டெல்லியில் தெரு நாய்களை அகற்ற உத்தரவு
இந்தியா – டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. வீதிகளில் நடந்து செல்பவர்களும், மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களும் தெரு நாய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இந்சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்துத் தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன், தெருநாய்க்கடியால் பறிபோன குழந்தைகளின் உயிர்களை விலங்கு நல ஆர்வலர்கள் திருப்பிக் கொண்டு வருவார்களா? டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கும் நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விலங்கு நல ஆர்வலர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு நல ஆர்வலர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை டெல்லி பொலிஸார் கைது செய்தனர்.
ராகுல் காந்தி
இந்நிலையில், டெல்லி தெருக்களில் இருந்து நாய்களை அகற்றுவது மனிதாபிமான செயல் கிடையாது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “டெல்லியில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, பல தசாப்தங்களாக மனிதாபிமான, அறிவியல் முறையுடன் உருவாக்கப்பட்ட நமது கொள்கையிலிருந்து ஒரு படி பின்வாங்குவதாகும்.
இந்த வாயற்ற ஜீவன்கள் அழிக்கப்பட வேண்டிய “பிரச்சினைகள்” அல்ல. நாய்களை கொடுமைப்படுத்தாமல் அவைகளுக்கான தங்குமிடங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகிவற்றின் மூலம் தெருக்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்
நாய்களை தெருவில் இருந்து அகற்றுவது கொடூரமானது, இரக்கமற்றது, குறுகிய பார்வை கொண்டது. பொதுமக்களின் பாதுகாப்பும் விலங்குகளின் நலனும் பாதுக்கப்படுவதை நாம் உறுதிசெய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
மேனகா காந்தி
மேலும், இது குறித்து பேசிய விலங்கு நல ஆர்வலரும் பாஜக முன்னாள் எம்.பி.யுமான மேனகா காந்தி,
“டெல்லியில் இலட்சக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன. அனைத்து வசதிகளுடன் காப்பகம் உருவாக்க ரூ.15,000 கோடி தேவைப்படும். அதற்கு சாப்பாடு போட வாரம் ரூ.5 கோடி வேண்டும். இது சாத்தியமா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
“நாய் கடித்து சிறுமி உயிரிழந்ததாக ஏதோ ஒரு போலிச் செய்தியை வைத்து, உச்ச நீதிமன்றம் கோபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெருவில் இருந்து நாய்களை எல்லாம் அகற்றி விட்டால், அடுத்து குரங்குகள் வரும். அப்போது என்ன செய்வீர்கள்?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, நீதிமன்றத்தின் மேற்படி உத்தரவை டெல்லி வாழ் பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
