Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு | காரணம் தெரிய வேண்டுமா?

தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு | காரணம் தெரிய வேண்டுமா?

6 minutes read


இந்திய திரைத்துறையில்  முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ்.  இவருக்கும், நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். 

இந்நிலையில்  தற்பொழுது இருவரும் பிரிய உள்ளதாக சமூக வலைத்தளங்களின் வாயிலாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கூறியதாவது, “18 வருடங்கள் நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்பொழுது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

திரைத்துறையினர் விவாகரத்து என்றாலே,  ஆயிரமாயிரம் விமர்சனங்கள் எழும். தனிப்பட்ட நபர்களின விருப்பம் என்பதை உணராமல், தங்களுக்குத் தோன்றுவதை எழுதுபவர் அநேகர்.

இது குறித்து திரைப்பட மக்கள் தொடர்பாளரும், கவிஞருமான ஏ.ஜான், தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளது கவனத்தை ஈர்க்கிறது.

அவரது பதிவு:

“தனுஷ்- ஐஸ்வர்யா..

இவர்களின் பிரிவுக்கு எத்தனை கண், காது, மூக்கு வைத்து அவதூறு பொம்மை செய்யப் போகிறார்களோ தெரியவில்லை? !!

எப்படியும் ஒரு இலட்சம் காரணங்களையும், கும்மியடித்தலையும், கேரெக்டர் அசாஸினேசன்களையும் பார்க்க இருக்கிறோம் வரும் நாட்களில்…

அவ்வளவு சைக்கோபாத்துகள் கிளம்புவார்கள் பாருங்கள்..

நாக சைதன்யா- சமந்தா பிரிந்த போது கிட்டத்தட்ட ஒருமாதம் அந்த செய்தி எல்லாத் தளங்களிலும் ஆளுக்கொரு கோணமாக கூத்தடிக்கப்பட்டது.

அவர்கள் பிரிந்ததற்கான காரணமும், சூழலும் தந்த மன அயற்சியை விட, இவர்கள் கற்பித்த காரணங்களே இன்னும் அதிக பயத்தையும், வலியையும் ஏற்படுத்தியிருக்கும் அவர்களுக்கு.

அவ்வளவு எடுத்தாள்தலைப் பார்த்தேன். ஆளுக்கொரு தகவலைப் பற்ற வைத்துக்கொண்டே இருந்தார்கள்.

அது அடங்குவதற்குள் அடுத்த அலையாக, அவலாக இப்போது தனுஷும், ஐஸ்வர்யாவும் கிடைத்திருக்கிறார்கள்.

மெல்லத் தொடங்கு முன் சிலவற்றை சொல்லி வைப்போம்.

ஒருத்தருக்கொருத்தர் பிடித்து சேர்ந்து வாழ்வது போல, இன்னொரு புள்ளியில் பிரிந்து போதலும் சாதாரணம்.

பிரிந்து போதலை ஏன் கொடூரமாக காட்டி, அதைக் கொண்டாடுகிறார்கள் நம் மனிதர்கள்..?

ஏனெனில் அதில் ஒரு சமூக சைக்காலஜி ஒளிந்துகொண்டிருக்கிறது.

சமூகமாக சேர்ந்து கட்டிக் காப்பாற்றி வரும் கலாச்சாரம், கற்பு, அடிமைத்தனம், ஆண்மையின் பெருமை இத்யாதிகள் எல்லாம் மறைமுகமாகக் கூடாரம் போட்டிருக்கிறது.

பிரிதல் மூலம் இதெல்லாம் உடைந்துவிடுமோ என்ற பயத்தில் வார்த்தைகளால் வலிக்க அடித்துப் பயத்தை ஏற்படுத்தத் துணிகிறார்கள்.

உடன் இருந்துகொண்டே, சகித்துக் கொண்டே குப்பைக் கொட்டி செத்துப் போய்விட்டால் அவர்கள் அகராதியில் சிறந்த தம்பதிகள்?

காதலில் விழுந்த போது, கொண்ட அதே தீவிர அன்பை திருமணமான பின், அல்லது குழந்தை குட்டிகள் பெற்றபின், அல்லது பத்திருபது ஆண்டுகள் கழித்தும் எத்தனை பேர் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?!

நூற்றுக்கு தொண்ணூற்றைந்து சதவீதம் இல்லையென்றே சொல்லலாம்.

சமூகத்துக்காக, குடும்பத்திற்காக, நண்பர்களுக்காக, பேச்சுக் குத்தலுக்காக, சுற்றத்திற்காக, இயலாமைக்காக, போலி கவுரவத்திற்காக இப்படி எத்தனையோ காரணங்களுக்காக பயந்து பயந்து நுகத்தில் பூட்டப்பட்ட அஃறிணையாகக் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர்?!

“பிரிதல் இலகு இல்லை இந்த சமூகத்தில்.”

அதனால் கசப்புச் சுவை நாவின் வழியாக நரம்புகள் முழுக்கப் பரவப் பரவ…

இறுகிப்போன மனதை சுமந்துகொண்டே, “நல்லா இருக்கிறோம்” என யாரோ சம்பந்தமில்லாதவர்களுக்கெல்லாம் நிரூபித்துக்கொண்டே, மரணத்தை நோக்கி ஓடுகிறோம்.

வாழ்ந்தோமா? செத்தோமா? இந்த வாழ்க்கையில் என்று பார்த்தால் பாதி நாட்கள் செத்தேதான் கிடந்திருப்போம்…

இது என்ன புதிதாக ஒரு மரணம் என எளிதாக, சுருக்கிக்கொண்ட வாழ்க்கையைத் தழுவிப்போன எத்தனையோ தம்பதிகள்??!

மரண வாசலில் தம்பதிகள் பிரிதலைத் தீர்மானித்துக் கொள்வதைத் தவிர்க்க வாழும் நாட்களிலேயே அவர்களின்

“பிரிதலை எளிதாக்குவதும் இங்கு அவசியம்… “

அய்யய்யோ பிரிதல் எளிதானால் பல குடும்பங்கள் பிரிந்துவிடுமே?? குடும்பம் என்னாவது? கலாச்சாரம் என்னாவது? எனக் கத்துபவர்களுக்கு ஒரே பதில்தான்.

“மரணத்திற்குள், மனதிற்குப் பிடித்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போவார்கள் மனிதர்கள்.” அவ்வளவுதான். வேறொன்றும் கெட்டுப் போகாது.

அதற்காக பிரியாமல் வாழ்பவர்களைப் பிரியுங்கள் எனச் சொல்லவில்லை. மகிழ்ச்சியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் அன்பும் வாழ்த்துகளும் சொல்லிக் கொண்டே இருக்கலாம் நாம்.

நாகசைதன்யா  சமந்தா

கசப்பு ஏற்பட்ட பின்னும் கண்துடைப்பிற்காக ஒரே வீட்டில் எத்தனை காலம் யாருக்கும் தெரியாமல், மற்றவர்களுக்காக ஒன்றாக இருப்பது போல நடித்துக்கொண்டே பிரிந்தே கிடப்பது??!

பிரிந்தவர்களின் பின்னால் ஆயிரம் காரணங்கள் இருக்கும். அல்லது உப்புச் சப்பற்ற ஒரே ஒரு காரணம் கூட இருக்கும்.

அந்தக் காரணம் நமக்கு அவசியம் இல்லை. பிரியலாம் என்ற அவர்களின் எண்ணமும், முடிவும் மட்டுமே நம்மால் மதிக்கப்பட வேண்டியது.

பல விவாகரத்துகளில் குசு விடுதல், வாய் நாறுதல், குறட்டை விடுதல் கூட காரணமாக சொல்லப்பட்டிருக்கு.

பிரிதலுக்கு காரணமாக எது என்ன மண்ணாங்கட்டியாக இருந்தால் நமக்கென்ன??!

அதைப் பேச நமக்கென்ன அவசியம்??!

காதலைப் போற்றுதல் போல… பிரிதலையும் போற்றுங்கள் எனச் சொல்ல வரவில்லை.

ஒருத்தருக்கொருவர் புரிந்துகொண்டு எடுக்கும் அனைத்து பரஸ்பர முடிவையும் மதியுங்கள்,

அதை வெவ்வேறு காரணமாகக் கதைகட்டி கொச்சைப் படுத்தாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.

ஒருவரைக் கொச்சைப்படுத்த ஆரம்பிக்கும் முன் உங்கள் மனைவியிடம் உங்கள் உறவும், காதலும் எப்படிப் பட்டதாக இருக்கிறது என மனதிற்குள் ஒருமுறை படமோட்டிக்கொள்ளுங்கள்.

நாளை மகனோ, மகளோ பிடிக்கவில்லை… பிரிகிறோம் என்றால் காதுகொடுங்கள்.

அய்யய்யோ அவன் என்ன நினைப்பான்? இவன் என்ன நினைப்பான்? எனக் கதறாதீர்கள்.

பிரிதல்தான் கட்டப்பட்ட சிறகுகளுக்குத் தரப்படும் விடுதலை என அவர்கள் உணர்ந்தால் அக்கயிற்றை அறுக்க உதவுங்கள்.

மேலும் ஒரு வடத்தைச் சுற்றி இறுக்கக் கட்டி வைக்காதீர்கள். அப்படி செய்வதால்தான் பல வாழ்க்கைகள் தற்சாவில் முடிகின்றன.

“பிரிந்து பறக்கும் வானத்தில் சுதந்திரம் உண்டென்றால், அதை அவர்களுக்கு வலியின்றி பரிசளியுங்கள்.”

காலத்தினால் சிலர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆறுதலாக இருங்கள். அவர்களை வார்த்தைகளால் இட்டுக்கட்டி அசிங்கப்படுத்தாதீர்கள்.

தம்பதிகளின் பிரிவை ஒரு தகவலாக மட்டும் கடத்திவிட்டு அமைதியாகுங்கள் நண்பர்களே.

தனுஷும்- ஐஸ்வர்யாவும் மேற்கொள்ள இருக்கும் தங்கள் வாழ்க்கையின் அடுத்த தேடலுக்கும் புதிய தொடக்கங்களுக்கும் எனது வாழ்த்துகள்!

காயங்கள் ஆறட்டும்.

அன்பும், நேசமும் நண்பர்களே!” – என்று ஏ.ஜான் பதிவிட்டு உள்ளார்.

(முகப்பு படம்தனுேஷ்  ஐஸ்வர்யா)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More