மே 9 வன்முறைகளின் போது, முன்னாள்அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, சன்ன ஜயசுமன ஆகியோரின் வீடுகளை தாக்கியதாக கூறி 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவின்நாவலபிட்டி வீடு மற்றும் மன்றத்தின்மீதான தாக்குதல் குறித்து நால்வரும்,துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, சன்ன ஜயசுமன ஆகியோரின் வீடுகள் மீதான தாக்குதல் குறித்து நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மே 9 ஆம் திகதி முன்னாள் அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகேவின் வீடு மீது நாவலப்பிட்டியவில் தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.
தாக்குதலைத் தொடர்ந்து மஹிந்தானந்த அலுத்கமகேவின் செயலாளர் 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த 16 பேரில் நால்வரையே நாவலப்பிட்டி பொலிசார் கைது செய்து இன்று நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
இதன்போது சந்தேக நபர்களுக்காக இரு சட்டத்தரணிகள் கட்டணமின்றி ஆஜராகினர். இந் நிலையில் முன் வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நாவலபிட்டி நீதிவான் நிலந்த விமலவீர அவர்களை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சொந்த பிணைகளில் செல்ல அனுமதியளித்தார்.
துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன, சன்ன ஜயசுமன :
இதேவேளை முன்னாள் அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, எஸ்.எம். சந்திரசேன மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரின் அனுராதபுரம் இல்லங்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக கூறி,தேரர் ஒருவரும், பிரதேசத்தின் பிரபல வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்களாக நால்வரை அனுராதபுரம் பொலிசார் கைது செய்துள்ளனர்.
இன்று பிற்பகல் அவர்களைக் கைதுசெய்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்யவுள்ளதாக அறிய முடிகிறது.