பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தீர்ப்பதற்காக, சுமார் 16.68 பில்லியன் அமெரிக்க டொலர் வரை இழப்பீடு வழங்கவும், தமது தளங்களில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
குழந்தைகளை தங்களது சமூக வலைத்தளங்களுக்கு அதிகளவில் அடிமையாக்கும் வகையில் தளங்களை வடிவமைத்ததாகவும், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் நுகர்வோரை தவறாக வழிநடத்தியதாகவும், சிறார்களின் தனிப்பட்ட தரவுகளை முறையற்ற வகையில் சேகரித்ததாகவும் மெட்டா மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த உடன்படிக்கையின் மூலம் அமெரிக்காவின் 29 மாநிலங்கள் தொடர்ந்த வழக்குகள் முடிவுக்கு வருவதுடன், சமூக ஊடகங்கள் இளம் பயனர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் தொடர்பான முக்கிய கூட்டாட்சி விசாரணையும் நிறைவுக்கு வந்துள்ளது.
உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் குழந்தைகளுக்கான தினசரி பயன்பாட்டு வரம்புகள் அறிமுகப்படுத்தப்படுவதுடன், இரவு நேரங்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
மேலும், வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்ட உள்ளடக்கங்களை குழந்தைகள் அணுகுவதைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளன.
கலிபோர்னியாவின் மென்லோ பார்க்கை தலைமையகமாகக் கொண்ட மெட்டா நிறுவனம் இந்த உடன்படிக்கைக்கு இணங்கியுள்ள போதிலும், தங்களது தரப்பில் எந்தவித தவறும் இடம்பெறவில்லை என மறுத்துள்ளது.
இதனிடையே, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரம் தொடர்பில் கலிபோர்னியா, இலினாய்ஸ், நியூ மெக்சிகோ மற்றும் வாஷிங்டன் டி.சி. ஆகிய நான்கு பகுதிகள் தொடர்ந்த தனியுரிமை வழக்குகளும் இந்த உடன்படிக்கையின் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. இதற்காக அந்த நான்கு பகுதிகளுக்கும் இணைந்து 459.3 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஆரம்பகட்ட வர்த்தகத்தில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் சுமார் 2.3 சதவீதம் உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் இளைஞர்களிடையே ஏற்பட்டுவரும் மனநல நெருக்கடிக்கு பங்களிப்பதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்காவின் மாநில அரசுகள், உள்ளூராட்சி அமைப்புகள், பாடசாலை மாவட்டங்கள் மற்றும் தனிநபர்களால் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளின் பரந்த தொடரின் ஒரு பகுதியாகவே தற்போதைய உடன்படிக்கையும் அமைந்துள்ளது.
கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் நடைபெற்ற கூட்டாட்சி விசாரணையில், கலிபோர்னியா, கொலராடோ, கென்டக்கி மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள் மெட்டா நிறுவனம் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டியிருந்தன.
மேலும், பெற்றோரின் அனுமதியின்றி குழந்தைகளின் தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து, அவற்றை மெஷின் லேர்னிங் மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ மாதிரிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தியதாகவும், இதன் மூலம் கூட்டாட்சி குழந்தைகள் தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டமான COPPA விதிகளை மீறியதாகவும் 29 மாநிலங்கள் குற்றம் சாட்டியிருந்தன.
எனினும், ‘சமூக ஊடக அடிமைத்தனம்’ என்பது மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனநலப் பாதிப்பு அல்ல என்பதால், தாங்கள் நுகர்வோரை தவறாக வழிநடத்தவில்லை என மெட்டா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18ஆம் திகதி விசாரணை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, குறித்த நான்கு மாநிலங்களும் தங்களுக்கு 1.4 டிரில்லியன் அமெரிக்க டொலர் வரை அபராதம் விதிக்க வேண்டும் எனக் கோரியதாக மெட்டா தெரிவித்திருந்தது. எனினும், மாநிலங்கள் இந்தத் தொகை சுமார் 200 பில்லியன் டொலர் வரை இருக்கும் என தெரிவித்திருந்தன.
இதனிடையே, மெட்டா மட்டுமன்றி ஸ்னாப், கூகுளின் ஆல்பாபெட் நிறுவனத்துக்குச் சொந்தமான யூடியூப் மற்றும் பைட் டான்ஸுக்குச் சொந்தமான டிக்டொக் ஆகிய நிறுவனங்களும் குழந்தைகளை அதிகளவில் ஈர்த்து அடிமையாக்கும் வகையில் தங்களது தளங்களை வடிவமைத்ததாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த கூட்டாட்சி வழக்குகள் அனைத்தும் ஓக்லாந்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிபதி யுவோன் கோன்சலஸ் ரோஜர்ஸ் முன்னிலையில் ஒருங்கிணைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன.