செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல் உபாதையினால் தற்காலிக ஓய்வு

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல் உபாதையினால் தற்காலிக ஓய்வு

1 minutes read

காலி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை ஆரம்பமான இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் தேவ்டத் படிக்கல் குவித்த கன்னிச் சதம் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது.

இந்திய டெஸ்ட் அணியில் புதிய 3ஆம் இலக்க வீரராக களம் இறங்கிய தேவ்டத் படிக்கல் தனது 3ஆவது டெஸ்டில் கன்னிச் சதத்தைக் குவித்து அசத்தினார்.

மழையால் இரண்டு தடவைகள் தடைப்பட்டு மீண்டும் தொடர்ந்த முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா அதன் முதலாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 282 ஓட்டங்களைக் குவித்து பலமான நிலையில் இருக்கின்றது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் 1932இல் டெஸ்ட் அறிமுகம் பெற்ற இந்தியா, தனது 600ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிவருகின்றமை விசேட அம்சமாகும்.

மேலும் 149 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 600 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்த மூன்றாவது நாடு இந்தியாவாகும்.

டெஸ்ட் கிரிக்கெட்டை 1877இல் ஆரம்பித்து வைத்த இங்கிலாந்து (1097 டெஸ்ட்கள்) மற்றும் அவுஸ்திரேலியா (883 டெஸ்டகள்) ஆகியனவே 600 டெஸ்ட்களைப் பூர்த்திசெய்த மற்றைய இரண்டு நாடுகளாகும்.

இந்த டெஸ்டுக்கான இலங்கை அணியில் சுழல்பந்துவீச்சாளர் கேஷர நுவன்த அறிமுக வீரராக இடம்பெறுகிறார்.

மொத்த எண்ணிக்கை 47 ஓட்டங்களாக இருந்தபோது இந்தியாவின் ஆரம்ப வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் 32 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து கே.எல். ராகுல், தேவ்டத் படிக்கல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 150 ஓட்டங்களைக் பகிர்ந்திருந்தபோது ராகுலின் பாதங்களில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு மற்றும் வலது கையில் ஏற்பட்ட உபாதை காரணமாக தொடர்ந்து துடுப்பெடுத்தாட முடியாமல் தற்காலிக ஓய்வு பெற்றார்.

ராகுல் ஓய்வுபெற்றபோது 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அவர் நாளைய தினம் துடுப்பெடுத்தாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து களம் நுழைந்த அணித் தலைவர் ஷுப்மான் கில் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தேவ்டத் படிக்கல், ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தடைப்பட்டு பின்னர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

தேவ்டத் படிக்கல் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 131 ஓட்டங்களுடனும் ரிஷாப் பான்ட் 27 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 77 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளார்.

இந்த டெஸ்ட் போட்டி இன்றைய தினம் பெய்த மழை காரணமாக இரண்டு தடவைகள் தடைப்பட்டது. பகல் போசன இடைவேளையுடன் ஒரு தடவை தடைப்பட்ட போட்டி 2 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து பிற்பகல் 5.00 மணியளவில் சொற்ப நேரம் மழை பெய்ததால் ஆட்டம் இரண்டாவது தடவையாக 15 நிமிடங்கள் தடைப்பட்டது.

இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.