செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மலையகத் தமிழர்களையும் அரவணைத்தே பயணிப்போம்! – சம்பந்தன் உறுதி

மலையகத் தமிழர்களையும் அரவணைத்தே பயணிப்போம்! – சம்பந்தன் உறுதி

1 minutes read

“மலையகத் தமிழ் மக்களின் மறுமலர்ச்சிக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட மலையகக் கட்சிகள் முன்னெடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்கும். மலையகத் தமிழ் மக்களையும் அரவணைத்தே நாம் பயணிப்போம்.”

– இவ்வாறு தம்மைச் சந்தித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உறுதியளித்தார்.

அதேவேளை, வடக்கு, கிழக்குத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று அன்றும் சரி இன்றும் சரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றது என்று இ.தொ.கா. முக்கியஸ்தர்களள், கூட்டமைப்பின் தலைவரிடம் இதன்போது தெரிவித்தனர்.

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு ‘ஜனநாயகப் பொன்’ விருது வழங்கப்பட்டுள்ளமைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், போசகர் சிவராஜா, பிரதித் தலைவி அனுசியா சிவராஜா, சிரேஷ்ட சட்ட ஆலோசகர் மாரிமுத்து ஆகியோர் இன்று (11) நேரில் சென்று தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதன்போதே இரு தரப்பினரும் மேற்படிக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இரா. சம்பந்தன் ஆற்றிய சேவைகளுக்காக ‘ஜனநாயகப் பொன்’ விருது பல வருடங்களுக்கு முன்னதாகக் கிடைத்திருக்க வேண்டியது என்றும், இந்த விருதானது தங்களுடைய அளப்பரிய சேவையை எடுத்துக் காட்டுகின்றது என்றும், இந்த விருது கிடைத்தமைக்கு முழு மலையக மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம் என்றும் இ.தொ.கா. தெரிவித்தது.

இ.தொ.காவின் வாழ்த்துக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்த இரா.சம்பந்தன், தனக்கும் இ.தொ.காவின் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கும் இடையிலான நட்புறவையும் நினைவுபடுத்தினார்.

“மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் எனது சிறந்த நண்பர். அவருடன் இணைந்து பல அறிவுபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளளோம். மலையகத் தமிழ் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள் வரலாற்று சாதனைகள் படைத்தவை. அரசால் மலையகத் தமிழ் மக்களின் பிரஜாவுரிமை பறிக்ககப்பட்டு, முகவரியற்ற சமூகமாக மாற்றப்பட்ட போது அம்மக்களுக்காக அரசுக்கு எதிராக முன்னின்று பல போராட்டங்கள் செய்து, அதை வெற்றிகொண்டு, மலையகத் தமிழ் மக்களுக்காகப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுத்து அவர்களை ஒரு ஆளும் சமூகமாக மாற்றினார். அவருடைய அரசியல் சாணக்கியத்தை ஈடுசெய்ய முடியாது” என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையகத் தமிழர்களின் சமூக மேம்பாட்டுக்காகத் தொடர்ந்தும் வெற்றிகரமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் சம்பந்தன் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.