Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிவசக்தி ஆனந்தன் திடீர் தெரிவிப்பு.

சிவசக்தி ஆனந்தன் திடீர் தெரிவிப்பு.

3 minutes read

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்து கூட்டமைப்பு செய்யத் தவறிய விடயத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்து கூட்டமைப்பு செய்யத் தவறிய விடயத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றின் கேள்வி பதிலுக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

கடந்த கால தேர்தல்கள் போல் அல்லாது இம்முறை தேர்தலில் தமிழ் கட்சிகள் தீர்வுடன் அபிவிருத்தி குறித்த விடயம் மக்கள் முன் வைப்பதற்கான பின்னணி என்ன?

அரசியல் உரிமையும் அதிகாரமும் இல்லாமல் அபிவிருத்தியினை முன்னெடுக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இராஜதந்திர தோல்வியை மூடிமறைப்பதற்காக தற்பொழுது அரசியல் தீர்விற்கு எத்தனைகாலம் எடுக்கும் என்பது தெரியாது. அதுவரையில் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியைப் பிற்போட முடியாது என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களை திசைதிருப்பும் நோக்கில் அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் ஆணைதாருங்கள் என்று இத்தேர்தல் பரப்புரைகளில் கூறிவருகின்றது.ஆனால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் போதும் அவ் அரசாங்கத்தின் பாதுகாப்பு செலவிற்கு இரட்டிப்பு தொகை ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்கும் கையுயர்த்தி ஆதரவு தெரிவித்தபோதும் ஏன் அபிவிருத்தி குறித்து பேசவில்லை.

நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தென்னிலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களிடம் அரசியல் உரிமையும் இருக்கின்றது. ஆட்சி அதிகாரமும் அவர்களது கைகளிலேயே இருக்கின்றது. இந்தநாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் அப்பகுதிகளில் எத்தகைய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை முன்னிறுத்தியே அவர்கள் அரசியல் செய்கின்றனர். ஆக அவர்களிடமே அபிவிருத்தி குறித்து எத்தகைய திட்டமும் இல்லை. வேலையின்றி இருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திசைதிருப்புவதற்காகவும் தமது கையாலாகத்தனத்தை மூடிமறைப்பதற்காகவும் நிலைபேறான அபிவிருத்திகளை மேற்கொண்டு விட்டால் சிலரது தனிப்பட்ட வருமானம் நின்றுவிடும் என்பதற்காகவுமே தென்னிலங்கை அரசியல் சமூகம் நிலைபேறான அபிவிருத்திகளில் அக்கறையின்றி, நாட்டுமக்களை தொடர்ந்தும் அன்னிய நாடுகளின் வளங்களில் தங்கி நிற்க வைக்கின்றது. இதற்கு தமிழர் விரோதச் செயற்பாடு அதற்கு பக்கதுணையாக இருக்கின்றது.

இந்த உண்மையை மறைப்பதற்காகவே சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஏதோ இந்த நாடு தனிச்சிங்கள பௌத்த மக்களுக்குச் சொந்தமானது என்பதை வலியுறுத்தி, ஏனைய தேசிய இனங்கள் வாழ்வதற்கே அருகதையற்றவர்கள் என்பதை நிலைநிறுத்தி, இதனை சிங்கள பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்துவதுதான் தமது முதலாவது பணி என்பதுபோல் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் கங்கனம் கட்டி செயற்படுகின்றன. ஆக, சகல வளங்களும் இருந்தே அபிவிருத்தி செய்ய விரும்பாதவர்கள் அதிகாரங்களற்ற எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு விரும்புவார்களா என்பது தெரியாமலே தனது தவறுகளையும் கையாலாகாத் தனத்தையும் மூடிமறைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

இதுவரை காலமும் எமது பகுதிகளில் எத்தகைய அபிவருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். அதற்கு எமக்கு உரித்துடைய உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். உரிமையைப் பெற்றுவிட்டால் அபிவிருத்தியை நாமே மேற்கொள்வோம் என்று ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முழங்கிவந்தனர்.

யுத்தம் முடிவடைந்து பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், எமது பிரதேசத்து மக்கள் பாரிய இராணுவ, புலானாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தலுக்கும் கண்காணிப்புக்கும் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், புதிதாக ஆயுதங்களைக் கண்டுபிடிப்பதாகக்கூறி எம்மைத் தொடர்ந்தும் தங்களது கிடுக்கிப் பிடியின்கீழ் வைத்திருக்கும் சூழலில் இதிலிருந்து விடுபடுவதே எமது முதலாவது பணியாக இருக்க வேண்டும்.

இன்றைய கொரோன அச்சுறுத்தல் சூழ்நிலையிலும் கொரோனா தாக்கம் இல்லாத எமது வடக்கு-கிழக்கே இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் நடமாடுவதற்கே அஞ்சுகின்ற சூழல் நிலவுகின்றது. இவை அனைத்தும் எமது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமையை முன்பைவிடத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன.

அத்துடன் எமக்கான அதிகாரப்பகிர்வை வழங்கவே முடியாது என்று இன்றைய ஆட்சியாளர்கள் கூறுவதிலிருந்து எமக்கு உரித்துடைய அரசியல் உரிமையைத் தாங்கள் பறித்து வைத்திருக்கிறோம் என்பதும் தெளிவாகின்றது. இதற்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்ட வேண்டிய சூழலில், இதற்கான கட்டமைப்பை ஏற்கனவே கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடமையைச் செய்யாமல் விட்டதை மறைப்பதற்கே இன்று அபிவிருத்தி போர்வையை போர்த்துக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கிறது.

இதுவரை காலமும் கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக உருவாக்குவதற்காகவும் மக்களின் அபிலாசைகளை மக்களின் பங்களிப்புடன் முன்னெடுப்பதற்காகப் போராடிய நாம், அந்த முயற்சி பலனளிக்காமையால் இன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்து கூட்டமைப்பு செய்யத் தவறிய விடயத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். நாம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலிலேயே ஆயுதப் போராட்டத்திற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் பல சிறிய தொழில் முயற்சிகளை முன்னெடுத்திருந்தோம். அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் ஓர் அங்கமே மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம். இதுவே நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும்.என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More