அவரது வரவு சர்ச்சையை ஏற்படுத்தும் அரசிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரல்
இலங்கையில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்குமாறு மியன்மார் வெளிவிவகார அமைச்சருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மீள பெற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் நாடுகளின் அமைச்சரவைக் கூட்டத்தில் மியன்மாரின் தற்போதைய வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளமை சிக்கலானதெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மியான்மாரின் தற்போதைய இராணுவ அரசாங்கத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவே இதன்மூலம் உறுதிப்படுத்தப்படுகிறதெனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
மியன்மாரியல் ஜனநாயகத்தின் மூலம் உருவான ஆங் சாங் சூச்சி தலைமையிலான அரசாங்கம் ஒழிக்கப்பட்டு இராணுவத்தின் சர்வாதிகார ஆட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் நடந்த இராணுவமயமாக்கல் மற்றும் சர்வாதிகார வெறிக்கு மத்தியில், பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டின் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய வெளிவிவகார அமைச்சரால் மியன்மார் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்புவிடுத்து கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இது சர்வதேச உறவுகளில் அடிப்படையில் நடைபெறும் மாநாடாகும். சர்வதேச உறவுகளைப் பற்றி போதிய அறிவு இல்லாமையின் காரணமாகவே அரசாங்கம் இந்த பாரதூரமான தவறைச் செய்துள்ளது. சர்வதேச அங்கீகாரம் தொடர்பில் எமது நாட்டு அரசாங்கத்துக்கு போதிய அறிவு அவசியமாகும். இராஜதந்திர உறவுகளில் சர்வதேச அங்கீகாரம் என்றதொரு பிரிவு உள்ளதென்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
மியன்மார் வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தின் மூலம் இராணுவ ஆட்சிக்கு ஒருவகையில் இலங்கை அங்கீகாரம் வழங்கியதாகவே கருதப்படும். மியன்மாரில் நடைபெற்றுள்ள இராணுவ ஆட்சிக்கு எதிராகவே உண்மையாக அரசாங்கம் செயற்பட்டிக்க வேண்டுமென்பதுடன், மீண்டும் ஜனநாயக வழியில் ஆங் சாங் சூச்சி தலைமையில் அரசொன்றை அமைய வலியுறுத்தி அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாது வெளிவிவகார அமைச்சர் இராணுவ ஆட்சியின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சமகால அரசாங்கம் மியன்மாரில் ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவ ஆட்சியை அங்கீகரிக்கிறதா என தெரியவில்லை. உடனடியாக விடுத்திருக்கும் அழைப்பை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சரவை கோருகிறோம் என்றார்.
சுப்பிரமணியம் நிஷாந்தன்
நன்றி-தினகரன்