கேப்டன் | திரைவிமர்சனம்

கதைக்களம்

அரசாங்கத்தின் கட்டளையை ஏற்று ஆபத்தான பகுதிக்கு செல்லும் இராணுவத்தினர் உயிர் தப்பினார்களா? இல்லையா? என்பது குறித்த கதை.

விமர்சனம்

இந்திய ராணுவத்தில் சிறப்புப் பிரிவில் ஒரு குழுவினருக்கு கேப்டனாக இருக்கிறார் ஆர்யா. அவர்களுக்கு ஒரு ரகசிய அசைன்மெண்ட் கொடுக்கப்படுகிறது.

சீனா, திபெத் எல்லைப்பகுதிகள் ஒன்று சேரும் இடத்தில் மனிதர்கள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதியில் மனிதர்கள் வசிக்கக்கூடிய இடமாக மாற்ற, முதற்கட்ட நடவடிக்கையை எடுக்க அந்த வனப்பகுதிக்குள் அனுப்பப்படுகிறார்கள்.

ஆனால் இதற்கு முன் அங்கு சென்ற ராணுவத்தினர் யாரும் உயிரோடு திரும்பியதில்லை. இந்த நிலையில்தான் ஆர்யா தலைமையில ஒரு குழு அங்கு செல்கிறது. இவர்கள் மீண்டும் திரும்பி வந்தார்களா? இல்லையா? என்பதை படத்தின் மீதிக்கதை.

திகிலுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி சவுந்திரராஜன். ஆர்யா ராணுவ உடையில் கம்பீரமாகத்தான் இருக்கிறார். அவரது குழுவில் கோகுல், ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, பரத் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

அவர்களின் பயிற்சியும், வனத்திற்குள் சென்று அமானுஷ்ய விலங்கை சந்திப்பதும் திகிலுடன் காட்டப்பட்டிருக்கிறது. அந்த விலங்கின் உமிழ் நீர் பட்டவர்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உடன் இருந்தவர்களை சுட்டுக் கொல்வதும் பிறகு தங்களை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதும் இதய துடிப்பை அதிகரிக்க வைக்கிறது.

தன் குழுவில் இருந்த ஹரீஷ் உத்தமன் பெயருக்கு நேர்ந்த களங்கத்தை துடைக்க உயர் அதிகாரிகளுடன் மோதுகிறார். டாக்டர் கீர்த்தியாக சிம்ரன் மேக்கப் இல்லாமல் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அந்த வினோத விலங்கும் அதன் பின்னணியும் படத்தில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது.

அதை வழிநடத்தும் சிக்ரெட் சிலந்தியும் அதன் தோற்றமும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த விலங்கை விரட்டும் பணியில் சிம்ரனுக்கு இருக்கும் இரட்டைத்–தன்மைதான் படத்தில் சஸ்பென்ஸ்.

அந்த விலங்குகள் எங்கிருந்து வருகின்றன. அவை எதற்காக மனிதர்களை தாக்குகின்றன என்பதையெல்லாம் இரண்டாம் பாதியில் இயக்குனர் விளக்கி இருக்கிறார். திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாதது வருத்தம். லாஜிக் மீரல்களை தவிர்த்து இருக்கலாம்.

ஐஸ்வர்யா லட்சுமி ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள காத்திருந்தாலும் அவருக்கும் ஒரு சஸ்பென்ஸ் வைத்திருப்பது சிறப்பு. யுவராஜ் ஒளிப்பதிவில் காடுகளை அழகாகக்காட்டியிருக்கிறார். டி.இமான் இசையில் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘கேப்டன்’ திறமை குறைவு.

ஆசிரியர்