Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா திமுக அரசு பதவியேற்ற 142 நாளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்!

திமுக அரசு பதவியேற்ற 142 நாளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றம்!

4 minutes read

சென்னை: திமுக அரசு பதவியேற்ற 142 நாளில், 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை மறந்துவிட்டது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் நேற்று பேசினார். முதல்வர் ஆற்றிய உரை: மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தால்தான், இந்த முதலமைச்சர் பொறுப்பில் நான் உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்தது.

நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றி கொண்டிருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும். சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், திமுக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். நான் அதை வெளியிட்டபோது, கலைஞர் பாணியில் ‘சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்’ என்று சொன்னேன். ஆட்சிக்கு வந்து இன்றோடு 4 மாதங்கள்தான் கடந்துள்ளன. இந்த 4 மாதங்களுக்குள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றை செய்து விட்டோம். 505 வாக்குறுதிகளை தந்தோம். அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம்.

மே 7ம் தேதி பதவியேற்ற சில மணி நேரத்திலேயே 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன். இந்த 5ல் முதல் நான்குமே திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை. இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் நலனை பாதுகாக்க, முதன்முறையாக வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் தொகை ரூ.2,756 கோடி தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ரூபாய் குறைப்பு, ஊரக பகுதிகளில் ரூ.1,200 கோடி ஒதுக்கீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகம் புனரமைத்தல் மற்றும் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம்,

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ3 கோடி, வெள்ளி பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ2 கோடி மற்றும் வெண்கல பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ1 கோடி, பத்திரிகையாளர்கள், இந்திய குடியுரிமை திருத்த சட்டம், மீத்தேன், நியூட்ரினோ, கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் 8 வழி சாலை திட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள், பொதுமக்கள்மீது போடப்பட்ட 5,570 வழக்குகள் வாபஸ், வேளாண் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவை பேரவையில் தாக்கல் செய்தல் மற்றும் தீர்மானம்,

கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ25 லட்சம் இழப்பீட்டு தொகை. அதேபோல், காவல்துறையில் உயிரிழந்த காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ25 லட்சம் வீதம் நிவாரண தொகை, முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு, ஸ்டெர்லைட் சம்பவம் குறித்து தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற நடவடிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை அரசு பணி, மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்வு, அரசு பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்வு..

இப்படி, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன். மேலும், தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன. தொழிற்கல்வி இடஒதுக்கீட்டு பிரிவுகளில் 7.5% இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை, இவர்கள் கட்டணம் முழுமையாக செலுத்த வேண்டியதில்லை. குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்களின் தொகுப்பு, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்,

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ5 லட்சம் வைப்பு நிதி, கல்வி மற்றும் விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும். கொரோனாவால் தந்தை அல்லது தாயை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு ரூ3 லட்சம் நிவாரண தொகை, தமிழ்நாட்டில் உள்ள முகாம்வாழ் இலங்கை தமிழர் நலனை பேணிட வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, ₹317 கோடியே 40 லட்சம் நிதி, தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம், பத்திரிகையாளர், ஊடகத்துறையினர் “முன்கள பணியாளர்”களாக அறிவிப்பு, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கான சிறப்பு ஊக்கத்தொகை ரூ5,000 ஆக உயர்வு.

கொரோனா தொற்றால் உயிரிழந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடக துறையினர்களுக்கான இழப்பீட்டு தொகை ரூ10 லட்சம் உயர்வு, அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் பெருமையை போற்ற 14 அறிவிப்புகள், பாரதியை போற்றும் வகையில் 14 அறிவிப்புகள், சமூகநீதியை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கக் குழு. 1987ம் ஆண்டு இடஒதுக்கீட்டு போராட்டத்தில் பலியான சமூகநீதி போராளிகளின் நினைவாக விழுப்புரம் மாவட்டத்தில் ரூ4 கோடி செலவில் மணிமண்டபம், இந்தியாவிலேயே முன்மாதிரித் திட்டமான ‘மக்களை தேடி மருத்துவம்’ தொடக்கம்., எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு அரசு மரியாதை, கோவில்பட்டியில் சிலை,

இடைச்செவலில் அவர் படித்த பள்ளி புதுப்பிப்பு, தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், ₹5 லட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய ‘இலக்கிய மாமணி’ விருது, தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு, அனைத்து சாதி அர்ச்சகர்கள்-பெண் ஓதுவார் நியமனம், ‘தகைசால் தமிழர்’ விருது, சிவகளை ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு,

தமிழர் நாகரிகத்தின் வேர்களை தேடி இந்திய துணைக்கண்டம் மற்றும் உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ள சட்டமன்றத்தில் அறிவிப்பு, இவை அனைத்துக்கும் மேலாக தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து சமூகநீதி உறுதிமொழி ஏற்பு. இவை எல்லாம் நாங்கள் அறிவிக்காதது. ஆனால் செய்து கொடுக்கப்பட்டவை. சொன்னதை செய்தவர்கள் மட்டுமல்ல சொல்லாததையும் செய்து கொடுத்தவர்கள் நாங்கள். 505 வாக்குறுதிகளில் 4 மாதங்களுக்கு மேலாக (142 நாளில்) 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி காட்டிய அரசு, இந்தியாவிலேயே திமுக அரசாகத்தான் இருக்கும். இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம்.

எப்போதும் இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம். இப்போது அறிவித்ததுபோல 3 மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களிடம் இதை சொல்வேன். நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டு காண்பிப்பேன். வாக்களித்த மக்களை 5 ஆண்டுகள் கழித்துத்தானே பார்க்க போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் இல்லை நான். என்னை இயக்கி கொண்டு இருப்பது மக்களாகிய நீங்களும் எனது மனசாட்சியும்தான். இவ்வாறு பேசினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More