட்டு செயல்படுகிறார்கள்
அமைச்சரவையில் இருக்கக்கூடிய அனைத்து அமைச்சர்களும் போட்டிபோட்டு செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.அவர்கள் கேட்கக் கூடிய தேதியை கூட என்னால் உடனடியாக வழங்க முடியாத ஒரு சூழ்நிலை இப்போது ஏற்பட்டு  இருக்கிறது.ஏராளமான திட்டங்களை தொடங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி தொடங்கக்கூடிய அமைச்சர்களில் வழக்கம்போல செந்தில்பாலாஜி வேகமாக முந்திக் கொண்டு தேதியை வாங்கி இந்த திட்டத்தை தொடங்கி விட்டார். அதற்காக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள செந்தில் பாலாஜியை பாராட்டுகிறேன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More