March 26, 2023 10:52 pm

தீர்வு காண ஒத்துழையுங்கள்! – ரணில் அழைப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

“இரா.சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்ற ஒரு பொதுவான கனவு எம் இருவருக்கும் உண்டு. அந்தக் கனவு பற்றி அன்று முதல் இன்று வரை நாம் கலந்துரையாடுகின்றோம். முயற்சி செய்கின்றோம். முன்னைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. ஆனாலும், இம்முறை எவ்வாறாயினும் அதனை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்) ஒத்துழைப்பையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.”

– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய கொள்கை விளக்க உரையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் பிரச்சினைகளை வழி விட்டோமே தவிர நீண்டகாலத் தீர்வைத் தேடவில்லை. அதன் விபரீதத்தைத் தான் நாம் அனைவரும் இன்று அனுபவிக்கின்றோம்.

நாம் இன்று ஒரு பொருளாதார யுத்தத்தை எதிர்நோக்கி உள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த யுத்தம் வடக்கு – கிழக்கு யுத்தத்தை விட ஒரு தீர்க்கமான யுத்தமாகும்.

வடக்கு – கிழக்கு மோதலில் இனங்கள் பிளவுபட்டன. ஆயினும், இந்த யுத்தத்தில் அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டியுள்ளது.

பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் விடுவோமாயின் இப்பொருளாதார யுத்தத்தில் நாம் தோல்வியடைவோம். அவ்வாறு இடம்பெறுமாயின் சில அரசியல் கட்சிகள் கூறுவது போன்றதொரு கற்பனை உலகம் எமக்கு உரித்தாகாது.

நாம் பொருளாதார காலணித்துவத்துக்கு உட்படுவோம். ஆகவே, நம் அனைவரதும் பொறுப்பு யாதெனில் துன்பங்களைப் பொறுத்துக்கொண்டு இப் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்குதல் ஆகும்.

பொருளாதார யுத்தத்தை வெற்றி கொள்வதற்கும் அதன் பின்னர் அபிவிருத்தியடைந்த பொருளாதாரம் ஒன்றை எமது நாட்டில் உருவாக்குவதற்கும் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் சமாதானமும் முக்கியமானதாகும்.

இம்முறை எவ்வாறாயினும் அரசியல் தீர்வுக்கான முயற்சியை வெற்றியடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்காக உங்கள் அனைவரினதும் (நாடாளுமன்ற உறுப்பினர்கள்) ஒத்துழைப்பையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

வடக்கு – கிழக்கு யுத்தம் முழு நாட்டையும் பாதித்தது. பல பிரதேசங்களுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது. வடக்கு மாகாணம் முழுமையாகவும், கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் பல பிரதேசங்களும் யுத்தம் காரணமாக பாரிய துன்பங்களை அனுபவித்தன. இப்பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு செயற்படுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்வோம். அப்பிரதேசங்களுக்கான விசேட திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவோம்” – என்றார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்