காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘பிலாங்கிங்’ (Belonging), எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி ஹார்பர்காலின்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.
இப்புத்தகத்தில் சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், திருமணம், ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் அவரது அரசியல் பிரவேசம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக, இந்நூலை வெளியிடவிருந்த ‘பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா’ நிறுவனம் இதிலிருந்து பின்வாங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சீன ஆக்கிரமிப்புத் தொடர்பான பகுதிகளை நீக்குமாறு அரசு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், இது ஜனநாயகப் படுகொலை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, இது சுயசரிதையா அல்லது புனைக்கதையா என்பதைப் பதிப்பகமே முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
அதேவேளை, பதிப்பகத் திருத்தப் பணியின் போது குறிப்பிட்ட ஒரு விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், சோனியா காந்தி தரப்பே ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டதாகப் பென்குயின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மேலும், ஒப்பந்த விதிகள் மற்றும் ஆசிரியரின் ரகசியத்தைக் காக்கும் கடப்பாடு காரணமாக இந்த முரண்பாட்டிற்கான துல்லியமான காரணங்களை வெளிப்படுத்த முடியாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.