உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை உருவாக்கும் நோக்கில், டுபாயின் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் (Al Maktoum International Airport) பிரம்மாண்ட விரிவாக்கப் பணிகளை, டுபாய் அரசு விரைவுபடுத்தியுள்ளது.
128 பில்லியன் திர்ஹாம் (35 பில்லியன் அமெரிக்க டொலர்) மதிப்பிலான இந்தத் திட்டம், டுபாயை உலகின் முதன்மையான விமானப் போக்குவரத்து மையமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமான நிலையம் முழுமையாக கட்டி முடிக்கப்படும்போது, ஆண்டுக்கு சுமார் 260 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இது தற்போதுள்ள டுபாய் சர்வதேச விமான நிலையத்தை (DXB) விட ஐந்து மடங்கு பெரியதாகும்.
சுமார் 70 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த வளாகத்தில், 05 இணையான ஓடுபாதைகள், 400க்கும் மேற்பட்ட விமான நிறுத்தங்கள் மற்றும் பயணிகளை ஒரு முனையத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்ல 14 நிலையங்களைக் கொண்ட தானியங்கி ரயில் சேவை வசதிகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மேம்படுத்தப்பட்ட பயணிகளின் அனுபவம் மற்றும் அதிநவீன பயோமெட்ரிக் சோதனைகளும் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்த மெகா திட்டத்தின் முதல் கட்டம் 2032ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வேளை, ஆண்டுக்கு 150 மில்லியன் பயணிகளைக் கையாளும் வசதியுடன் இது செயல்படத் தொடங்கும்.
அதனைத் தொடர்ந்து, தற்போதுள்ள டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் படிப்படியாக இங்கு மாற்றப்படும்.
உலகின் முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் (Emirates), தனது ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் ஒரே கட்டமாக அல் மக்தூம் விமான நிலையத்துக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதற்காக 5.1 பில்லியன் டொலர் மதிப்பிலான பொறியியல் மற்றும் பராமரிப்பு வளாகத்தை டுபாய் சவுத் பகுதியில் அந்நிறுவனம் ஏற்கெனவே கட்டி வருகின்றது.
இந்த விமான நிலையத்துக்கு பயணிகள் செல்வதற்காக ‘மெட்ரோ கோல்ட் லைன்’ (Metro Gold Line) மற்றும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இணைக்கப்படவுள்ளன. மேலும், எதிர்காலத்தில் பறக்கும் டாக்ஸிகள் (Flying Taxis) மூலம் பயணிகள் நகரின் மையப்பகுதிக்குச் செல்லும் வசதியும் இதில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெறும் விமான நிலையத்துடன் நின்றுவிடாமல், ஒரு ‘ஏரோட்ரோபோலிஸ்’ (Aerotropolis) எனப்படும் விமான நிலையத்தை மையமாகக் கொண்ட நகரமாக உருவாக்கப்படுகிறது. இங்கு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் அமையவுள்ளன.
இது டுபாயின் பொருளாதாரத்தை எண்ணெய் வருவாயைச் சாராமல், போக்குவரத்து மற்றும் சுற்றுலா மூலம் மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
சவூதி அரேபியாவின் கிங் சல்மான் சர்வதேச விமான நிலையத் திட்டத்துக்குப் போட்டியாக, டுபாயின் இந்த முயற்சி வளைகுடா பிராந்தியத்தில் விமானப் போக்குவரத்துப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
