மலையாள சினிமா வரலாற்றில் பல சாதனைகளை நிகழ்த்திய படம் த்ரிஷ்யம்.
மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார். விரைவிலேயே இப்படத்தை கமல் நடிப்பில் தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். சமீபத்தில் இதற்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. மீனா கேரக்டரில் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் சிம்ரன் பெயர் அடிப்பட்டது. இறுதியில் கவுதமி தேர்வாகியுள்ளார். மலையாளத்தில் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்தான் தமிழிலும் இயக்குகிறார்.
இந்நிலையில் தற்போது படத்திற்கு ‘பாபநாசம்’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்தக் கதை முழுக்க திருநெல்வேலியை மையமாகக் கொண்டு நிகழ்வது போல மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்தப் படத்தில் கமல் ஹாஸன் நெல்லைத் தமிழில் பேசி நடிக்கிறார். இதற்கு முன்பு தனது படங்களில் சென்னைத் தமிழ், கொங்கு தமிழ், யாழ்ப்பாணத் தமிழ் என பேசிய அசத்திய கமல் இதில் முதன் முறையாக நெல்லைத் தமிழ் பேசுகிறார்.
மேலும் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் அனைவருமே நெல்லைத் தமிழ் பேசப் போகிறார்களாம். படப்பிடிப்பு இந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்குகிறது. திருநெல்வேலி, குற்றாலம், பாபநாசம் ஆகிய பகுதிகளில் இந்தப் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். மலையாளத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஹிட் அடித்த ‘த்ரிஷ்யம்’ தமிழிலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.