March 31, 2023 7:07 am

ராஜா மகள் | திரைவிமர்சனம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தயாரிப்பு: மூன் வாக் பிக்சர்ஸ்

நடிகர்கள்: ‘ஆடுகளம்’ முருகதாஸ், வெலினா, பக்ஸ்  என்ற பகவதி பெருமாள், பிரதிக்ஷா மற்றும் பலர்.

இயக்கம்: ஹென்றி. ஐ

மதிப்பீடு: 2/5

கதை: தனது மகளின் ஆசையை நிறைவேற்ற விரும்பும் அன்பான தந்தையின் செயலைப் பற்றியது…

நகரில் சிறிய அளவில் செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடையை நடத்தி வருகிறார் ‘ஆடுகளம்’ முருகதாஸ். இவர் தன்னுடைய மகள் பிரதிக்ஷா மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்.

அவள் கேட்கும் சின்ன சின்ன விடயங்களை உடனடியாக பூர்த்தி செய்து.., எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். இதனால் அவரது மகள் பிரதிக்ஷா, தான் எது கேட்டாலும் தந்தை இல்லை என்று சொல்லாமல் வாங்கித் தருவார் என உறுதியாக நம்ப தொடங்குகிறார்.

இந்நிலையில் பாடசாலையில் உடன் பயிலும் சக மாணவனின் பிறந்தநாள் விருந்திற்காக செல்லும் பிரதிக்ஷா, அந்த மாணவனின் பிரம்மாண்டமான மாளிகையை பார்த்து வியக்கிறார்.

தனது தந்தையிடம் எமக்கும் அதே போன்றதொரு வீடு வேண்டும் என கேட்கிறாள். வாங்கித் தருவதாக வாக்குறுதி தருகிறார். வாடகை வீட்டில் வசிக்கும் தந்தையால் மகளின் ‘பிரம்மாண்டமான வீடு’ ஆசையை பூர்த்தி செய்ய முடிந்ததா? இல்லையா? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை.

குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்த முருகதாஸ், இந்த திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக உயர்ந்திருக்கிறார். மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் போதும்.., மனைவியுடன் ஆணாதிக்க மற்றும் காதல் கலந்த பார்வையை பார்க்கும் போதும்… தனது பெற்றோர்களுடன் உரையாடும்போது பணிவு கலந்த நடிப்பும்… சிறந்த நடிகர் என நிரூபிக்கிறார்.

மகளின் வீடு தொடர்பான ஆசைக்காக தந்தையானவர்.. வாழ்க்கையின் அறத்தை விடுத்து, தவறான பாதையில் சென்று சம்பாதிக்கலாம் எனும் காட்சியை திரைக்கதையில் இடம்பெற வைத்திருப்பது.. இயக்குரின் சமூக பொறுப்பற்ற எண்ணத்தை பிரதிபலிக்கிறது.

பெண் பிள்ளையை மட்டுமல்ல ஆண் பிள்ளையை வளர்க்கும் எந்த தந்தையும் சிந்திக்காத ஒரு விடயம். இதனை தவிர்த்திருக்கலாம். குழந்தைகளின் ஆசை நீர்க்குமிழி போன்றது இதனை பெற்றோர்கள் தான் பக்குவமாக எடுத்துரைக்க வேண்டும். குழந்தைகளின் மீதான பாசத்தை.. அவர்கள் கேட்கும் விடயங்களை பூர்த்தி செய்வதன் ஊடாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

தந்தை – மகள் இடையேயான உறவை உணர்வுபூர்வமாகவும், நேர்த்தியாகவும் விவரிக்க நினைத்த இயக்குநர்.. தந்தையின் பொருளாதார சக்தியை விட கூடுதலாக அவரது மகளின் ஆசையை வடிவமைத்தது தான் திரைக்கதையின் பலமாகவும், பலவீனமாகவும் அமைந்திருக்கிறது.

சிறுமி பிரதிக்ஷாவின் நடிப்பு அபாரம். அவரது தாயாக நடித்திருக்கும் நடிகை வெலினாவின் நடிப்பும் பரவாயில்லை. ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, பின்னணி இசை, கலை இயக்கம் அனைத்தும் படைப்பின் அடிப்படை தரத்திற்கும் சற்று மேலே இருக்கிறது.

ராஜா மகள் – கோமாளி.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்